
அத்தியாயம் 32
ஆறு மாதங்கள் கடந்திருந்தன. குளிரின் கடைசி நிழல்கள் விலகி நின்று கோடையை எதிர்பார்த்திருக்க, நகரம் மெதுவாக வியர்க்கத் தொடங்கியிருந்தது. அம்ருதா தன் பயிற்சி நாட்களின் கடைசி கட்டத்திற்குள் நுழைந்திருந்தாள்.
அன்று அஸ்வத்தை சிவன் கோவிலுக்கு அழைத்திருந்தாள் அம்ருதா.
“அங்கேயே தான் வரணுமா?” அங்கேதானே சுயம் மறந்து அவள் கழுத்தை இறுக்கினான்?
“எனக்கு அங்கேதான் ராசி!”
“அம்மு…”
“பழசை மறந்துட்டு வாங்க அஸ்வத்!” குழையும் குரல் அவனை அடிபணியச் செய்தது.
எதுவும் மாறியிருக்கவில்லை!
ஸ்கார்பியோகாரன் அஸ்வத் மீதான அம்ருதாவின் அதே அடர்ந்த காதல்; தன்னை ஏன் இந்தப் பெண் ஈர்த்திழுக்கிறாள் என்று புரியாமலேயே அவள் காதலில் வளைந்து குழையும் அஸ்வத்; அவனுக்கு தன் தங்கையைத் தரவே மாட்டேனென கண்களில் தீக்கங்கைக் காட்டும் ஹரிஷ் என எதுவும் மாறியிருக்கவில்லை.
சட்ட விரோத மருந்து ஆராய்ச்சி வழக்கில், அக்குழுவின் தலைவர் பத்ரிநாத் இன்னும் தனது தண்டனைக் காலத்தை அனுபவிக்கிறார். சத்யநாதன் மரித்ததும், அவரின் மகிழுந்தை இடித்துத் தள்ளிய ‘தார்’ சென்ற வழித்தடம் தெரியவில்லை என்றும், சத்யநாதனின் விரோதிகள் விசாரிக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, அதற்கு எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பையும் கைகலப்பையும் சந்தித்து… கடைசியில் வழக்கு வலுவிழந்து காவல்துறை வழக்கை மூடியதையும் தவிர, வேறெதுவும் மாறியிருக்கவில்லை.
ஆம், இந்த ஆறு மாதங்களில் சத்யநாதனின் விபத்து தொடர்பான கோப்புகள் மூடப்பட்டு தூசு படிய ஆரம்பித்துவிட்டன. செய்தியும் மக்களின் சிந்தனையும் மடைமாறிவிட்டன. ஒரு ‘தார்’ மட்டும் தீர்க்கமான மௌனத்தில்!
அன்று அம்ருதாவின் பிறந்தநாள் என்பதால், சிவன் - பார்வதி தம்பதி சமேதராய் அவளை ஆசிர்வதிக்க தன் நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள். அம்ருவும் தன் பெற்றோருடன் வந்துவிட, ஹரிஷ் ஸ்வேதாவுடன் தன் இரு சக்கர வாகனத்தில் வருவதாகச் சொல்லியிருந்தான்.
சிவன், பார்வதிக்கு பொழுது போகவில்லையாம்! அதனால் அஸ்வத், ஹரிஷை வைத்து நேரம் போக்க எண்ணி, தங்களுக்கு அபிஷேக, ஆலாபனைகள் நடத்திக்கொண்டு, பூ அலங்காரத்தில் புன்னகையோடு அமர்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.
உள்ளே அம்ருதா அம்மாவின் சொல்படி கடவுளர்களை வணங்கிவிட்டு, கொடி மரத்தினருகே வைக்கப்பட்டிருந்த விளக்கேற்றும் தாங்கியில், நெய்விட்டு விளக்கேற்றிக் கொண்டிருந்தாள்.
வெளியே ஸ்வேதாவுடன் வந்திறங்கிய ஹரிஷ், அம்பாளுக்கு மாலை வாங்க வேண்டி பூக்கடை முன்னால் போய் நிற்க, வண்டியிலிருந்து இறங்கி நின்ற ஸ்வேதாவின் பார்வையில் பட்டது, ஒரு பச்சை நிற ஸ்கார்பியோ என்!
பச்சை நிற ஸ்கார்பியோவைப் பார்க்க நேரும் போதெல்லாம் பழைய நினைவில் புன்னகைத்துக் கொள்வாள். தன்னிச்சையாக விழிகள் அதன் எண் பலகையில் படிவதும் வாடிக்கையாகிப் போயிற்று. இன்றும் அசுவாரஸ்யமாக அதன் எண்ணைப் பார்த்தவளின் விழிகள் பரபரப்புற்றது.
மகிழுந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மறுபக்கம் கதவைத் திறந்து இறங்கிய அஸ்வத்தைக் கண்டதும், அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். அன்று, தான் சொன்னதைப் போல ஸ்கார்பியோகாரன் கிழவனல்ல; அழகன் என்று தெரிந்ததும், கடையில் நின்ற ஹரிஷையும் மறந்து அம்ருவைத் தேடி உள்ளே ஓடினாள்.
அஸ்வத் அம்ருதாவை அழைப்பதற்கு அலைபேசியைக் கையில் எடுக்கையில், சரியாக மாலையை வாங்கிக்கொண்டு அவன்புறம் திரும்பினான் ஹரிஷ். அஸ்வத்தை அங்கே கண்டதும் கோபம் தலைக்கேறியது.
அஸ்வத் எப்போதும் அலுவலகம் செல்லும்போது நேர்த்தியாகத் தான் உடையணிந்திருப்பான். ஹரிஷ் அவன் வீட்டில் இருந்தபோதும், அம்ருதா காணாமல் போன நாளிலும் மட்டுமே அவனை இலகு உடையில் பார்த்திருக்கிறான். மற்றபடி எப்போதும் அவன் கம்பீரத்தை உயர்த்திக் காட்டும் உடைகளில்தான் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று அவன் உடையிலும் தோற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாகத் தோன்றியது.
காலையில் அம்ருதா அம்மாவைக் கொஞ்சிக் கொண்டு கிசுகிசுவென ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அம்மா அதிர்வதும் அதட்டுவதும் சிந்திப்பதுமாக இருந்ததை மேலே இருந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தான் ஹரிஷ். சாப்பிட அமரும்போது அப்பா அம்ருவின் பிறந்தநாள் பரிசாகத் தங்க நகை ஒன்றைத் தந்ததைத் தொடர்ந்து, சிவன், பார்வதியைப் பார்க்க வேண்டும் என்று ஸ்வேதா உட்பட அனைவரையும் காலையில் விடுப்பெடுக்கச் செய்திருந்தாள் இவன் தங்கை.
இப்போது அஸ்வத்தைப் புதிய உடையில் கண்டதும் இதுவும் அவள் வேலையாகத் தான் இருக்கக்கூடும் என்றும், அம்ரு தன்னிடம் சொல்லாமல் ஏதோ காய் நகர்த்துகிறாள் என்றும் புரிந்திட, அந்த எரிச்சல் அப்படியே எதிரிலிருந்தவன் மேல் பாய்ந்தது.
அஸ்வத்தும் அவனைப் பார்த்துவிட்டான். முன்பு அம்ருதா வேண்டாம் என்று ஒதுங்கிப் போக நினைத்தவன்தான்! ஆனால் ஒருநாள் அவள் தொலைந்து போனதிலேயே இவனின் ஆழ்மனம் புரிந்துவிட்டது. அவளல்லாமல் உயிர்த்திருக்க முடியாது என்று புரிந்தபோது, இனி எத்தனை ஹரிஷ் வந்தாலும் அவள் விரல்களை நழுவ விடுவதாயில்லை என்றும், அவளுக்கு ஆகச்சிறந்த வாழ்வினை தந்துவிடும் வல்லமை தன்னிடம் உண்டு என்றும் ஸ்திரப்பட்டிருந்தான்.
“சர் எங்கே மாப்பிள்ளை மாதிரி கிளம்பி வந்திருக்கீங்க?”
“மாப்பிள்ளை ஆகலாம்னுதான்!”
“தெரியாம தான் கேட்கறேன்… உங்களுக்கு இந்த வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லயா சர்? எத்தனை வாட்டி, எப்டியெல்லாம் சொல்றேன் என் தங்கச்சி பின்னாடி நாய் மாதிரி சுத்த வேணாம்னு?”
“மைண்ட் யோர் டங்க், சர்!”
“பேசுவேன்யா! என்ன பண்ணுவ? அன்னிக்கே சொன்னேன். ஏற்கனவே கல்யாணமாகி பிள்ளை பெத்த உனக்கு ரெண்டாந்தாரமா என் தங்கச்சியைத் தர எனக்கு விருப்பமில்லன்னு! உனக்கு கல்யாணமே ஆகலன்னா கூட அவளுக்கு நீ தகுதியானவனே இல்லைய்யா! ஷீ’ஸ் அவர் லிட்டில் ஏஞ்சல்! அவ எப்டி வாழ வேண்டியவ தெரியுமா?”
“என் கூடவும் அவ சந்தோஷமா இருப்பா சர்! உங்களுக்கு அவ ஏஞ்சல்! எனக்கு… எனக்கு… ஷீ’ஸ் மை ஹார்ட்பீட்… தி லைட் ஆஃப் மை லைஃப்… மை எவ்ரிதிங்! நான் நிச்சயமா அவளை நல்லவிதமா பார்த்துக்குவேன் ஹரிஷ்.” என்று ஒரு அடி முன்னால் வைத்து ஹரிஷ் கையைப் பற்ற வர,
அவனைத் தொட விடாமல் கையை விலக்கிக்கொண்டான் ஹரிஷ். “உன் லைஃப் இருட்டா கிடக்கறதைப் பத்தி நான் ஏன்யா கவலைப்படணும்? ஐ வார்ன் யூ, அஸ்வத்! என் அம்முக்குட்டியை மறந்துட்டு உன் வழியைப் பார்த்து போறதுதான் உனக்கு நல்லது.”
சினிமா வில்லனைப் போல் பேசுபவனைக் கண்டு இவனுக்கும் எரிச்சல் எழுந்தது. “ஸாரி மிஸ்டர் ஹரிஷ் நட்ராஜன்! நீங்க என்ன சொன்னாலும் என் அம்ருதாவை என்னால விட முடியாது.”
அவனின் உறுதியை அசைக்க முடியாத ஆத்திரத்தில் ஹரிஷின் நாக்கு பிறழ்ந்தது. “வார்த்தைக்கு வார்த்தை ஹரிஷ் நட்ராஜன்னு நக்கலடிக்கறியே… அஸ்வத்துக்கு பின்னாடி ஒரு பேரும் இல்லாத உனக்கு என் தங்கச்சியை நினைக்க என்ன அருகதை இருக்குது?”
“அண்ணா!!!”
பரம்பொருளின் பொழுதுபோக்கிற்கு நெய்விட்டு விளக்கேற்றிக் கொண்டிருந்தவளின் காதில் திடுமென வந்த ஸ்வேதா கிசுகிசுத்தாள். “ஏ அம்ரு! உனக்கு அந்த க்ரீன் ஸ்கார்பியோ ஞாபகம் இருக்குதா? எனக்கு அதோட நம்பர் கூட இன்னும் மறக்கல தெரியுமா? சொன்னா நம்ப மாட்ட! அதே காரை இப்போ நான் பார்த்தேன்.”
“ஹிஹி… க்ரீன் ஸ்கார்பியோவை நான் எப்டி மறப்பேன் அண்ணி?”
“அதானே! அந்த கார்க்காரனைப் பார்க்கணும்னு அன்னிக்கு ஏழு முழத்துக்கு மூஞ்சியைத் தூக்கி வச்சிருந்தியே… இப்போ பார்க்கலாம் வா!” என்று தன் மாமியார், மாமனாரிடம் மாலை வாங்கப் போவதாகச் சொல்லிவிட்டு அம்ருவை வெளியே அழைத்து வந்திருந்தாள் ஸ்வேதா. ஹரிஷின் அனர்த்தக் கேள்வியை அங்கே வந்த இரு பெண்களும் கேட்டிருந்தனர்.
ஹரிஷின் அந்தக் கேள்வியில் அஸ்வத் காயப்பட்டாலும், அதனைத் தூக்கி வைத்து கவலைப்படுமளவிற்கு அது அவனுக்கு புதிய காயமல்லவே! பிறந்ததிலிருந்து அனுபவிக்கும் அனாதைத்தனம் தானே! அதனால் அவன் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அக்கேள்வியில் அம்ருதா பெரிதாய்க் காயம்பட்டு துடித்தாள்.
அவளை அங்கே எதிர்பாராத அஸ்வத் எதுவுமே நடக்காததைப் போல் அவளருகே சென்று புன்னகை பூக்க, “ஹேப்பி பர்த்டே, டியர் அம்மு!” என்றிட,
கலங்கிச் சிவந்த விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் அவன். “ப்ச் விடு! அவர் எப்பவும் இப்டித்தானே? அவர் கோபம் குறைஞ்சதும் இன்னொரு நாள் வீட்ல வச்சு பேசலாம், சரியா? இட்’ஸ் யோர் டே! சந்தோஷமா இருக்கணும், ம்ம்?”
அவனைத் தள்ளிவிட்டு ஹரிஷின் முன் போய் நின்றாள். “என்ன சொன்ன அவரை?”
“அம்ருதா?” - ஸ்வேதா.
“ஐ லவ் ஹிம் அண்ணி. உங்க புருஷனுக்கு அது நல்லாவே தெரியும். அவனுக்கு பிடிக்கலன்னு வேணும்னே இப்டி பேசறான்.”
ஸ்வேதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உள்ளிருக்கும் பெரியவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம் வேறு! வார நாளின் காலை வேளை என்பதால் கூட்டமில்லை. ஆனாலும் சில ஆட்களின் நடமாட்டம் இருந்தது.
ஹரிஷுக்கும் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. அதைப் பற்றி கவலையில்லை என்றாலும், அதை தங்கைக் கேட்டுவிட்டதில் மேலும் அவளிடம், தான் இறங்கிப் போனதை எண்ணியே பொறுமலுடன் நின்றான்.
“நான் இல்லாம போனதுக்கு அப்புறம் அவருக்கு யாருமில்லைன்னு சொல்லிக்கோ! பட் நான் இருக்கற வரை…”
“அறைஞ்சு பல்லைக் கழட்டப்போறேன். பர்த்டே அதுவுமா கோயில்ல வச்சு என்ன பேசற? அப்டியென்ன அவன் உனக்கு முக்கியமா போயிட்டான்?”
தான் அங்கே நின்றால் இருவரின் கோபமும் வாதமும் வட்டிக்கடை கடனாய் அதிகரிக்கும் என்று புரிந்த அஸ்வத், அம்ருதாவின் கைப்பிடித்து கோவில் வாசல்புறம் திருப்பி விட்டான். “கூட கூட பேசாதே! போய் எனக்கும் சேர்த்து சாமி கும்பிடுவியாம்! உன் பேரண்ட்ஸ் கிட்ட இன்னொரு நாள் பேசறேன். இப்ப போ!”
தன் தங்கையிடம் அத்துணை உரிமையாகப் பேசுபவனைக் கண்டு நெஞ்சு எரிந்தது. அவனை அடிப்பதைப் போல் வந்தான் ஹரிஷ். “என்ன? என்ன பேச போற எங்க பேரண்ட்ஸ் கிட்ட? நான் யாரும் இல்லாத அனாதை. ஏற்கனவே கல்யாணமாகி பொண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப்போயிட்டா! அதனால இப்போ என் வாழ்க்கைல விளக்கேத்தி வைக்க உங்கப் பொண்ணை கட்டி தாங்கன்னு கேட்கப் போறியா?”
அம்ருதா அழுதாள். “அண்ணா, ஏன் இப்டி பேசற?”
“ஷ்ஷ்! அழக்கூடாதுன்னு சொன்னேன்ல?” என்ற அஸ்வத் அவள் பின் நின்ற ஸ்வேதாவிடம் கண்ணால் உள்ளே அழைத்துப் போகுமாறு கேட்டுக்கொண்டு, ஹரிஷை நிமிர்ந்தும் பார்க்காமல் திரும்பி நடந்துவிட்டான்.
என்ன தான் வலியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அஸ்வத்தின் முகம் கன்றிப்போனது. தான் அங்கே நின்றால் ஹரிஷின் கோபம் அதிகமாகும் என்றே எதுவும் பேசாமல் வந்தான். ஆனாலும் உள்ளே வலித்தது.
அவன் சொல்வது சரிதானே? இதோ! இப்போது வலிக்கிறது என்று சொல்வதற்கும் அவனுக்கு யாரும் இல்லைதானே? சுயகழிவிரக்கம் சுற்றி வளைத்து இதயம் நொறுக்க வந்தது. முயன்று அந்த வலியை விழி வழி கடத்தாமல் ஸ்கார்பியோவின் பூட்டை விடுவித்து கதவைத் திறந்தான்.
திடுமென இதயம் பூ விழுந்து பூகம்பம் வந்ததைப் போல் அதிர்ந்தது.
அம்ரு தான் அவனைப் பின்னிருந்து கட்டிக்கொண்டிருந்தாள். அவன் முதுகில் கன்னம் அழுந்தச் சொன்னாள். “நான்தான் இருக்கேன்ல? அப்புறம் எப்டி உங்களுக்கு யாருமில்லைன்னு சொல்லுவான் அவன்?”
மூர்ச்சையாகித் தான் போவோம் என்று நினைத்திருக்கையில், காதல் காற்று தந்து சுவாசப் பாதையை ஆசுவாசப்படுத்துகிறாள். அவன் இரு பக்க மார்பில் சட்டையை இறுக்கிக் கொண்டிருக்கும் உள்ளங்கைகளுக்குள் அஸ்வத்தின் அண்டம் இயங்கியது. பல நூறாய் மடித்து தன்னை சுருக்கிக் கொண்ட உள்ளத்தின் நுனியை, வெடுக்கெனப் பிடித்திழுத்து, விரித்துலர்த்தி, தன்னோடு போர்த்திக் கொள்ளும் அவளுக்கு, தன் காதல் குளிரால் கதகதப்பூட்டுவதே இவன் பிறவிக் கடனல்லவா!
அம்ருதாவின் செயலில் அவளை அடித்துவிட வந்த ஹரிஷின் கரத்தை இழுத்து நிறுத்தியிருந்த ஸ்வேதா, “உங்கண்ணனைக் கடுப்பேத்தறதா நினைச்சு லூசுத்தனம் பண்ணிட்டிருக்கே அம்ரு! மாமாவுக்கு தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா என்னாகறது?” எனக் கடுமையுடன் கேட்க,
ஸ்கார்பியோவில் ஏறி அமர்ந்த அம்ருதா, “அப்போ உங்க புருஷனை அவர்கிட்ட ஸாரி கேட்க சொல்லுங்கண்ணி!” என்றாள் பிடிவாதமாக!
“ப்ச்! நான் கேட்டேனா? இறங்கிப் போங்க டாக்டர்!” என்ற அஸ்வத்திற்குமே அம்ருவின் பிடிவாதம் சுக அவஸ்தையாய் இருந்தது.
அவனின், ‘டாக்டர்’ என்ற அழைப்பில் விழி உருட்டினாள். “ஓ! மறுபடியும் முருங்கை மரமா?”
தலைதாழ்த்தி இரு விரலால் நெற்றித் தேய்த்தவன், “ஏய்ய்! இறங்கிப் போடி!” என அடிக்குரலில் கடிந்துகொள்ள,
“மாட்டேன். உள்ளே வந்து அப்பா கிட்ட பேசுங்க.” என்றாள் சட்டமாக!
“கண்டிப்பா இன்னொரு நாள் பேசுவேன்.” என்றவன் பாக்கெட்டிலிருந்து சிறிய நகைப் பெட்டியை எடுத்துத் திறந்தான்.
இமை மலரக் கேட்டாள். “இது உங்ககிட்ட எப்டி வந்துச்சு?”
அதில் அதனை எட்டிப்பார்த்த ஹரிஷ் மற்றும் ஸ்வேதாவும் கூட விழி விரித்தனர். அது அம்ரு அஸ்வத்திடம் தவற விட்ட பிளாட்டின மோதிரம்!
ஒருமுறை மோதிரம் எங்கே என்று அம்மா கேட்டதும், மருத்துவமனையில் ஓர் அறுவைசிகிச்சையின் போது கழற்றி வைத்ததாகவும், இன்னொரு முறை கேட்டபோது பீரோவில் பத்திரமாக வைத்துவிட்டதாகவும் அடித்துவிட்டிருந்தாள் அம்ருதா. ஆக, இந்தப் பொய் கழுதை மோதிரத்தைத் தொலைத்திருக்கிறது. அம்மாவிடம் அடிவிழும் என்றஞ்சி தன் பொய் பொதியிலிருந்து இரண்டை எடுத்து பவ்யமாக தந்துவிட்டு கமுக்கமாக இருந்திருக்கிறது.
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் மென்னகை பூத்த அஸ்வத், “உன் விரல் அளவுக்கேத்த மாதிரி மாத்தியாச்சு.” என்றபடி அதனை அவள் விரலில் அணிவித்தான்.
தட்டிவிடச் சென்ற ஹரிஷை மீண்டும் இழுத்துப் பிடித்தாள் ஸ்வேதா. ஹரிஷ் அவளையும் தீப்பார்வை பார்க்க,
அம்ருதா, “என் விரல் அளவு கூட தெரிஞ்சுருக்குதே… ச்சோ ச்வீட்!” என்று எக்கி அஸ்வத் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, துள்ளலுடன் இறங்கி, “நான் நல்ல மூட்ல இருக்கேன். அப்புறமா ஸாரி கேட்பியாம் என்ன?” என்று ஹரிஷை உலுக்கி அவனுக்கும் கொசுறாக ஓர் முத்தத்தைத் தந்துவிட்டு குதித்தோடிப் போனாள்.
வீட்டில் போய் அவளை எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல நினைத்த அஸ்வத், ‘என் தங்கச்சிக்காக நீ ஒண்ணும் கவலைப்பட வேணாம்.’ என்று ஹரிஷ் உறுமும் அபாயம் இருப்பதால் அமைதியாக திரும்பிட,
“ஸாரி! அவர் ஏதோ கோபத்துல பேசிட்டார்.” என்ற ஸ்வேதாவை ஹரிஷின் உஷ்ண மூச்சு எரித்தது.
ஹரிஷின் தங்கை பாசம் தெரிந்தாலும், இன்று அவனின் பேச்சு அதிகப்படி என்று புரிந்ததாலேயே அஸ்வத்திடம் மன்னிப்பு கேட்டாள் ஸ்வேதா. அத்துடன் அஸ்வத்தின் சகிப்புத்தன்மையும் அவளை ஈர்த்திருந்தது. அவனிடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் ஹரிஷின் வாயை உடைத்திருப்பான் அல்லது அம்ருதாவைத் தங்களுக்கெதிராகத் தூண்டிவிட்டிருப்பான் அல்லது வேறொரு வகையில் தன் எதிர்ப்பைத் தெரிவித்து இன்றைய நிகழ்வை ரணகளமாக்கி இருப்பான்.
அம்ருவின் பிடிவாதத்தையும் ஹரிஷின் கோபத்தையும் ஒருங்கே சமாளித்து, தன் காரியத்திலிருந்தும் பின் வாங்காமல் நிமிர்வுடன் நிற்பவனை எடை போட்டிருந்தாள் ஸ்வேதா. பதறாத காரியம் சிதறாது! அதற்கு இந்த ஸ்கார்பியோகாரனே உதாரணம்!
அவளுக்கு ஓர் தலையசைப்பை மட்டும் தந்தவன் ஸ்கார்பியோவின் இருக்கையில் ஆரோகணித்து போயே போய்விட்டான்.
Fuelled by love. Steered by control🚗🫶…
Fuelled by love steered by control. In a nutshell
ReplyDeleteThank u 💫✨
Deleteஆஹா ஸ்கார்பியோ ஃபுல்லா லவ் ஏத்திட்டு போகுது.இந்த அஸ்வத் 🩷🩷டி போடும் போது எனக்கு தடக்குனு இருக்கே😁😁
ReplyDelete