
அத்தியாயம் 16.1
புதன்கிழமை!
தன் முன் இருந்த புகைப்படத் தொகுப்பைப் பார்த்து சிலையாக அமர்ந்திருந்தான் விபுநந்தன்.
காலையில் தன் மூத்த தமக்கையின் அறையில் இருந்து வெளியே வந்த ஆரவியைப் பார்த்ததுமே துணுக்குற்றான். அவள் முகமும், இரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்ததால் சிவந்து, சிறுத்திருந்த கண்களுமே அவளுக்கு தன்னைத் தெரிந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. எப்படி என யோசித்தவனுக்கு விடையாக அவள் கைகளில் இருந்த புகைப்படத் தொகுப்பு சிரித்தது.
காலையில் எழுந்ததுமே சீதாவைத் தான் தேடினாள் ஆரவி. மிச்ச கதையைக் கேட்க வேண்டுமல்லவா? அறையை சுற்றிலும் தேட, திடுமென காற்றோடு காற்றாக ஜன்னலின் வழி வந்தவளைக் கண்டு கொஞ்சமும் திடுக்கிடாமல், "எங்க போயிட்டேள் இவ்ளோ காலம்பரயே?" என்று சோம்பலாக உடலை நெளித்த படி கேட்டாள்.
"ஓய்! என்கிட்ட கொஞ்சமாவது பயமிருக்கா உனக்கு?" என்று அவள் பதில் கேள்வி கேட்க,
"நீங்க என்ன பேயா? பூதமா? நேக்கென்னத்துக்கு பயமாம்?" என்றாள், சாவகாசமாக!
"மணிக்கொருக்க மயங்கின பொண்ணா நீ?" என்று கேலி செய்தவள், "நான் பேய் தான?" என்றாள், ஒருவித வேதனைச் சிரிப்புடன்!
"ம்ஹூம்!" என்று தலையாட்டி மறுத்தவள், "ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் பேய் குணம் இருக்க தான் செய்யுது. ஆனா ஒரு உடம்புல இருந்து பிரியறது பேய் இல்லங்க. அது ஒரு நினைவு! இந்த ஜென்மத்தினுடைய, இந்த பிறப்பினுடைய நினைவு! அடுத்த ஜென்மம் எடுக்கும் போது இந்த பிறப்பிற்குரிய நினைவு, அந்த பிறப்பிற்குரிய நினைவா மாறுது. அவ்ளோ தான்!" என்றாள். தான் இவளைப் பார்த்து அரண்டு விழுந்ததெல்லாம் மறந்தே போனது.
"நிஜமோ பொய்யோ! ஆனா நீ பேசறத கேட்க நல்லா இருக்குது ஆரவி."
"சரி. அப்ப பேய்னே வச்சுக்கோங்கோ. உங்க பேய் பவரை யூஸ் பண்ணி இந்தாத்த திறந்து விட்டு, நேக்கு வெளியேற ஹெல்ப் பண்ணுங்கோளேன்..." என்று நீட்டி முழக்க,
"அட நீ வேற! என்னால ஒரு துண்டு பேப்பரைக் கூட தொட முடியாது." என்றாள் சோகமாக!
"வாட் டூ யூ சே? சினிமால வர்ற பேய்கள் என்னென்ன ட்ரிக்கெல்லாம் செய்யும் தெரியுமோ? என் கதைல கூட பேய் அட்டகாசம் பண்ணும்." என்று கிளுக்கி சிரிக்க,
"ஹான்! எனக்கு ட்ரிக்கெல்லாம் தெரியாது. நான் அதுக்கு முயற்சிக்கவுமில்ல. மிஞ்சி மிஞ்சி போனா இந்த செடி கொடிகளோட மட்டும் கொஞ்சம் பேசுவேன். ப்ச்! அதுங்களோட எனக்குள்ள பந்தம் அப்டி போல!" என்றாள், ஏதோ சிந்தித்தவளாய்!
ஆரவி கண்கள் மின்ன கேட்டாள். "ஓ! அதான் மொட்டை மாடி அவ்ளோ கலர்ஃபுல்லா இருக்கறதா? ஊஞ்சல் கூட காத்துல வே...கமா ஆடறது?"
இவள் முதல்முதலாக மொட்டை மாடி ஏறும் போது ஊஞ்சலாட்டத்தைக் கேட்டாளல்லவா?
அதை ஆமோதித்த சீதா, "அது இருக்கட்டும். பேய் இல்லனா நீ ஏன் என் குரலைக் கேட்டு அப்டி பயந்தியாம்?" என்று குறும்பாகக் கேட்க,
"அது… அது…" என்று திருதிருத்தவள், "ப்ச்! நீங்க முதல்ல மிச்ச கதையை சொல்லுங்கோ." என்று சிணுங்க,
"ஹேய் என்னதிது? பல்லு கூட விளக்கல? போ! போய் நந்தா ஏன் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தான்னு கேட்டு அவன் சட்டையைப் பிடி!" என்று கூறி, புகைப்படத் தொகுப்பையும் அவள் தான் ஆரவியை எடுத்துச் செல்ல சொன்னாள்.
அவனை நினைத்ததும் நெஞ்சமெல்லாம் பரவிய வலி முகத்திலும் தெரிந்தது. உடம்பிலிருந்த சக்தியெல்லாம் வடிந்துவிட்டாற் போல் தொய்ந்து போனாள் பெண். அவளைத் தன்னால் முடிந்த மட்டும் தேற்றி அனுப்பியிருந்தாள் சீதா.
"பேபிமாமி!" - விபுநந்தன்.
பதிலில்லை. ஆனால் அவள் விழிகளே பதிலைக் கேட்டு அவனைக் கூறுபோட்டது.
"ஸாரி மாமி. நான் தான் உன்னை இங்கே வரவழைச்சேன். ஆனா இப்டி ஆகும்னு எனக்கு தெரியாது பேபி. நிஜமா நான் வேணும்னு எதையும் செய்யல. ப்ளீஸ் டோண்ட் கெட் மீ ராங்."
"நீ ஃப்ளர்ட் பண்றதுக்கு உனக்கு நான் தான் கிடைச்சேனா விபு?" வார்த்தைகள் வாளாய் சுழன்றன.
"ஆரவி! கொன்னுடுவேன்டி… அப்டியா நடந்துக்கிட்டேன் உன்கிட்ட?"
'இல்லயே! சும்மா பயத்தில் துணைக்கு தேடி வந்தவளையே திருப்பி அனுப்பினானே? அப்புறம் ஏன் இந்த நாடகமாம்?'
"அப்டி நடந்துக்கலனாலும் நம்ப வச்சு ஏமாத்திட்டியே? என் மனசை மொத்தமா உருவி எடுத்துக்கிட்டியே? இப்ப நீ உருவின இடமெல்லாம் வலிக்குது விபு. ஒரு ஏமாத்துக்காரன்கிட்ட மனசை விட்டுட்டேனே'ன்னு வலிக்குது."
"பேபி மாமி, இப்டிலாம் பேசாதயேன்… நான் ஏமாத்தல! ட்ரூலி லவ் யூ ஆரவி." எங்கே தன் காதலை சந்தேக சந்தில் நிறுத்தி விடுவாளோ எனும் பதற்றத்தோடு பேசினான்.
"எப்டிலாம் ப்ளான் பண்ணி வரவச்சிருக்க! ச்ச... எவ்ளோ முட்டாளா இருந்துருக்கேன் நானு!"
"ஏய்… நான் எதையும் ப்ளான் பண்ணலடி! ப்ளான் பண்ணிருந்தா அக்கா ரூம், அண்ணா ரூம்னு ஏன் எல்லாத்தையும் திறந்து போடணும்? உன்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்றது என் நோக்கம் இல்ல பேபி… ப்ச்! என்னவோ செய்யணும்னு நினைச்சு எல்லாம் சொதப்பிடுச்சு." என தன்னையே நொந்து கொள்பவன் போல் நெற்றியைத் தேய்த்துவிட்டுக் கொண்டான்.
"உன் மேல சந்தேகம் வந்தப்ப கூட இந்த மனசு உன்னையே தான் நினைச்சது விபு. உன் மேல தப்பே இல்லனு என்கிட்ட வாதாடுச்சு. அந்த மனசை நீ விளையாடற செஸ் காய்ன்னு நினைச்சிட்ட இல்ல? ஆனா என்னால உன்னை அப்டி நினைச்சு, வெட்டி வெளில தூக்கி போட முடியலயே!" கண்களை மூடி சோபாவின் பின்புறம் தலையை சாய்த்துக் கொண்டவளுக்கு இரவெல்லாம் அழுதழுது கண்ணீர் வற்றிப் போயிருந்தது.
நந்தனைப் பார்க்கும் போது, தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை விட, தன்னவன் தவறாகிப் போனான் என்பதே பிரதானமாக வலித்தது. வேதனையை தொண்டைக்குள் விழுங்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்.
இனியும் எதையும் மறைக்க வேண்டாமென்று நினைத்த நந்தன், "பேபி இங்க பாரேன்…" என்று வேகமாக அப்புகைப்பட தொகுப்பைப் புரட்டினான். நேற்றிரவு தன் தங்கை என சீதாலட்சுமி கூறிய பெண்ணைக் குறிப்பிட்டு காட்டி, "என் மனசுல உன் மேல லவ் வர்றதுக்கு இவதான் முதல் காரணம்!" என்றான், என்னவோ இவன் எந்த தவறுமே செய்யவே இல்லை என்பது போல்!
தான்யா! தான்யலட்சுமி பிரபாகரன்! நந்தனின் மற்றொரு தமக்கை. எழுத்துக்களின் ரசிகை! ஆரவி இப்போதுதான் அவளை நன்றாகப் பார்த்தாள்.
"இது... இவங்க... ஃபேஸ்புக்ல…" என்று இழுக்கவும்,
"உன் ஸ்டோரிக்கு மேடம் டை காட் ஃபேன்!" என்றான்.
"தெரியும். இவங்ககிட்ட நான் சாட் பண்ணிருக்கேன். ஆனா இவங்க எப்டி..?"
ஆரவியை இங்கு அழைத்து வந்ததன் காரணத்தின் வரலாற்றைப் புரட்டினான் விபுநந்தன். இவன் நம் ஆரவியிடம் அறிமுகமாகும் போது கூறிய, ஐந்து நட்சத்திர உணவு விடுதியான 'ஹெவன் இன்'ன் உரிமையாளர் ரகுநந்தன். ரகுநந்தன் - வித்யாலட்சுமி தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் ரிஷிநந்தன். அடுத்தது சீதாலட்சுமி. மூன்றாவது தான்யலட்சுமி. கடைசியாக பிறந்தவன் விபுநந்தன்.
வித்யா, கட்டணமில்லா கல்வி எனும் முறையில் ஒரு பள்ளியை நிறுவி நிர்வகிக்கின்றார்.
ரிஷியும், விபுவும் தந்தையோடு தொழிலில் துணை நிற்கின்றனர். ரிஷி தொழில் நிமித்தமாய் ஜப்பான் சென்றவன் அங்கேயே ஒரு பெண்ணிடம் காதலில் விழுந்து, தாய், தந்தையரிடம் கூறி அவளை முறையாய் மணந்துகொண்டவன். அவன் மனைவி டியான் இவர்களின் உல்லாச விடுதிகளில் மசாஜ் சென்டர்களை நடத்துகிறாள். ரிஷிநந்தன் - டியான் தம்பதியருக்கு மூன்று வயதில் யதுநந்தன் என்றொரு குட்டி ஹீரோ இருக்கின்றான்.
இரண்டாவது பெண் சீதாலட்சுமி, மருத்துவம் படித்துக் கொண்டிருந்தவள் எதிர்பாராத விதமாக காலனிடம் சென்றுவிட்டாள்.
மூன்றாவது, நம் கதைக்கு பிள்ளையார்சுழி இட்ட தான்யலட்சுமி! முதுகலை படித்து முடித்திருந்தவளை வீட்டினர் இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்து அயல்நாட்டிற்கு பார்சல் செய்து விட்டார்கள். அங்கு கணவன் பிரபாகரனின் கைகடிகார ஷோரூமில் மேலாளர் பதவியில் இருக்கின்றாள். தற்போது தான்யாவிற்கு ஏழு மாதங்கள். பிள்ளை பேற்றிற்காக தாய் வீட்டிற்கு சீராட தாயகம் வந்துள்ளாள். வந்தவள் சும்மா இருக்கமாட்டாமல் கைப்பேசியும் கையுமாகவும், கதையும் கண்ணுமாகவும் இருக்க, கடுப்பாகிப் போனான் கடைக்குட்டி விபுநந்தன்.
To be continued...
Comments
Post a Comment