Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

இரவோடு இவர்கள் ✈️ - 3

 

இரவோடு இவர்கள் A Ceylon trip ✈️

அத்தியாயம் 3


கண்ணீர் குரல்களுக்கு மத்தியில், துடுப்பாட்டம் போடும் இதயத்துடன் கண்மூடியிருந்த ஸ்ரீநிதியின் எண்ணங்கள் பின்னோக்கி 2017-ஆம் ஆண்டிற்கு சென்றது. இதயம் பலவீனமாக இருந்தாலும், பலத்துடன் இருந்த மூளை அவளின் நினைவு முடிச்சுகளை சரசரவென அவிழ்த்துவிட்டது. 


அன்று தங்கள் வீட்டினருகே இருந்த கந்தன் கோவிலில் நிஜந்தனை சந்தித்த போது பேசிய பேச்சுகளை நினைத்துப் பார்த்தாள். அப்போது இவள் உயர்தரம் முடித்திருந்தமையாலும் இவள் அன்னை அவன் அன்னையிடம், பெண்ணை யாழ்ப்பாணத்தில் படிக்க வைக்கப் போவதால் சொந்த வீட்டினை வாடகைக்கு விட்டுவிட்டு, அனைவரும் யாழ்ப்பாணம் போக போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். 


காதலி வேற்றூர் போய்விட்டால் அவளை தான் இனி தரிசிப்பதெப்படி? அதனைப் பற்றி ஸ்ரீநிதியிடம் பேசவே, அன்று வேலை முடிந்ததும் கந்தன் கோவிலுக்கு வந்திருந்தான் நிஜந்தன்.


"சரி சொல்லும். அடுத்து என்ன படிக்கப் போகிறீர்? எங்கே படிக்கப் போகிறீர்?"


"யாழ் பல்கலையில் சீட் கிடைத்திருக்கிறது நிஜந்தன். அங்கே ஹொஸ்டலில் தங்கி படிக்கப் போகிறேன்." 


"உம்மட அம்மா எல்லோருமாக யாழ் போகப் போவதாக சொன்னார்களே?"


"அவேவ அப்படி தான் சொல்லுவார். அம்மாவால் சொந்த வீட்டை விட்டு வேறெங்கும் நிற்கேலாது."


"ம்ம்… நன்றாக படிக்க வேணும் ஸ்ரீ!" என்றவனின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்தது.


அவன் கவலையைத் துல்லியமாகப் புரிந்துகொண்டவள், "அப்படியே நாங்கள் எல்லோரும் யாழ் போய்விட்டாலும் ஒவ்வொரு மாதமும் அம்மம்மா இங்கே உள்ள மாமா வீட்டை வருவார்கள். அப்போது நானும் அவர்களோடு வருவன். அப்படி வரேக்க உங்களுக்கு எடுத்து (call) சொல்கிறன். 


இங்கே வந்ததும் அம்மம்மாவிடம் ஜெஸிந்தாவைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு  ஆன்ட்டனி சர்ச் வருகிறேன். அங்கே சந்திப்பம்." எனவும், நிஜந்தன் முகம் பளிச்சென எதிரேயிருந்த கந்தனின் முகத்திற்கு போட்டியாய் மலர்ந்துவிட்டது.


"ஓம்! அங்கே என்றால் சரிதான். யாருக்கும் நம்மை அடையாளம் தெரியாது. நானும் முடியுமெண்டால் யாழ் வருகிறேன்." என்றான்.


அன்றிலிருந்து இந்த இரண்டு வருடமாக இருவரும் ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ சந்தித்துக் கொள்கின்றனர். ஆக, அவள் குறிப்பிட்ட அந்த தேவாலயத்திற்கு, இன்று இவளைக் காண நிஜந்தனும் வருவதாக இருந்தது. 


இன்று ஈஸ்டர் என்பதால் தேவாலயத்தில் சற்று கூட்டமாக இருக்க, இவள் அவனைக் காணும் முன்பே சம்பவம் நடந்தேறியது. இவளுக்கு பெரிதான காயம் ஒன்றுமில்லை தான். ஆனால் நிஜந்தனும் இன்று அங்கே வந்திருந்தால், தன்னைப் போல் இந்த குண்டுவெடிப்பில் சிக்கியிருப்பானோ என்று பரிதவித்து வருகிறாள் பெண்! 



கண்முன் கண்ட கோர சம்பவத்தின் அதிர்ச்சியோடு, தன்னவனின் இன்மையும் அவனைப் பற்றிய செய்தியும் கூட தெரியாததால், பலவீனப்பட்ட இதயம் மேலும் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்கிறது.


ஆம்; பரபரப்பாகவும் பதைபதைப்பாகவும் காணப்படும் அந்த மருத்துவமனையில் நம் நண்பர்களிடம் தன் காதலனைக் குறித்து உதவிக் கேட்டவள், ஸ்ரீநிதி! 


நிஜந்தன் இருந்திருந்தால் காலையிலேயே தன்னைக் காண வந்திருப்பான். இத்தனை நேரமாகியும் அவனைக் காணவில்லை என்பதே தற்போது அவளின் அச்சத்திற்கு காரணம்! அவன் நிலை தெரிந்தால் இவளின் இதயத்துடிப்பில் முன்னேற்றம் ஏற்படலாம்.


பாலாவிடம் பேசிவிட்டு அங்கே வந்த ரஃபீக், "உன் பேரென்னம்மா?" எனக் கேட்க,


ஆக்ஸிஜன் மாஸ்க்கை விலக்கிவிட்டு, "ஸ்ரீநிதி!" என்றாள்.


"ம்க்கும்! ஸ்ரீன்னு பேரு வச்ச கேஸுங்க எல்லாம் மூளையை முக்காத் துட்டுக்கு வித்துடும்ங்க போல!" என்று நக்கலடிக்க,


"இது மட்டும் ஸ்ரீ அக்காவுக்கு தெரிஞ்சா உன்னை அடுத்தக் கதைல வச்சி செஞ்சிடும்." என்று எச்சரித்தான் சசி.


"இந்தக் கதைலயே என்ன பாடுபடுத்தப் போறாளோ!" என்றவன், ஸ்ரீநிதியிடம், "உன் ஆளு வீடு எங்கம்மா இருக்குது?" எனக் கேட்டான்.


நிஜந்தன் வீடு இருக்கும் பகுதியைச் சொன்னவள், "நான்… நான் இன்னும் உயிர் வச்சுதான் இருக்கனென்டு சொல்லுங்கோ. அவ... அவேவ வீட்டில் எல்லோரும்... சுகமா எண்டு கேளுங்கள். நீங்க வார வரை... நான் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு இருப்பன் அண்ணா…" என்றாள், கண்ணீரும் புன்னகையுமாய்!


ரஃபீக்கிற்கு அவள் முகத்தை அப்படிப் பார்க்கவே மனம் கலங்கியது. "உங்க வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சா?" என இத்தனை நேரமிருந்த கடுகடுப்பிலிருந்து இறங்கி தன்மையாகக் கேட்டான்.


"ஓம்! ஹொஸ்பிடலில் இருந்தே... சொல்லி… அம்மம்மா..." 


"சரி சரி! ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத!"


அதற்குள் சசி கூகுளில் நிஜந்தனின் இருப்பிடத்தைத் தட்டிப் பார்த்துவிட்டு, "பக்கத்துலதான் இருக்குது. சீக்கிரம் வந்துடுவோம். கவலைப்படாதீங்க!" எனவும், நன்றியோடு தலையாட்டினாள்.


இருவரும் வெளியேறுகையில் அவசரத்திற்கு பிறந்தவன் போல் ஓடிவந்த ஒருவன் சசியின் மேல் பலமாய் மோதிக்கொண்டான். கலைந்த தலை, கசங்கிய உடை, நெற்றியில் ப்ளாஸ்திரி என்று பார்க்கவே பரிதாபகரமான தோற்றத்தில் இருந்தான். மோதியதற்கு மன்னிப்பு கூட கேட்காமல் உள்ளே தாவி ஓடினான். யாருக்காக அப்படி ஓடுகிறானோ தெரியவில்லை.


ஆனால் ரஃபீக் ஓடியவனைப் பார்த்தவாறே சொன்னான். "ப்ச்! அடிபட்டிருக்கவங்கள விட அவங்களை இந்த நிலைமைல பார்க்க வர்ற அவங்க வீட்டாளுங்களுக்கு தான்’டா ரொம்ப கஷ்டம்!" சற்றுமுன் ஸ்ரீநிதியைப் பார்க்கையில் அவனுக்குத் தோன்றிய‌ உணர்வு அப்படிப் பேசச் செய்தது‌.


"அதென்னவோ உண்மை தான்’ணா." சசியின் முகத்திலும் சிறு கசங்கல்!


வெளியே வந்ததும் ரஃபீக் கேட்டான். "டேய் சசி, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. நல்லா யோசிடா! நாம கண்டிப்பா போயே ஆகணுமா? வேற யார்க்கிட்டயாவது சொல்லி விடுவோமே?"


"சும்மா இருண்ணா! வேற ஆளு அனுப்பி விடறதுக்கு இதென்ன டீ வாங்கிட்டு வர்ற விஷயமா? லவ்வு’ண்ணா லவ்வு!"


"ஷ்ஷ்… மனசுல நாடோடிகள் சசிகுமார்னு நினைப்பு!" என்று கடுப்படித்தான்.


"ஆமா’ண்ணா! ஊரான் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தன்னால வளருமாம். ஈஈஈ..."


"அது ஆளு இருக்கறவனுக்குடா வெண்ணெ! உன்னைத் தான் எவளுமே திரும்பிப் பார்க்கலயே?"


"ஆமா, இவரு மட்டும் அப்டியே கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்துப் போட்டவர்! எங்களை சொல்ல வந்துட்டார்!" என்று நொடித்துக் கொள்ள, ரஃபீக் 'கப்சிப்' வாயனானான்.


வரும் வழியிலேயே தோழிகளுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டு, இரவு வர நேரமாகலாமென தகவல் சொன்னார்கள்.


நேரம் ஆறு முப்பது!


சாலை இருளுள் மூழ்க ஆரம்பித்திருந்ததாலும், ஆள் நடமாட்டமில்லாத சாலையும் இவர்களைப் போல ஓரிருவரை இராணுவத்தினர் நிறுத்தி சோதித்தறிவதும் இவர்களுக்குள் சற்று திகிலைக் கிளப்பியது.


இரு தெருக்களைத் தாண்டியபின் சசி மெல்லிய குரலில் சொன்னான். “நாலு நாள் இருந்த நமக்கே இப்டி இருக்கே-ண்ணா... இங்க இருக்கவங்களுக்கு எவ்ளோ கஷ்டம்? ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து ௭ந்தப் பக்கமிருந்து வரும்னு பயந்துட்டே இருக்கணும்.”  


“ம்ம் டா! நம்மூர் மாதிரி நினைச்ச நேரத்துக்கு வெளில வந்து போக முடியாது.”  


“இன்னிக்கு சாயங்காலம் வரை இறந்தவங்க 254பேராம். 500 பேர் காயம்பட்டவங்களாம்.”


“அதுலாம் பொய்டா. நிஜமாவே இறந்தவங்க அதிகம் பேர் இருப்பாங்க."


பேசியபடியே இருவரும் சந்து பொந்துகளில் நுழைந்து, கூகுளின் உதவியோடு முட்டுச்சந்தில் முட்டி என்று ஆங்காங்கே நின்றிருந்த இராணுவத்தினரின் கவனத்தைக் கவராமல் நிஜந்தன் வீடிருக்கும் வீதி வரை வந்துவிட்டனர். பக்கம்தான் என்று சொன்னாலும் சற்று தூரமாகவே தோன்றியது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடந்திருக்கிறார்கள்.


இதோ வலப்புறம் திரும்பி நூறடி தூரம் நடந்தால் அந்த 'ட' வடிவ அமைப்பு கொண்ட தெரு வந்துவிடும். ஆனால் அதற்கும் முன் உள்ள பகுதியின் மையத்தில் பெரிய மசூதி ஒன்றிருந்தது. அதன் வாயிலில் திமுதிமுவென ஆட்கள் கும்பலாய் குழுமியிருந்தனர். 


"பாம் ஸ்க்வாட்!" என்றான் ரஃபீக்.


அங்கிருந்து இவர்கள் நின்ற இடத்திற்கு முன்பு வரை இராணுவத்தினர், சாலையில் செல்வோர் ஒருவரையும் விடாது விசாரித்து வேறு வழியில் செல்லுமாறு திசை மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தனர். சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருந்தனர்.


வெளிநாட்டு ஆட்கள் என்றால் கேள்வியே இல்லாமல் கோழியைப் போல் பிடித்துக் கொள்வார்களே! எனவே, அங்கே பூட்டியிருந்த தேநீர் கடையின் மறைவில் சட்டென சசியை இழுத்துக்கொண்டு மறைந்து கொண்டான் ரஃபீக். 


"ஏன்’ணா?"


"கொஞ்ச நேரம் பார்ப்போம் சசி. இந்த கடைக்கு பின்னாடி அடுத்த தெருவுக்கு போற வழி இருக்கலாம். அவங்க அந்தப் பக்கம் கவனமாகும் போது நாம கிளம்புவோம்."


கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அங்கேயே பொறுமையாக நின்றிருந்தனர். 


சசி, "ம்ஹ்ஹூம்!" என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான். 


"என்னடா?"


"ச்சு போண்ணா!" என சலித்துக் கொண்டான்.


"டேய் என்னடா? ஃபர்ஸ்ட் நைட் கேன்சல் ஆன மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு இருக்கே?"


"ம்ம், ஆமா கிட்டத்தட்ட அப்டிதான்."


"என்ன?"


"ஹான்! இதுவே இந்த இடத்துல நீ ஒரு ஃபிகரா இருந்திருந்தா குண்டா இருந்தாலும் பரவாயில்ல; என் குலாப்ஜாமூனே நீதானேன்னு அப்டியே பார்வையாலேயே ரொமான்ஸ் கிமான்ஸ் பண்ணிருப்பேன். ப்ச்! ஆல் மை ஃபேட் (fate). இப்டி உன் கூட ஒளிஞ்சு பிடிச்சு விளையாட வேண்டியதா இருக்குது... ம்ஹ்ஹூம்!"


ரஃபீக் கண்கள் சிவக்கும் வேளையில், அந்தப்புறம் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. என்னவென்று கூர்ந்து கவனிக்க, தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்த ஒருவனை மடக்கிப் பிடித்து அவனிடமிருந்து வெடிபொருளை வெடிக்கப் பயன்படுத்தப்படும் ரிமோட் கன்ட்ரோல் போலிருக்கும் ஒரு சாதனத்தைக் (detonator) கைப்பற்றி, அவனையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். 


இதுதான் சமயம் என்று இவர்கள் இருவரும் தேநீர் கடையை சுற்றிக் கொண்டு பின்புறம் வர, அங்கிருந்து பார்த்தாலே ஸ்ரீநிதி சொன்ன அந்த தெரு தன் பெயரைத் தாங்கிய பலகையோடு தெரிந்தது. ஆனால் அங்கே ஆட்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தான் ஏதுமில்லை.


சின்ன வாகனம் கூட இல்லாது துடைத்து வைத்தது போலிருந்தது, வீதி! அப்போது தான் இருவருக்கும் உரைத்தது. பக்கத்தில் வெடிகுண்டுகள் அகற்றும் வேலை நடக்க, அதனருகே குடியிருக்கும் மக்களை அப்படியே விட்டு வைத்திருப்பார்களா என்ன?


இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இனி நிஜந்தனை எங்கேப் போய் தேடுவது?


இருவரும் செய்வதறியாது நிற்கையில் யாரோ ஒருவர் தெரு உள்ளிருந்து விரைவான நடையில் வந்தார். அவர் கையில் ஆஸ்துமா நோயாளிகள் உபயோகிக்கும் இன்ஹேலர்! மசூதி இருந்த பக்கத்திற்கு எதிர்புறமாக நடைப்போட்டவரை இருவரும் தொடர்ந்த வண்ணம் பேச்சுக் கொடுக்க முயன்றனர். 


"எக்ஸ்க்யூஸ் மீ சர்! இங்கிருந்தவங்களை எங்கே தங்க வச்சிருக்காங்கன்னு தெரியுமா?" சசி எடுத்ததும் இப்படிக் கேட்க, அவர் இருவரையும் சந்தேகமாகப் பார்த்தார்.


"ஃப்ரெண்ட் ஒருத்தரைப் பார்க்க வந்தோம் சர்!"


"எந்த ஃப்ரண்ட்? இந்த இரவில சந்திக்க அப்படி என்ன அவசரம்?" அப்பட்டமான சந்தேகத்தோடேக் கேட்டார். அவரை சொல்லி குற்றமென்ன? அவர்கள் இருக்கும் சூழ்நிலை அப்படி இருக்கிறதல்லவா?


"இங்கே இருக்க நிஜந்தன்! அவருக்கு வேண்டியவங்க ஜெனரல் ஹாஸ்பிடல்ல இருக்காங்க. தகவல் சொல்லி அவரைக் கூட்டிட்டு போக தான் வந்தோம்."


"ஆமா சர்! கொஞ்சம் அர்ஜெண்ட். ப்ளீஸ்… அவர் எங்கே இருக்கார்னு உங்களுக்கு தெரியுமா?"


அவர் பெரிதான வியப்புடன் பார்க்க, 'என்னவாயிற்று?' என இவர்கள் இருவருக்கும் இதயங்கள் இரைச்சல் கீதம் இசைத்தது.

 

காலையில் தேவாலயத்தில் வெடித்த வெடிகுண்டிற்கு ஈடாகப் பெரும் வெடியொன்றைக் கொளுத்திப் போட்டார் அவர். "நிஜந்தன் வீட்டை அவன் உட்பட இருவர் பலி எண்டு கேள்வி!"


பயணிக்கும்✈️...

Comments

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...