அத்தியாயம் 5
பெரும் வெடிப்பைக் கண்ட அந்த மனிதர்கள் கூட்டம் ஒரு நிமிடம் சுவாசிப்பையும் மறந்து, அசையாது நின்று போனது.
'சி' ப்ளாக்கோடு அருகேயிருந்த மற்றொரு ப்ளாக்கும் லேசாக ஆட்டம் கண்டது. குபுகுபுவென வான் புகுந்த புகைமூட்டத்தை ஏதும் செய்ய இயலாமல் பார்த்திருந்தனர். சிலர் ஓவென தலையிலடித்துக் கொண்டு கதறினர். இன்னும் பலவீனமான மனதுடையவர்கள் மயங்கி சரிந்தனர். குழந்தைகள் அதிர்ச்சியில் பேச்சை மறந்து அழுகையின் கரத்தைப் பற்றிக் கொண்டனர்.
ஒரு உயிரையும் பலியிடக் கூடாது என்ற உறுதியோடிருந்த ஷக்திதரன், இப்போது பாம் ஸ்க்வாடில் இருவரை பலி கொடுத்துவிட்டோமென கண்களில் தோல்வியையும் வேதனையையும் காட்டினார். அதுவும் ஒரு கணம்தான்! மறுகணம் அனைத்தையும் ஒரு பெருமூச்சில் விழுங்கிக்கொண்டு, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த தீயணைப்பு துறைக்கு வேலையை ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டார்.
அரைமணி நேரத்திற்கு பின் புழுதிப்படலம் சிறிது குறைந்தது. நீண்ட நேர தேடலுக்குப் பிறகு இறந்த இருவரின் உடல்கள்… இல்லை செங்கல் குவியல்களுக்கு நடுவே கிடைத்த சிற்சில உடல்பாகங்கள் மீட்கப்பட்டன.
ரஃபீக்கிற்கும் சசிக்கும் முகமே வெளிறிப் போயிற்று! ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியபடி கடற்கரை சென்று மணலில் அமர்ந்துவிட்டனர். இன்னும் இந்த இரவு தங்களுக்கு என்னென்னத்தையெல்லாம் வைத்துக் காத்திருக்கிறதோ என்று இருவரின் மனங்களும் அரற்றியது.
ஸ்ரீநிதியின் முகம் நினைவிலாடியது. இந்நேரம் அவளின் நிலை எப்படியிருக்கிறதோ? மனதின் பாரம் மூளையைப் பாதித்து, அலைபேசியை இயக்கி பாலாவிடம் விசாரிக்கக் கூட முடியாதளவு அடித்து வீழ்த்தியிருந்தது; கை கால்கள் எல்லாம் சோர்ந்து, மூச்சுவிடுவதே பெரும்பாடு எனுமளவில் ஓய்ந்திருந்தது.
எத்தனையெத்தனையோ நாட்கள் 'இலங்கையில் குண்டுவெடிப்பு; ஈழத்தில் விடுதலைப்புலிகள் போராட்டம்' என்றெல்லாம் நம்மூர் தேநீர் கடையில் அமர்ந்து காகிதத்திலும், அலைபேசியில் சமூக ஊடகத்திலும் வாசிக்கையில் 'உச்' கொட்டிவிட்டு நகரும் போது இல்லாத வலி, அதே செய்தியை இன்று கண்முன் நேரில் பார்க்கும்போது ஏன்தான் இத்தனை மடங்கு அதிகமாக வலிக்கிறதோ?
யாரோ ஒருவரின் வெளிநாட்டில் இருக்கும் மகன், பெற்றோர் தன் தாய்நாட்டில் பத்திரமாக இருப்பார்கள் என்று நிம்மதியாக துயில் கொள்ள முடியுமா? யாரோ ஒருவரின் மகள் வெளிநாட்டில் படிப்பை முடித்து வரும்போது, எந்தையும் தாயுமில்லை; நீயிருக்க இடமும் இல்லமுமில்லை என்றால் அவள் கதி என்னவாகும்?
இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு வெளிநாடு செல்லும் ஒரு கணவனின் வலி எப்படி நமக்கு புரியும்? பொருளாதார நெருக்கடி, விலையேற்றங்கள், பாதுகாப்பின்மை என்று ஏதோ ஒரு காரணத்தால் தாய்நாட்டை வலிக்க வலிக்க பிரிந்து செல்பவர்களின் ரணம் சத்தியமாய் நமக்கு புரியப் போவதேயில்லை.
நம் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம் என்ற பெயரில் தினந்தோறும் அதிகாரவர்க்கத்தின் நடவடிக்கைகளினால் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ முகம் தெரியாத ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து நாம் என்று சிந்தித்திருக்கிறோம்? அவர்களும்தான் வேறு எங்கே போய் முறையிட்டுவிட முடியும்?
கடற்கரையில் மயங்கி விழுந்தவர்களையும் கட்டிடத்தின் அருகே இருந்ததால் காயமேற்பட்ட சிலரையும், வந்திருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
புகைமண்டிக் கிடக்கும் இடத்தை தூரத்தில் இருந்து பார்த்திருந்த ரஃபீக், சசி இருவரின் கண்களும் ஜீவனற்றுக் கிடந்தன. சசியின் கைபேசி ஒலியெழுப்ப, இருவரின் புலன்களும் தூக்கத்தில் இருந்து விடுபட்டதைப் போல் விழித்தெழுந்தது.
எடுத்துப் பார்த்துவிட்டு, "ராபி அக்கா!" என்றவன் அழைப்பை ஏற்றான்.
ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்று கேட்பாள் என நினைத்த ரஃபீக், சத்தியமாய் இவன் தோழிகள் காவலதிகாரிகள் வசம் இருக்கிறார்கள் என்ற செய்தியை எதிர்பார்த்திருக்கவில்லை.
அலைபேசியில் பேசிய சசியின் முகம் சிறிது சிறிதாக அதிர்ச்சிக்குப் போக, வேகமாக ரஃபீக்கை கூச்சலில்லாத பகுதிக்கு இழுத்துப் போய் ஸ்பீக்கரில் போட்டான்.
"அக்கா, இப்ப தெளிவா சொல்லு!"
"சொன்னேனேடா? ஹோட்டல்ல தங்கிருக்க வெளிநாட்டுக்காரங்களை எல்லாம் விசாரிக்கறாங்களாம். என்னையும் சீதாவையும் ரிசப்ஷன்ல உட்கார வச்சிருக்காங்க. பாலா அவங்கக்கிட்ட பேசிட்டிருக்கான். ரஃபீ எங்க இருக்கான்? கால் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான்?"
அப்போதுதான் ரஃபீக் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளைத் தடவிப் பார்த்து அலைபேசியைத் தேடினான். நல்லவேளை பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாக, ஆனால் அணைந்து போயிருந்தது. இவள் எப்போது அழைத்தாளோ தெரியவில்லை.
"பக்கத்துல தான் இருக்கார்’கா!"
"ஓ! ரெண்டு பேரும் இவ்ளோ நேரமா ஊர் சுத்திட்டிருக்கீங்களா? மனசுல பெரிய ஷாஜகான் விஜய்னு நினைப்பு, லவர்ஸை சேர்த்து வைக்கக் கிளம்பிட்டானுங்க!" என்று இவர்களின் நிலைமை புரியாமல் பொரிந்து தள்ளினாள்.
கடுப்பான ரஃபீக் ஏதோ காட்டமாக சொல்ல எத்தனிக்கையில், அவனைத் தடுத்த சசி, "நாங்க காலைல வந்துடறோம்கா. பாலா அண்ணாகிட்ட சொல்லுங்க." என்றான்.
"ப்ச் டேய் சசி! புரியலயா உனக்கு? இங்கே உங்களை தான்டா கேட்கறாங்க. இந்தியால இருந்து இங்கே டூர் வந்தவங்களுக்கு இந்த நடுராத்திரில வெளில என்ன வேலைன்னு கேட்டு தான் இங்கே இன்வஸ்டிகேஷன் போயிட்டிருக்குது." எனவும் இருவரும் தலையில் கை வைத்துக் கொண்டார்கள்.
விடுதிக்கு வந்தவர்கள் ஐவர் எனப் பதிவாகியிருக்க மூவர் மட்டுமே அறையிலிருக்கிறார்கள். மற்ற இருவர் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது போலும்.
ராபி தூக்கமற்று, கவலையோடு களைத்துப் போன குரலில் மேலும் சொன்னாள். "எங்களை ஆல்ரெடி விசாரிச்சு நாம தங்கியிருந்த ரூமையும் கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டாங்க. நீங்க வந்து உங்களை விசாரிச்சப்புறம்தான் எங்களையும் விட முடியும்னு சொல்றாங்கடா."
அலைபேசியை தன் கைக்கு மாற்றிக் கொண்ட ரஃபீக், "நீ வை! நான் கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடுறேன்." என்று பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டு ஷக்திதரனைத் தேடிப் போனான்.
அவர் தங்களைப் பற்றி சொன்னால் அங்கே தோழிகளை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தான். அந்தோ பரிதாபம்! ஷக்திதரன் அப்போது தான் வேறொரு இடத்தைப் பற்றிய தகவல் வந்ததையடுத்து அங்கே விரைந்திருக்கிறார் என்று சொன்னார்கள். இருவருக்கும் ஐயோ என்றிருந்தது.
அவர் எங்கே போயிருக்கிறாரோ! வரும் வரையிலும் காத்திருக்கவும் முடியாது. தங்களை நம்பி வந்த பெண்களை எத்தனை நேரம் வேறொருவரின் முன் விசாரணையின் பேரில் உட்கார வைத்திருக்க முடியும்? வேறு வழியில்லை! இவர்கள் விடுதிக்கு திரும்பத்தான் வேண்டும்.
இருவரும் யோசிக்கவில்லை.
வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து சிறிது தூரம் வரை மக்களின் சலசலப்புகள் இருந்ததால், இருவரும் சுலபமாக நடையிட முடிந்தது. அதன்பின்னர் வரும் வழிகளில் மீண்டும் அமைதி; சோதனை போடும் காவல் அல்லது இராணுவத்தினர்!
ஆக, மறுபடியும் சந்து பொந்துகள்; குறுக்குவழிகள்! இம்முறை அதீத எச்சரிக்கையோடு செயல்பட்டனர். வீடுகள் மற்றும் மரங்களின் நிழல்களில் நிசப்தங்களின் ஊடாக நடந்தனர்.
நேரம் இரண்டு மணி!
வீதிகள் தவிர்த்து அத்தனை வீடுகளும் இருளில் மூழ்கியிருக்க, அந்த ஒரு வீட்டில் மட்டும் உள்ளேயும் வெளியேயும் பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த வீட்டைத் தாண்டினால் தான் இவர்கள் அடுத்தத் திருப்பத்திற்குள் திரும்ப முடியுமென்ற நிலை! என்ன செய்வதென புரியாமல் அப்படியே நின்றிருந்தனர்.
வாசலில் நான்கைந்து தலைகள் தெரிந்தன.
அதில் ஒருவர் கேட்டார். "பிள்ளைக்கு எத்தனை வயது?"
கண்ணீருடன், "இந்த மாதம் முப்பதாம் திகதியில் தான் பிறந்தநாள் வாறது. பதினோரு வயதாகுது." என்றார் மற்றவர்.
"கொடுமை!" என்று வருந்தினார் முதலாமவர்.
"ஓம்! சின்னப் பிள்ளை. காலையில் சர்ச்-க்கு போனார்கள். பெரியவர்கள் வெளியே கதைக்கேக்க இவேவ உள்ளே விளையாடியிருக்கிறா!" என்றார் வேறொருவர்.
"கடைசியில் சிதறிய எங்கட பிள்ளையைப் பெட்டியில் போட்டுத் தந்தார்கள்." என்று குமுறியழுதார் இரண்டாமவர்!
கேட்டிருந்த நம் நண்பர்களுக்கு நெஞ்சையடைத்துக் கொண்டு வந்தது. மேலும் அவர்களின் பேச்சில் அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் அக்குழந்தையின் தந்தையின் வரவிற்காகக் காத்திருப்பது புரிந்தது.
சற்று தலையை நீட்டிப் பார்க்க ஹாலில் சின்னப் பெட்டியொன்று நடுவில் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அருகே ஒரு மனுஷி கண்களில் உயிர்ப்பற்று சூனியத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தார். அக்குழந்தையின் தாயாக இருக்க வேண்டும். பார்த்தவர்களுக்கு மனதைப் பிசைந்தது.
"இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்" என முணுமுணுத்தான் ரஃபீக். இறைவனிடமிருந்து வந்தோம். இறைவனிடமே செல்கிறோம் என்று பொருள்.
கனத்த மனதுடன் நின்றிருந்தவர்கள் கிளம்பலாம் என ஒருவருக்கொருவர் கண்ணைக் காட்டிவிட்டு, பிறர் கவனம் கவராமல் விருட்டென அவ்வீட்டைக் கடந்தார்கள்.
இதோ அதோ என இருவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். வாசலின் உள்பக்கத்திலேயே இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான் பாலா. இருவரின் களைத்த முகத்தைக் கண்டு அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டவன், எதுவும் கேளாமல் இவர்களை விசாரிக்கக் காத்திருந்த ஒரு கான்ஸ்டபிளிடம் அழைத்துப் போனான்.
அவரிடம் உண்மைகளைச் சொல்ல, அவர் அதனைத் துளியும் நம்பவில்லை. ஷக்திதரனிடம் சொன்னது போலவே இவரிடமும் மருத்துவமனைக்கு அழைத்து ஸ்ரீநிதியிடம் பேசச் சொன்னான் ரஃபீக்.
ஆனால் அவரைப் போல் இவர் தீர விசாரிக்கும் நிலையிலில்லாமல், எதையும் காதில் வாங்க மறுத்தார். ஒரே வார்த்தையாக, "ஸ்டேஷனுக்கு நடவுங்க!" என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
பாலா, 'நானும் சொல்லிப் பார்த்துவிட்டேன். கேட்கவில்லை' என்றான்.
அப்போது தான் ஷக்திதரன் அலைபேசி எண்ணையாவது வாங்கி வந்திருக்கலாம் என்று தோன்றியது. அவரிடமோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களிடமோ சொல்லிவிட்டு கூட வரவில்லை. அந்நேரம் தோழிகள் இக்கட்டில் இருக்கிறார்கள் எனவும் எதையுமே யோசிக்கத் தோன்றவில்லையே!
அவரைப் பற்றி பாலாவிடம் சொல்ல அவன், "சோ வாட்? அவர் யாரு?, எந்த டிபார்ட்மெண்ட்ன்னு மட்டும் சொல்லு. நமக்கு தான் அவரை கான்டாக்ட் பண்ண முடியாது. இவங்களால முடியுமே?" என்று அந்த கான்ஸ்டபிளைக் கைகாட்ட, அதுவும் சரிதான் என அவருடன் அருகேயிருந்த காவல் நிலையம் சென்றனர்.
அங்கே போய் ஷக்திதரனின் பெயர், இன்ன இடத்தில் ரோந்துப் பணியில் இருந்தார், அவருடன்தான் இத்தனை நேரம் இருந்தோமெனவும், இரண்டு மணி நேரக் காத்திருப்பின் பின்னர் ஷக்திதரன் லைனிற்கு வந்தார்.
அவர் இங்குள்ள அதிகாரியிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை. "எஸ் சர். ஸொரி சர்!" என்று பேசிவிட்டு வைத்தார்.
பிறகு இருவரும், 'மன்னிக்கவும். எங்கள் வேலையை நாங்கள் செய்தோம்.' எனும் சம்பிரதாய வார்த்தைகளோடு விடுவிக்கப்பட்டனர்.
ஓ! நிஜந்தனைத் தேடிப் போனவர்களுக்கு இந்த இரவு தான் எத்தனை பாரதூரமான அனுபவத்தைத் தந்துவிட்டது! நண்பர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே வர, வானம் மெதுமெதுவாக விடிந்து வெளிச்சத்தைப் பரப்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

Comments
Post a Comment