Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

இரவோடு இவர்கள் - 6

 


அத்தியாயம் 6


நேரம் காலை ஏழு மணி!


அந்த பூட்டியிருந்த மருத்துவமனையின் முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, தன் நீளக் கால்களால் நிலத்தை அளந்து கொண்டிருந்தான், ஒரு இளைஞன். 


குண்டுவெடிப்பு நிகழ்வில் பாதிப்புக்குள்ளானோரின் வரவு எண்ணிக்கை அதிகரிக்கவும் அந்த பொது மருத்துவமனை சற்று அதிகமாகவே திணறிப் போனது. மருந்துகள், உபகரணங்கள் மற்றும் இன்னபிற பொருட்களின் பற்றாக்குறைக் காரணமாக 

நோயாளிகளின் உறவுகள் சிலருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. யாரும் யாரையும் சமாதானப்படுத்தும் நிலையில் இல்லையே? ஆக நோயாளிகளைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேற்றி, அந்த பெரிய கிரில் கேட்டை (grill gate) இழுத்துப் பூட்ட சொல்லிவிட்டனர் நிர்வாகத்தினர்.


ஆதலால் தான் அவன் மருத்துவமனை வாசலில் நடந்து கொண்டிருக்கிறானோ? ஆனால் மற்ற ஆட்கள் உள்ளே தங்கள் உறவுகளை நினைத்துப் பரிதவித்து நிற்கையில், இவன் மட்டும் நொடிக்கொருதரம் வெளியே தவிப்போடு யாரையோ எதிர்பார்த்து, பார்வையைச் சுழற்றி நீண்ட சுவாசத்தை வெளியேற்றிவிட்டு மீண்டும் நடையைத் தொடர்ந்தான்.


இவனோடு இன்னும் மூவரும் இருந்தனர். மூவரில் இருவர் பெண்மணிகள்; ஒருவர் ஆண்! ஒரு பெண்ணும் அந்த ஆணும் அவனின் அன்னை, தந்தை வயதையொத்தவர்கள்; மற்றொரு பெண் பாட்டியாக இருக்கக்கூடும். 


அவர்கள் இவனைப் போல் நடைபயிலாமல் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அவர்களின் பார்வைகளும் கூட மருத்துவமனை வெளி வாயிலிலேயே தவமிருந்தது. வெளியே போவோர், உள்ளே வருவோரென கசகசவென பல தலைகள் தெரிகிறது. அதில் இவர்கள் யாரை எதிர்பார்த்திருக்கிறார்கள்?


                  *********


தூக்கமற்ற இரவை வீதிகளில் கழித்திருந்த ரஃபீக் மற்றும் சசி காவல்நிலையத்தில் இருந்து விடுதிக்கு வந்ததும், முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவி தங்களை சுத்தம் செய்து கொண்ட பின், ஸ்ரீநிதியைப் பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினர்.


"நைட்டும் சாப்பாடு, தூக்கமில்ல. இப்பவும் யாரையோ பார்க்கப் போறேன்னு கிளம்பினா என்னடா அர்த்தம்?" - ராபி.


"ஹான்! இந்த ஊர்ல புது தங்கச்சி கிடைச்சிருக்குதுல? அதான் கொட்டிக்காம கூட அவளைப் பார்க்க ஓடுறானுங்க!" என்றாள் சீதா.


"ஹே கணக்கு! அந்த பிள்ளை எப்டி இருக்குதுன்னு பார்த்துட்டு வந்துடறோம்." - சசி.


ராபியிடம் திரும்பிய ரஃபீக், "ஆமா மச்சான், இந்நேரம் அவளுக்கு அவ ஆளு இல்லன்னு தெரிஞ்சிருக்கலாம். அவன் எப்டி இருக்கான்னு தெரிஞ்சிக்கறதுக்காகவே உயிர் வச்சிக்கிட்டு இருக்கேன்னு சொன்னா… அவளுக்காக தான நாங்க அவ்ளோ தூரம் போனோம்? இப்ப அவ எப்டி இருக்கான்னு தெரியாம என்னால எப்டி உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்க முடியும்?" எனக் கேட்டவன் பாலாவிடம், "நேத்து நீ அவளைப் பார்த்தியாடா?" எனக் கேட்க, உதட்டைப் பிதுக்கினான் அவன்.


"அங்கே அந்தப் பையனுக்கு இரத்தம் தந்துட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ரூம்-க்கு வந்திருக்கும் போதுதான் நீ போலீஸ் பிடிச்சு வச்சிருக்காங்கன்னு கால் பண்ணின. யார்ரா அவன் அத்தனைக் கேள்வி கேட்கறான்?"


"ஹாஹா... உன்னை மாதிரி ஒரு போலீஸ்காரன் தான்!"


"ம்ம், அவன்கிட்ட பேசிட்டு அப்புறம் மொபைலை சார்ஜர்ல போட்டுட்டு படுத்துட்டேன். சோ, உன் வாய்ஸ் மெசேஜ நான் பார்க்கலடா ரஃபீ! அடுத்து கொஞ்ச நேரத்துல இங்கே லோக்கல் போலீஸ் செக்கிங்னு வந்துட்டாங்க. எனக்கென்னவோ நீ சொல்ற போலீஸ்காரன்தான் அவங்களை இங்கே அனுப்பிருக்கணும்னு தோணுது. நாம சொன்ன உடனே அப்டியே எல்லாத்தையும் நம்பிட மாட்டாங்க." அதே துறையில் இருப்பதாலோ என்னவோ ஷக்திதரனை சரியாகவே கணித்தான் பாலா.


"இருக்கும்.‌ உன்கிட்ட பேசினப்புறம் கூட நம்பாம அங்குட்டு போய் ஹாஸ்பிடலுக்கும் கால் பண்ணி யார்கிட்டயோ பேசிட்டு வந்தாப்ல!"


"அவங்கள சொல்லி ஒண்ணுமில்ல. அவங்க நிலைமை அப்டி. சின்ன சின்ன விஷயத்தையும் விடாம ஆழமா இன்வெஸ்டிகேட் பண்ணி தான் ஆகணும். ப்ச்! இங்க செக்கிங் வந்ததும் அப்டியே டைம் போயிடுச்சு. நீங்க சொன்ன பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியல. இப்ப வேணா ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி அவப் பேரை சொல்லி என்ன கண்டிஷன்ல இருக்கான்னு கேட்போம். ரெண்டு பேரும் வந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க!" 


"இல்ல பாலா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடறோம்." முணுமுணுப்பாய் சொன்னவன் நில்லாமல் கிளம்பிவிட்டான். ஆமோதிப்பாய் தலையசைத்த சசியும் அவன் பின்னோடே போய்விட்டான். கை காயத்திற்கு கூட‌ மருந்திட்டுக் கொள்ளவில்லை.


'இவன்கள் என்னடா ஒரே இரவில் தங்கைக்கோர்‌ கீதம் பாடும் பாசப்பயிராக வளர்ந்து நிற்கின்றான்கள்!' என்று மற்ற மூவருக்குமே ஆச்சர்யம் தான்! கூடவே அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒரு ஈர்க்கும் நேசமிருக்க வேண்டுமென தோன்றியது. இல்லையெனில் இவர்களின் வரலாற்றில் ஏது சாப்பாடில்லா பொழுது?


மருத்துவமனை வாசலை நெருங்கும் போதே வளாகத்தினுள்ளே இருந்த கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. 


"என்னடா இது இவ்ளோ கூட்டம்?" - ரஃபீக்.


"அதான… கட்சி ஆளுங்க யாரையும் உள்ள அட்மிட் பண்ணிருப்பாங்களோ?"


"அவங்க ஏன் இங்கே வரப் போறாங்க?"


சற்று தயங்கிய சசி, "ண்ணா, ஒருவேளை யாராவது… யாருக்காவது… இல்லன்னா ஸ்ரீநிதி..." என இழுக்க,


அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவனுக்குமே உள்ளூர நடுக்கம் தான்! உள்ளங்கை சில்லிட ஆரம்பித்தது. ஆனாலும், "ச்சச்ச! அப்டிலாம் இருக்காது. இவ்ளோ கூட்டம் வர்றதுக்கு அவ என்ன அரசியல்வாதியா? வாடா பார்ப்போம்." என்றபடி கூட்டத்தினுள் நுழைந்தான்.


உள்வாயிலில் கேட் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் என்னவென்று விசாரிக்க, அவர்கள் சண்டைக் காரணமாக பூட்டிவிட்டார்கள் என்றதும்  இருவருக்கும் தன்னைப் போல் ஓர் ஆசுவாசப் பெருமூச்சுக் கிளம்பியது. பொதுவாக நாம் பெரிதாக ஏதோ வரப் போகிறது என்று பயந்திருக்கையில் பெரிய துன்பத்திற்கு பதில்  வருத்தமேற்படுத்தும் சின்ன வலியோடு போனால், அந்த வலியும் அற்புதமான ஆறுதலாகவே இருக்கும். அப்படித்தான் இப்போது நம்‌ நண்பர்களுக்கும் இருந்தது.


இப்போது ஸ்ரீநிதியை எப்படி சந்திப்பது என தங்களுக்குள் பேசியபடியே திரும்ப, இவர்களையேப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவன். சற்றுமுன்னர் வெளி வாயிலைப் பார்த்தபடி கால் கடுக்க நடந்து கொண்டிருந்தானே… அந்த இளைஞன்!


விழிகளை மட்டும் நகர்த்தியபடி இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். 


ரஃபீக், "என்னடா இது? இந்த ஊர்ல ஹீரோ மாதிரி இருக்கவனுங்க எல்லாம் நம்மள சந்தேகமாவே பார்க்கறானுங்க?" என அடிக்குரலில் சசியிடம் கேட்க,


"ஆமாண்ணா! அங்கே அந்த ஷக்தி; இங்கே இவன் யாரோ தெரியல! எனக்கென்னவோ அவங்களுக்கு உன்னைப் பார்க்க தான் கிட்னி திருட வந்தவன் மாதிரி தெரியுதுன்னு நினைக்கறேன்." என இவனும் மூன்றாமவனுக்கு கேட்காத வண்ணம் சொன்னான்.


ரஃபீக் தன் சின்னக் கண்களால் அவனை எரித்து பஸ்பமாக்க, அதற்கெல்லாம் அசராமல், "உன் கூட சேர்ந்து வந்ததுனாலதான் என்னையும் சேர்த்து பிடிக்கறானுங்க." எனவும்,


"நீ பிள்ளை பிடிக்கறவன் மாதிரி இருந்துக்கிட்டு என்னை சொல்றியாடா சுண்டெலி?" என்று பல்லைக் கடித்தான்.


இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதைப் பார்வை மாறாமலேயேப் பார்த்திருந்த இளைஞன், "நான் நிஜந்தன்!" என்றுரைத்து இருவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினான்.


'என்ன?' சடாரென திரும்பிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு முழித்தனர். 


"யாரு?" - ரஃபீக்.


இவர்கள் முழிப்பதைப் பார்த்த அவனும் தவறான ஆட்களிடம் வந்து பேசிவிட்டோமோ என நினைத்தான். இருவரின் தமிழிலும் உள்ள வேறுபாட்டைப் பார்த்த பின்புதான் பேசவே வந்திருந்தான். "நிஜந்தன்! நீங்கள் இந்தியா தானே?"


"ஆமா, நீங்க நிஜமாவே நிஜந்தனா?" கண்களை உருட்டி புருவங்கள் நெறிபட கேட்ட சசியின் குரலில் ஏராளமான வியப்பு!


அவனின் கேள்வி முறையில் இவனிதழ்களில் சிறு முறுவல் பூக்கப் பார்த்தது. "ஓம்!"


இரு தரப்பிலுமே சரியான ஆட்களிடம்தான் பேசுகிறோமா என சந்தேகமறத் தெரியாமல், வேற்று ஆட்களிடம் ஒரு பெண்பிள்ளையின்… அதாவது, ஸ்ரீநிதியின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லி பேசுவதற்கு தயங்கினர். 


அதோடு நம் நண்பர்களைப்‌ பொறுத்தவரையில் நிஜந்தன் தற்போது உயிரோடு இல்லையல்லவா? எனில் இவன் தான் நிஜந்தனென்று எப்படி நம்புவது? ஆச்சரியமும் குழப்பமுமாகவேப் பார்த்திருந்தனர். கூடவே மனதின் அடிப்பரப்பில் மெதுமெதுவாக ஒரு கதகதப்பு விரவுவதை உணர முடிந்தது.


"நீங்கள் நேற்று பின்னேரம் என்னைத் தேடினீர்களோ?"


"ஆமா ப்ரோ! அப்போ நிஜமாவே…"


"ஹய்யோ… நிஜமாகவே நிஜமான நிஜந்தன் நான்தான்." என்று தலையில் சத்தியம்‌ போல் கை வைத்து புன்னகை புரிந்தான். 


கேட்ட இருவருக்கும் இன்ப அதிர்ச்சி! கிட்டத்தட்ட பனிரென்டு மணி நேரமாக நெஞ்சையடைத்துக் கொண்டிருந்த ஒரு திடப்பொருள் விலகி, சில்லென்ற காற்று சுகமாய் தழுவுவதைப் போலிருந்தது. அதீத சந்தோஷத்தில் பேச்சும் மறந்தாற் போல் புன்னகை முகமாக நின்றிருந்தனர்.


நிஜந்தினிற்கு அவர்களின் மகிழ்ச்சி ஏனென்றுதான் புரியவில்லை. இதற்குள் மரத்தடியில் அமர்ந்திருந்த அந்த மூவரும் நிஜந்தனோடு வந்து நின்றனர். அவர்கள் ஸ்ரீநிதியின் பெற்றோர் எனவும், அந்த வயதான பெண்மணி அவளின் அம்மம்மா என்றும் நம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினான். 


நேற்று இவன் மருத்துவமனை வந்த சிறிது நேரத்திலேயே ஸ்ரீநிதியின் பெற்றோரும் வந்துவிட்டனர். அதற்கும் முன் அவளின் மாமா வீட்டிலிருந்த அம்மம்மா வந்திருந்தார். அவர்தான் அவளின் பெற்றோருக்கு தகவல் தந்து யாழ்ப்பாணத்திலிருந்து வர செய்திருந்தார்.


"எங்கட மகள் சொன்னதற்காக அவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்துருக்கிறீங்கள். ரொம்ப நன்றிப்பா." என்றார் அம்மா.


"உங்கள் ரண்டு பேருக்கும் ஏதாவது ஆகிருந்தா காலம் முழுவதும் எங்களால் நிம்மதியாக நித்திரை கொள்ள ஏலாது போயிருக்கும். நீங்கள் யாரென தெரியாமல், தேடவும் வழியில்லாமல்

நாங்கள் நேற்றையிலிருந்து இங்கேயே காத்திருக்கிறோம்." என்றார் அப்பா.


"அவேவ உங்களிட்ட இப்படியொரு உதவி கேட்டிருப்பாவென எனக்கு தெரிய இல்ல தம்பி. அப்போது நான் இங்கே வெளியே தான் நின்றிருந்தன். நானிருந்திருந்தா அந்த விசரி (பைத்தியக்காரி) தலையில் வடிவா ரண்டு போட்டிருப்பன்." என்று பேத்தியைத் திட்டிய பாட்டி, "உங்கட நல்ல மனதிற்கு ஒரு குறையுமில்லாம நல்லா இருப்பீங்க." என்று மனதார ஆசிர்வதித்தார்.


"தாங்க்ஸ் பாட்டி. ஸ்ரீநிதி எப்டி இருக்கா?" - ரஃபீக்.


"கடவுள் உங்களைப் போல நல்லவர்களை அனுப்பியிருக்கேக்க அவேவுக்கு என்ன குறை வந்துவிடப் போகிறது?" என்றவர் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.


"ஓம் தம்பி! நிஜந்தனைப் பார்த்ததுமே அவளின் இதயத்துடிப்பு சீராக ஆரம்பித்துவிட்டது எண்டு சொன்னார்கள். நீங்களும் அதைக் கொண்டுதானே அவனைத் தேடிப் போனீர்கள்." என்ற அப்பா மீண்டும் நன்றியுரைப்பதைப் போல் ரஃபீக்கின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.


'அப்போ உண்மையிலேயே இவன்தான் அவனா?' என்ற பாவனையோடு இருவருமே மீண்டும் நிஜந்தனைப் பார்க்க, அவன் வசீகர புன்னகையோடு புருவங்கள் ஏற்றி இறக்கினான்.


அப்பாவிடம், "ஏன் சார், இவர்தான் நிஜந்தனா?" என இன்னமும் நம்ப மாட்டாமல் கேட்ட சசியைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் நிஜந்தன்.


"ஏன் உங்களுக்கு இவ்வளவு சந்தேகம்?" 


'நீ தவறிவிட்டதாக கேள்விப்பட்டோம்' என எப்படி சொல்ல முடியும்? மீண்டும் ஒருவரையொருவர் பார்த்தபடி திருதிருத்தனர்.


"அப்போ நேத்து நைட்டெல்லாம் எங்கே ப்ரோ போனீங்க?" - ரஃபீக்.


"எங்கேயும் போகயில்ல. ஆறு மணிதியாலத்தில் வந்தவன் இங்கேதான் இருந்தன்."


இந்த இரு தரப்பிற்கும் தெரியாத ஒரு விடயம் நமக்குத் தெரியும். அது, நேற்று‌ மாலை இவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது வேகமாக ஓடி வந்த ஒருவன் சசியின் மேல் மோதினானே? அவன்தான் இவன்! இந்த நிஜந்தன்! 


அப்போது பரதேசி கோலத்தில் வந்த நிஜந்தனை இவர்களுக்கும், இவர்களை திரும்பிக் கூட பாராமல் சென்ற நிஜந்தனுக்கும் அந்த நிகழ்வே மறந்துவிட்டிருந்தது.


உண்மையில் நேற்றிரவு ஷக்திதரனிடம் நம் நண்பர்கள் மாட்டிக்கொண்ட பின், அவரை மருத்துவமனை எண்ணிற்கு அழைத்துக் கேட்க சொன்னார்களல்லவா? அப்போது ஸ்ரீநிதியுடன் சேர்ந்து அவரிடம் பேசியதே இந்த நிஜந்தன்தான்!


'என்னைத் தேடி தான் வந்திருக்கிறார்கள். நான் இங்கேதான் இருக்கிறேனெண்டு சொல்லுங்கோ.' என இவன் சொல்ல,


இவர்கள் அந்த நேரத்தில் வீதி உலா போனதற்கு வேறெந்த நோக்கமுமில்லை என்று உறுதிபட்ட பின்னர், தன் வேலை முடிந்ததென அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் ஷக்திதரன். ஆனாலும் நிஜந்தன் மருத்துவமனையில்தான் இருக்கிறானென ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நண்பர்கள் இருவரும் நேற்றைய‌ இரவை சிறிதேனும் நிம்மதியாக கழித்திருப்பார்களல்லவா?


அந்த நேரம் இருந்த டென்ஷனில் அவரும் அதனை பெரிய விடயமாக எண்ணியிருக்கவில்லை. ஒருவேளை இவர்கள் இருவரும் நிஜந்தன் தவறிவிட்டான் என்று தாங்கள் அறிந்திருந்த அந்த உறுதியற்ற செய்தியை சொல்லியிருந்தால் கூட, அவரும் நிச்சயமாக உண்மையை சொல்லியிருப்பார்.


இதற்கு பெயர் தான் விதியோ என்னவோ? யார் கண்டது!


"அப்புறம் எப்டி? நேத்து உங்க ஏரியாக்காரர் ஒருத்தர் உங்களை… நீங்க…" படபடவென பேச ஆரம்பித்த சசி, கேள்வியை எப்படி கேட்கவென புரியாமல் நிறுத்தினான்.


"நீங்க நேத்து காலைல ஸ்ரீநிதியைப் பார்க்க சர்ச்-க்கு போகலயா ப்ரோ?" எனக் கேள்வியை மாற்றிக் கேட்டான் ரஃபீக்.


நிஜந்தன் சற்று சங்கடமாக அருகிலிருந்த ஸ்ரீநிதியின் பெற்றோரைப் பார்த்துக்கொண்டான். "போனன். ஆனால் உள்ளே போக முதல் எக்ஸ்ப்ளோஷன் ஆகிட்டுது. முதலில் பதற்றத்தில் என்ன செய்ய எண்டு ஒண்டும் புரியேல்ல. பின்னர் ஸ்ரீயைத் தேடிக்கொண்டு போனனான். ஆனால் அவளைத் தான் எங்கும் பார்க்க முடியேல்ல. அந்தக் கூட்டத்தில் என்ர மொபைலும் தொலைந்து போனது. அதையும் நான் முதல் கவனிக்க இல்ல. ஸ்ரீக்கு கொல் செய்யப் பார்க்கேக்க தான் கவனித்தனான். பின்னரும்…" என்று சொல்லிக் கொண்டே வந்தவன், மீண்டும் அவள் பெற்றோரைப் பார்த்துவிட்டு தரையைப் பார்த்தபடி தொடர்ந்தான்.


"ஸ்ரீ உள்ளே மாட்டிக் கொண்டாளோ எண்டு… ஒவ்வொரு உடலாகப் பார்த்து…" என்றவனால் அதற்கு மேல் தொடர முடியவில்லை. பாவம் அவனும் நேற்று முழுதும் ஒரு நிலையில் இருந்திருக்கவில்லை என்பது இப்போதும் கூட அவன் தவிக்கும் தவிப்பிலிருந்தே புரிந்தது.



இவன் சில உடல்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் காவல்துறையினர் உள்ளே மிஞ்சியிருந்த அனைவரையும் அவசரகதியில் அப்புறப்படுத்தினர். அப்போது மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அங்கிருந்த ஸ்தூலத்தில் தலையை பலமாக இடித்துக் கொண்டான் நிஜந்தன். நெற்றியில் இரத்தம் வழிய வழிய ஸ்ரீநிதியைத் தேடி பைத்தியக்காரனைப் போல் தேவாலய வளாகத்தைச் சுற்றி வந்தவனை மயக்கம் வந்து தன் பிடிக்குள் இழுத்துக்கொண்டது.


ஒருவேளை அப்போது தெரிந்தவர் யாரேனும் அவனைப் பார்த்துவிட்டு, அவர்கள் தெருவில் நிஜந்தன் தவறிவிட்டான் என்றிருக்கலாம். எங்கும் உண்மையை விட வதந்தியின் வேகம் அதிகமல்லவா?


"பின்னர் பின்னேரம் பக்கத்தில் இருக்கும் கிளினிக்கில் தான் விழித்தேன். சர்ச்சில் பலியான உடல்களை இங்கே கொண்டு வந்திருப்பதாகக் கேட்டதுமே விரைவா ஓடி வந்தனான்." என்றான். 


"ஓ!" 


'எவன் கிளப்பிவிட்டான்னு தெரியலயேடா…' எனும் பாவனையில் மீண்டும் இருவரும் பார்த்துக் கொண்டனர். 


நிஜந்தனுக்கு இவர்கள் நேற்றைய இரவை அந்த பெரிய அடுக்குமாடியிலும் கடற்கரையிலும் கழித்தது தெரியாதல்லவா? ஆக பொதுவாகக் கேட்டான். "நீங்கள் எப்படி? இரவு ஸேஃபா வந்துவிட்டீர்களா? பொலீஸ் கொல் செய்தார்களே… நான் வந்துவிட்டேன் என்றேன்." எனவும்,


"ஹான் ப்ரோ! ஸேஃப் தான்." என்ற ரஃபீக், 'யோவ் சக்தீஈஈ…' ஒரு வார்த்தை சொல்லவில்லையேயென மனதினுள்ளேயே ஷக்திதரனுக்கு பொங்கல் வைத்தான்.


"எதையோ சொல்ல தயங்குறீங்க? நேற்று எங்கட ஏரியாவுக்கு போனீர்களா? எல்லோரையும் பக்கத்தில் இருக்கும் மண்டபத்திற்கு போகும்படி வெளியேற்றிவிட்டதாக அம்மா சொன்னார்கள். ரொம்ப தேடினீர்களா? ஸொரி..."


ஷக்திதரனின் மேல் கொதிப்பிலிருந்த சசியும் இதற்கு மேல் முடியாதென, "போனோம் ப்ரோ. அங்கே தான் ஒருத்தர் உங்க வீட்ல உங்களோட சேர்த்து ரெண்டு பேர் டெத்-னு சொன்னார். அந்தப் போலீஸூம் நீங்க வந்துட்டீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லல. நைட்டெல்லாம் உங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம் ப்ரோ." என்று போட்டுடைத்தான்.


"அட, தவறான தகவல்! யார் சொன்னார்களென தெரியேல்ல. என்ர அண்ணனும் நேற்றைக்கு இரவு வரை வரவில்லையெனவும் யாரோ இப்படி சொல்லிட்டீனம். ரொம்ப ஸொரி… நான் ஸ்ரீயைத் தான் திட்டினன்." என்று வருந்தினான். 


"ஓம் தம்பி! எங்கட பிள்ளை செய்த குழப்படி தான்! நாடிருக்கும் நிலையில் இரு அண்ணாமாரை நிஜந்தன் சுகத்தைக் கேட்டு வர அனுப்பினனெண்டு சொல்லவும் நானும் நன்றாக திட்டிப் போட்டன். நாடு தாண்டி வந்தவர்களை இப்படி அலைகழித்துவிட்டா." என கோபமாக பேசினார் அப்பா.


உண்மையிலேயே தங்களால் இருவர் இக்கட்டில் மாட்டிக் கொண்டார்களென பயந்து போனார்கள். அதுவும் வேற்று நாட்டவர்கள் வேறு. இருவரையும் பார்க்கும் வரையிலும் அவர்களும் ஒரு நிலையில் இல்லை. உள்ளிருக்கும் மகளை விட இவர்களுக்காக தான் பரிதவிப்புடன் காத்திருந்தனர். இன்று இருவரும் வந்திருக்கவில்லையெனில் விசாரிக்க தூதரகம் வரையிலும் கூட சென்றிருப்பர்.


"பரவால்ல சர். எங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல." என்றான் சசி.


"ஸ்ரீ சொன்னதும் நான் உங்களைத் தேடி கிளம்ப தான் இருந்தனான். ஆனால் நான் அருகே இருந்தால் அவள் நிலைமை சீராகும் எண்டு டொக்டரர் சொல்லி போட்டார். அதனால் தான்..." என்று தயங்கினான் நிஜந்தன்.


தங்கள் முன் சங்கடமாக நின்றிருந்தவர்களை இலகுவாக்க அத்தோடு அந்த பேச்சை விடுத்தான் ரஃபீக். "யூ டோண்ட் பானிக் ப்ரோ. ஸ்ரீநிதியை எப்போ பார்க்க முடியும்?"


பயணிக்கும்✈️....

Comments

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...