இறுதி அத்தியாயம்
இதயம் முறையற்று துடிப்பதை 'அரித்மியா' என்பார்கள். அதாவது இதயத்துடிப்பு பெரியவர்களில் நிமிடத்திற்கு 100 துடிப்புகளுக்கு மேல் இருந்தால் 'டாக்ரிக்கார்டியா' (tachycardia) எனவும், நிமிடத்திற்கு 60 துடிப்புகளுக்குக் குறைவாக இருந்தால் 'பிராடிகார்டியா' (bradycardia) எனவும் அழைக்கப்படுகிறது.
இங்கு தன் முன்னால் இருந்த அத்தனை உயிர்களும், பிரம்மாண்ட கட்டிடமும் வெடித்து சிதறியதைக் கண்டிருந்த ஸ்ரீநிதிக்கு ஏற்பட்டிருந்தது டாக்ரிக்கார்டியா! அரித்மியாவின் மூலம் நிகழும் நிகழ்வுகள் தீவிரமானவை அல்ல என்றாலும், ஒரு சில நபரை பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாக்குகின்றன. சில திடீர் மரணங்களும் நிகழ்கின்றன.
ஸ்ரீநிதிக்கு அரித்மியாவின் மூலம் ஏற்பட்டிருப்பது இதய செயலிழப்பிற்கான அறிகுறி மட்டுமே! அதாவது மூச்சிரைப்பு! நம் உடலில் மோட்டார் பம்ப் போல செயல்படும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும் இரத்தத்தை நிரப்புவது மற்றும் வெளியேற்றும் செயலை செய்கிறது. ஏதேனும் காரணத்தால் இந்நிகழ்வு சீர்குலையும்போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது.
மற்றும்படி பயமோ, பதற்றமோ அல்லது வேறு ஏதேனும் உடல் ஏற்றுக்கொள்ள முடியா உணர்வுகளோ எதுவாயினும், அந்த நேரத் தாக்கத்திற்கான மூச்சிரைப்பு குறைந்து சீராகும் வரையில் முதலுதவி போதுமானது.
ஸ்ரீநிதிக்கு உயர் இரத்த அழுத்ததால் மோசமான மூச்சிரைப்பின் பொருட்டு பிராணவாயு (oxygen) குழாயைப் பொருத்தியிருந்தார்கள். ஆனால் அதற்கே அதீத பயம், நடுக்கம், அதிர்ச்சி மற்றும் நிஜந்தனைக் காணாத கவலையில் இருந்தவள், தான் இறக்கப் போகிறோமென்று நினைத்துக் கொண்டுவிட்டாள்.
அதையே தான் அவள் முதலில் சசியிடமும் சொல்லியிருந்தாள். அவர்களும் அவள் நிலைமையைப் பார்த்துவிட்டு அவள் இறக்கப் போகிறாளென முடிவு செய்துவிட்டனர்.
ரஃபீக்கும் சசியும் ஸ்ரீநிதியிடம் நிஜந்தனின் முகவரியைக் கேட்டுக்கொண்டு வெளியேறியதும், நிஜந்தனும் சற்று நேரத்தில் அவளின் பெற்றோரும் வர, யாருமற்ற அனாதையாக சாகப் போகிறோம் என்று நினைத்திருந்தவளுக்கு அவர்களின் வரவில் அக்குறை நீங்கியது. அதுவே அவள் இதய செயல்பாட்டை முன்னேற்றமடையச் செய்தது.
முக்கியமாக நிஜந்தனுக்கு ஒன்றுமில்லை. அவன் தன்னருகில்தான் இருக்கிறான் என்ற எண்ணமே அவளைப் புத்துயிர் கொள்ளச் செய்தது. அவனின் நுனிவிரல் ஸ்பரிசமும் நெற்றி முத்தங்களும் பேருவகையாய் இருந்தது.
இருவரின் காதலைப் பார்த்த அவளின் பெற்றோர் பிள்ளை பிழைத்து வந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்திருந்தனர். அவளும் எழுந்து உட்காரும் நிலைக்கு வந்துவிட்டாள். சரிதான், சாய்ந்துகொள்ள அவள் நிஜந்தனின் மார்பு காத்திருக்கையில் அவள் ஏன் இன்னும் படுக்கையில் கிடக்கப் போகிறாளாம்?
அன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றிருந்தார்கள். இப்போது நம் நண்பர்கள் பார்க்க முடியுமா என்று கேட்டதற்கிணங்க, அவளை வெளியே அழைத்து வந்தார் அம்மா. முகம் சோர்வாக இருப்பினும் கண்கள் காதலில் பளபளத்துக் கிடந்தது. இவளின் காதல் கிடைத்த இந்த நிஜந்தன் பெரும் பாக்கியசாலி என்று தோன்றியது.
வந்ததும் இருவரையும் பார்த்து, "ஸொரி அண்ணா…" என்றாள்.
அதைக் கண்டுகொள்ளாமல், "உன் ஆளைப் பார்த்ததும் சார்ஜ் ஏறின சிட்டி ரோபோ மாதிரி எந்திரிச்சிட்ட போல?" என்று கலாய்த்தான் சசி.
அவள் இதழின் ஓரம் வெட்க புன்னகை இழையோடியது. அதை நிஜந்தன் ரசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பாவிடம் ரஃபீக், "சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க சர்!" என்று பரிகசிப்பாய் சொல்ல,
"அய்யோடா! நான் இன்னும் படிக்க வேணும் அண்ணா!" என்றாள்.
"ஓம், நானும் படிக்கிறா எண்டுதான் நினைத்திருந்தனான். ஆனால் பாருங்கள்... யாழிலிருந்து இங்கே வந்து அவேவ அம்மம்மாவுக்கும் தெரியாமல் மாதமொரு முறை சர்ச் போகிறா." என்று தன் மனத்தாங்கலை வெளிப்படுத்தினார் அப்பா.
சிறிது சங்கடமான சூழ்நிலை! சம்பந்தப்பட்ட இருவரும் தலைகுனிந்து நின்றிருந்தனர்.
"விடுங்க சர்! இதோட போயிடுச்சுன்னு நினைச்சுக்குவோம். அவர் நல்லவரான்னு மட்டும் பார்த்து அவங்க வீட்ல பேசுங்க!" என்றான் ரஃபீக்.
"ஓம் தம்பி! இனி அதைத் தான் செய்ய வேணும்."
ஸ்ரீநிதி, "தாங்க்ஸ் அண்ணா. உங்களுக்கு தான் கனக்கக் கஷ்டம் தந்துட்டனான். அப்பா வந்து திட்டிப் போட்டதுமே தான் புரிந்தது." இன்னுமே அவள் முகத்தில் வருத்தம் விரவிக் கிடந்தது.
"அட விடும்மா!"
பாட்டி, "இலங்கையில் உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது எண்டு மறவாதீங்க தம்பி. எங்கட ஸ்ரீ-க்கு அண்ணாமார் இல்லை. இனி நீங்கள் தான் அவளின் அண்ணாமார்." எனவும்,
"அப்போ நீங்க எங்க பாட்டியா?" என்று சசி கண்சிமிட்ட,
"ஓம், நான்தான் உங்கட மச்சான்." என்று நிஜந்தனும் அவன் கேலியில் கலந்து கொள்ள,
சடுதியில் அவ்விடம் கலகலப்பு
சாயம் பூசிக்கொண்டது. ஸ்ரீயின் கல்யாணத்திற்கு அழைப்போம் கட்டாயம் வர வேண்டும் என்று கட்டளையிட்டார் அம்மா. அவர்களின் பேரன்பில் நனைந்தவர்கள் நிறைவான மனதுடன் விடுதி திரும்பினர்.
********
மறுநாள் நண்பர்கள் ஐவரும் அறையில் கவலையாக அமர்ந்திருந்தனர்.
“ப்ச்! நாம வந்த நேரம்தான் இப்டி ஆகணுமா?” - ராபி.
“முந்தாநாள் மட்டும் மொத்தம் ஏழு இடத்துல பாம் ப்ளாஸ்ட் பண்ணிருக்காங்கடா” - பாலா.
“ஆமாண்ணா! நம்ம போகணும்னு நினைச்ச Zion Churchல கூட நடந்திருக்குது” - சசி.
“ஆமா, St. Antony Shrine, St. Sebastian Church, Zion Church, Shangri-La Hotel, Cinnamon grand Hotel, The Kingsbury, New Tropical Inn.” என்று வரிசையாக அடுக்கினான் பாலா.
“ச்ச ௭வ்ளோ உயிர் போயிருக்குது தெரியுமா?” - ரஃபீக்.
“ம்ம் டா! கவர்ன்மெண்ட் ஒரு கணக்கு சொல்லுது. ஆனா போன உயிர் அதிகம்.” - பாலா.
“ஈஸ்டர்க்கு சர்ச்க்கு போன பாதி பேர் வீடு திரும்பலயாம். நியூஸைப் பார்த்தாலே மனசைப் பிசையுது.” - சீதா.
அலைபேசியைக் காட்டிய சசி, “அண்ணா இங்கப் பார்த்தீங்களா? 25kg C4 model இந்த வகையான பாம்ஸ் தான் இத்தனைப் பேரோட உயிரை ௭டுத்தது.” ௭ன்றான்.
“ஹ்ம்ம்.. தற்கொலைப் படைல 180பேர் சுத்துறதா தகவல். சோ, 180*25kg = 4500kg வெடிமருந்து. யோசிச்சுப் பாருங்கடா ௭வ்ளோ பாதிப்புன்னு!” - பாலா.
“௭துக்குடா இப்டிலாம் பண்றாங்க? யாரு பண்ணினாங்க?” - சீதா.
“ஏதோ ஐ௭ஸ் இயக்கமாம்.” - பாலா.
“ஹ்ம்ம்... ஃப்ரைடே கூட கல்முனைன்ற இடத்துல நடந்திருக்காம். அங்க 15பேர் இறந்திருக்காங்கடா” - சீதா.
“ஆமா கணக்கு, வெள்ளிக் கிழமை தொழுகைக்கு பள்ளிவாசல் கூட நிறைய பேர் போகலயாம்.” - ரஃபீக்.
“தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் இந்த ரெண்டு அமைப்புகளை இந்த ஊர் ப்ரசிடென்ட் சிறிசேனா பான் (ban) பண்ணிருக்கார். ரெண்டு அரசியல்வாதிங்களைக் கூட அரெஸ்ட் பண்ணிருக்காங்க.” - ராபி.
“கண்டிப்பா அவங்க உதவி இல்லாம அவ்ளோ வெடிமருந்து ஊருக்குள்ள கொண்டு வந்திருக்க முடியாது.” - ரஃபீக்.
“இதுவரை 120பேருக்கு மேல அரெஸ்ட் பண்ணிருக்காங்க. இன்னமும் இன்டர்போல் போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க. கொழும்புல கொம்பனி வீதின்ற இடத்துல இருக்க பள்ளிவாசல்ல 46 வாள் இருந்ததாம்.” - பாலா.
“அப்போ நாம இப்போதைக்கு ஊருக்கு போக முடியாதா?” - சீதா.
“நாளைக்கு ஒரு நாள் பார்க்கலாம், கணக்கு. ஃப்ளைட் ஏற கொழும்பு போகணும்தானே? இங்கே விட அங்கே ரொம்ப கலாட்டாவா இருக்கும்.” - பாலா.
“இதுக்கு இந்த ஊர் கவர்ன்மென்ட் ௭ன்ன ஆக்ஷன் ௭டுத்திருக்காங்க? - ராபி.
“பாம் ஸ்க்வாட் முக்கியமான ப்ளேஸ்ல சர்ச் பண்ணி பாம்ஸ் ரிமூவ் பண்றாங்க. வெளியே அங்கங்க ஆர்மிக்காரங்க நிற்கறாங்க. சந்தேகப்படுற மாதிரி இருக்கவங்களைப் பிடிக்கறாங்க.” - ரஃபீக்.
“அப்டீனா நீ வெளில போய்டாத! உன் வைஃப்க்கு பதில் சொல்ல முடியாது - ராபி.
“ச்சீ போ! வெள்ளை பூதம்!!” சொன்னவாறே சசியைத் திரும்பிப் பார்த்த ரஃபீக், “நீ ஏண்டா சைலண்ட் ஆகிட்ட?” எனக் கேட்டான்.
“௭ன்னண்ணா?”
“இல்ல, அமைதியா இருந்த… ஏதாவது கேளு!”
“௭ப்போ ண்ணா ௭னக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்க?”
ஸ்ரீநிதி, நிஜந்தன் மற்றும் அவர்கள் குடும்பத்தை சந்தித்துவிட்டு வந்த போதே ரஃபீக், சசி இருவரும் பழைய நிலைக்கு மீண்டிருந்தனர். தாங்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் வேற்று நாட்டில் இருக்கிறோம் என்ற கவலை கூட பின்னே போயிருந்தது.
“டேய்ய்ய்… சுண்டெலி!”
“அதுக்கு வளரணும் தம்பி.” - ராபி.
“காம்ப்ளான் குடிச்சா வளரலாமாம்டா.” - சீதா.
“அப்போ காம்ப்ளான் குடிக்கறவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிடுமா கணக்கு?” - சசி.
இவர்களின் விளையாட்டுப் பேச்சில் எரிச்சலான பாலா, காவல்காரனாய் மாறிக் கத்தினான். “௭ல்லாருக்கும் இப்போ லாடம் கட்டப் போறேன் பாரு! நாம ௭வ்ளோ பெரிய இக்கட்டுல இருக்கோம்னு புரியாம ௭ன்னடா இது ஜோக்கடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க?”
“அதுக்குனு ௭ப்பவும் உன்னை மாதிரி விறைப்பாவே இருக்க முடியுமா மச்சி?” - ரஃபீக்.
“ரஃபீ, ௭ப்பவும் சீரியஸாவே இருக்க மாட்டியாடா நீ? புரிஞ்சிக்கோடா. சோஷியல் நெட் வொர்க்ஸ்லாம் ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்க. ஊர்ல ௭ல்லாரும் நம்மள நினைச்சு பயந்துட்டு இருக்காங்க. தோ… இந்த ரெண்டு பொண்ணுங்களயும் நம்மள நம்பி அவங்க வீட்ல அனுப்பிருக்காங்க. பத்திரமா கொண்டு போய் விடணும். வெளில போகவே முடியல. நாம கொழும்பு போய் ஃப்ளைட் ஏறணும். ௭ன்ன பண்றதுனு நானே டென்ஷன்ல இருக்கேன்.”
“அதுலாம் போய்டலாம் பாலா. கவலைப்படாதே!" என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே விடுதி வரவேற்பில் இருந்து இன்டர்காம் அழைத்தது.
எடுத்துப் பேசிய பாலாவின் கண்கள் சிரித்தன. ஆனால் பயமுறுத்தும் த்வனியில் ரஃபீக், சசி இருவரையும் பார்த்தவாறே சொன்னான். "உங்களைப் பார்க்க போலீஸ் வந்திருக்குதாம்."
"போலீஸா!?" - சசி.
"எதுக்காம்?" - ரஃபீக்.
"நேத்து ஒரு ராத்திரிலயே ஊர்ப்பட்ட பிரச்சினையை இழுத்து வச்சிருக்கானுங்க போல!" என்று தலையில் அடித்துக்கொண்டாள் சீதா.
அவள் பின்னந்தலையில் தட்டிவிட்டு எழுந்து போனான் ரஃபீக். அவன் பின்னால் சசியும்! அங்கே ஷக்திதரன் அமர்ந்திருந்தார்.
இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து, "இருவரும் சுகம்தானே? பிரச்சினை ஒண்டுமில்லையே?" என நலம் விசாரித்தார்.
"அதுலாம் ஒண்ணுமில்ல சர்! நீங்க..." எனக் கேள்வியாக பார்த்தான் ரஃபீக்.
"முதல் உங்க ரண்டு பேரிட்டையும் ரொம்ப ஸொரி கேட்டுக்கறன். நான் உங்கட நண்பர் யார், அவர் இங்கு தங்கியிருப்பது உண்மை தானா எண்டுதான் க்ராஸ் செக் செய்ய சொன்னனான். அவர்கள் உங்களையும் சிரமப்படுத்தீட்டீனம். வெரி ஸொரி டூ போத் ஓஃப் யூ!"
மன்னிப்பு கேட்பவரிடம் வேறு என்னத்தைச் சொல்ல முடியும்? சம்பிரதாயமாக, "பரவால்ல சர். நாங்களும் உங்கக்கிட்ட சொல்லிட்டு வரல. அட்லீஸ்ட் உங்க நம்பராவது வாங்கிருக்கலாம்." என்றான் ரஃபீக்.
"இப்போ நோட் செய்துகொள்ளுங்கோ.” எனவும், எதற்காம் என்று கேட்கத் தோன்றினாலும், மறுக்காமல் அவரின் எண்ணைக் குறித்துக் கொண்டான்.
"நேற்று உங்கட உதவி இல்லன்னா என்னால் அத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருக்க ஏலாது. நமக்கென்ன எண்டு போகாமல் சரியான நேரத்தில் நீங்கள் தந்த தகவல்தான் அத்தனை பேரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனக்கும் பதவி உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உங்களிருவருக்கும் ரொம்பவே தாங்க்ஸ்!" என்று கம்பீர புன்னகையோடு இருவரின் கரங்களையும் பற்றிக் குலுக்கினார்.
"வித் ப்ளஷர் சர். வாழ்த்துகள்!" - சசி.
"தாங்க்ஸ். எங்கட நாட்டிற்கு வந்து நீங்க சிரமப்படும்படி ஆகிவிட்டது. இனியும் ஒருவருக்கும் ஹெல்ப் எண்டு தெரியாத இடத்தில் மாட்டிக் கொள்ளாதீங்க." உண்மையான அக்கறையோடே சொன்னார்.
அதற்கு மென்னகையோடு பதிலுரைத்தான் ரஃபீக். "உதவி செய்ய போனதுனால இப்போ ஒண்ணும் எங்களுக்கு குறைஞ்சிடல சர். நாம ஹெல்ப் பண்றவங்க நாம செஞ்ச உதவியையும் நம்மளையும் மறந்து, நம்மள இக்னோர் பண்ணும் போதுதான் ஏண்டா தலை குடுத்தோம்னு இருக்கும். அந்த நிராகரிப்புதான் பெரிசா வலிக்கும்."
"உங்கள பார்த்தா ஹை டெஸிக்னேஷன்ல இருக்கவர் மாதிரி தெரியுது. அப்டிப்பட்ட நீங்களே வேலை முடிஞ்சதுன்னு எங்களை நிராகரிக்காம, நாங்க செஞ்ச ஹெல்ப்-க்காக நேரடியா வந்து தாங்க் பண்றீங்க! அதோட உங்களுக்கு கிடைச்சிருக்க பிரமோஷன்ல எங்களுக்கும் சந்தோஷம்தானே சர்?" - சசி.
"அண்ட் மோர்ஓவர் நேத்து நாங்க பண்ண உதவினால எங்களுக்கு இங்கே அம்மா, அப்பா, தங்கச்சி, பாட்டி, மச்சினன்னு ஒரு பெரிய ஃபேமிலியே கிடைச்சிருக்காங்க சர். கல்யாணத்துக்கு கூட இன்வைட் பண்ணிருக்காங்க. ஹாஹா… " பெரிதாக புன்னகைத்தான் ரஃபீக்.
அவன் சிரிப்பில் கலந்து கொண்ட சசி, "ஆமா சர், ஹெல்ப்பு நல்லது!" என்றான்.
இருவரின் பேச்சிலும் வியந்த ஷக்திதரன் புன்னகையுடன் மீண்டும் ஒருமுறை நன்றியுரைத்தார். மேலும் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவர்கள் நாடு திரும்ப, தான் உதவுவதாக சொல்லி விடைபெற்றார்.
*******
கொழும்பு சர்வதேச விமான நிலையம்.
சொன்னதைப் போலவே ஷக்திதரன் அவர்கள் அரசாங்கத்தில் தன் பதவி மூலம், நண்பர்கள் எந்தவித சிரமுமில்லாமல் நாடு திரும்ப உதவியிருந்தார்.
அவர்களை வழியனுப்ப ஷக்தியோடு நிஜந்தனும் வந்திருந்தான். சசியும் அவனும் ஒரு ஓரமாக தத்தம் அலைபேசிகளோடு ஐக்கியமாகியிருந்தனர். பெரிதாக ஒன்றுமில்லை. இருவரும் முகநூல் கணக்குகளின் முகவரியைப் பரிமாறி, நட்பு அழைப்பு விடுத்து, நண்பர்களாகி, சசியின் மொக்கைப் பதிவிற்கும் நிஜந்தன் ரியாக்ஷினான். இருவரும் மாறி மாறி தங்கள் மற்றைய சமூக ஊடகப் பக்கங்களையும் பகிர்ந்து கொண்டனர். இடையிடையே இருவரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டனர்.
சசி, தொண்ணூறுகளின் ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்ற போன்மியைப் (meme) பார்த்துவிட்டு சொன்னான். "நீ மட்டும் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிடாத மச்சான். எனக்கும் உங்க ஊர்லயே நல்லப் பொண்ணா பார்த்து வை!"
"ஏன் மச்சான் உங்கட ஊரில் பெட்டைகளுக்கு (பெண்கள்) பஞ்சமாகிப் போனதா?"
"எங்க ஊர் பொண்ணுங்களுக்குள்ள ட்டூ ஹண்ட்ரட் கோவை சரளாஸ் டூரோஃப்ளெக்ஸ் மேட்ரஸ் போட்டு படுத்திருக்காங்க. அடிவாங்கறதுக்கு நம்ம பாடி தாங்குதுப்பா." என்று இவன் உடலை சிலிர்த்துக்கொள்ள, அனைவரும் திரும்பிப் பார்க்கும்படி பலமாகச் சிரித்தான் நிஜந்தன்.
"உன் ஆளு இருந்தா இந்நேரம் உன் சிரிப்பைப் பார்த்து சொக்கிப் போயிருப்பா!" என்று அதற்கும் கமெண்டடித்தான் சசி.
நடைமுறைகள் முடிந்து அனைவரும் கிளம்பும் நேரமும் வந்தது.
"இனி எப்போது எண்டாலும் நீங்க இலங்கை வரலாம். இங்கே உங்களுக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் போல, ஒரு நண்பனும் இருக்கிறான் என்பதை மறவாதேங்கோ." என்று தன்னைக் குறிப்பிட்டுச் சொல்லி, ரஃபீக்கின் கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கி விடைகொடுத்தார் ஷக்திதரன்.
💣சுபம்💣



Nice story. Super
ReplyDeleteThank u 💝🎈
Delete