அத்தியாயம் 2
காலையில் ஸ்ரீ அழைப்பெடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பற்றி சொன்னதிலிருந்து, இங்கே நண்பர்கள் ஐவரும் பேயறைந்ததைப் போல் அமர்ந்திருந்தனர். காலையில் இருந்து வெளியே எங்கும் போகவில்லை.
வெளியே ஆட்கள் நடமாடவே ஏகக் கெடுபிடியாக இருந்தது. ஆக தற்போது நாடு திரும்புவதைப் பற்றியும் யோசிக்க வழியில்லை. ஐவரும் அறையிலேயே அடைந்துக் கிடந்தனர். பெண்களுக்கு அது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் ஆண்களால் அப்படி நாள் முழுவதும் ஒரே அறைக்குள் இருப்பது பாரிய துன்பமாக இருந்தது.
எனவே மாலையில் ஆண்கள் மூவரும் வெளியே போய் நாட்டு நடப்பின்(?) நிலவரத்தை அறிந்து வருவதாகச் சொல்லி புறப்பட்டனர். அது ஒன்றும் அத்தனை சுலபமாக இருந்து விடவில்லை.
முதலில் இவர்கள் போவதற்கு வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. இவர்கள் இருந்த விடுதியின் பின்னால் சற்று தொலைவிலேயே ஒரு பெரிய மருத்துவமனை இருந்ததால், சாலையோரமாகவே நடந்து அங்கே போய் பார்த்துவிட்டு வரலாமென நினைத்தார்கள். ஆனால் ஆங்காங்கே நின்றிருந்த இராணுவ வீரர்கள், இவர்களை நிறுத்தி வைத்து விசாரித்து மீண்டும் விடுதிக்கு திரும்பிச் செல்ல எச்சரித்து அனுப்பினர்.
நம்மூர்க்காரர்கள் இதற்கெல்லாம் அடங்கிவிடுபவர்களா என்ன? அதுவும் இந்த ரஃபீக் இருக்கிறானே… எதற்கும் அடங்க மாட்டான். "அவங்க அப்டி தான் சொல்லுவாங்க. நீ வா மச்சான், நாம வேற வழில போவோம்." என்றான், ரவுடியைப் போல்!
"ஆமாண்ணா ரூம்லயே எவ்ளோ நேரம் தான் அடைஞ்சு கிடக்கறது?" என சசியும் அவனுக்கேற்ப பேச, விடுதி இருந்த சாலையையும் மருத்துவமனை சாலையையும் இணைக்கும் நீண்ட குறுக்குத் தெரு வழியாக நடந்தனர்.
மருத்துவமனை வாசலிலும் இராணுவத்தினர் ரோந்து பணியில் நின்றிருந்தனர். வளாகத்தினுள் ஆங்காங்கே நின்றிருந்த நோயாளிகளைப் பார்க்கும் போதே நம் நண்பர்களுக்கு மனம் கனத்துப் போனது. எங்கும் அழுகுரல்கள்! மரண ஓலங்கள்! குருதியில் தோய்ந்த சின்னஞ்சிறு பட்டாம்பூச்சி குழந்தைகள்!
"வாங்கடா யாருக்காவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்ப்போம்." என்று இங்கும் தன் கடமையுணர்ச்சியில் பேசிய பாலாவை, வினோதமாகப் பார்த்தான் ரஃபீக்.
"டேய் அப்பா! இதென்ன நம்மூருன்னு நினைச்சியா? உனக்குள்ள இருக்க போலீஸ்காரனை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணி வை! வந்தோமா சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு போனோமான்னு இல்லாம…" என்றபடி திரும்பிப் பார்க்க, அருகிலிருந்த சசியைக் காணவில்லை.
"எங்கடா இங்கிருந்த சுண்டெலியைக் காணும்?"
"பின்ன? நீ டயலாக் பேசி முடிக்கறவரை இருப்பானாக்கும்?"
"இப்ப இவனை எங்கேன்னு போய் தேடுறது?"
"இங்க தான் எங்கேயாவது இருப்பான். நீ போய் பாரு! நான் அந்தப் பெரியவரைப் பார்த்துட்டு வர்றேன்." என்று நகர்ந்தான் பாலா.
ரஃபீக்கிற்கு சசியின் மேல் கடுங்கோபம் வந்தது. பாலா வேறு உதவி என்று ஒருபுறம் நகர்ந்ததும் எரிச்சலைக் கிளப்பியது. இன்று வெளியில் வந்ததே பெரும் தவறென்று தோன்றியது. இதை வெளியே கிளம்பும் முன் யோசித்திருக்க வேண்டும். காலம் கடந்த பின் 'அய்யோ' என்றால் ஆச்சுதா? கடுப்புடனே சசியைத் தேடிச் சென்றான்.
தனித்தனி பிரிவுகள் என்றில்லாமல் தேவைகளின் பொருட்டு ஆங்காங்கே சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன. அங்கே மருத்துவ உபகரணங்கள் அடங்கிய டிராலிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களின் சப்தங்கள், இங்குமங்கும் ஓடும் மருத்துவ ஊழியர்களின் காலடியோசைகள் என கலவையான ஒலிகள் நிறைந்திருந்தன.
'அந்த பேஷண்ட்டுக்கு மூச்சிரைக்குது. கெதியா வாங்கோ!'
'டூர்னிகெட் ஹிஸ் ஹேண்ட்! கிம்மீ அ காஸ் (gauze)!'
'என்ர மகனை இந்த கோலத்தில் பார்த்து இன்னும் நாங்கள் உயிரோட இருக்க வேணுமா?'
'முன்னேரம் தான் ஊரிலிருந்து வந்தாள். அதற்குள் இப்படியாகி போனதே!'
இப்படியான அவசர மற்றும் அவலக்குரல்களையும் உதிரத்தில் உறைந்த உடல்களையும் அவஸ்தையுடன் கடந்து சென்றான். மனம் கலங்கியது. எங்கே உடைந்துவிடுவோமோ என்று எச்சிலை விழுங்கி, நெஞ்சில் கைவைத்து நின்றிருக்கையில் கண்ணில்பட்டான், சசி!
விடுவிடுவென அவனருகே செல்ல செல்ல தான் புரிந்தது, அவன் அந்த நீண்ட காரிடார் போன்றிருந்த இடத்தில் இடமும் வலமுமாய் போடப்பட்டிருந்த படுக்கைகளின் நடுவே ஒரு படுக்கையில் இருக்கும் நோயாளி பெண்ணோடு பேசிக் கொண்டிருக்கிறானென்று!
பல்லைக் கடித்தபடி அவனருகே போய் முறைக்க, இவன்புறம் திரும்பிய சசி, "ண்ணா, இந்த பொண்ணு ஏதோ ஹெல்ப் கேக்கறாங்க…" என்று இழுத்தான்.
"டேய் ஹெல்ப்பு கில்புன்னு செல்ஃப் ஆப்பு வச்சிக்காதே சொல்லிட்டேன்! ஒழுங்கு மரியாதையா நடையைக் கட்டு!" பாலாவின் மேலிருந்த எரிச்சலும் சேர்ந்து மொத்தமாய் இவன் மேல் திரும்பியது.
"அண்ணா!" அந்த பெண் தான் நம் ரஃபீக்கை அழைத்தாள்.
அவளுக்கு மேல் காயம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் மூச்சுவிடுவதற்காக ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டியிருந்தார்கள். அதனை எடுத்துவிட்டு தான் மூச்சுத்திணறலோடு பேசிக் கொண்டிருந்தாள்.
அடிபட்டு மருத்துவமனை படுக்கையில் தன் இறுதி நேரங்களில் இருப்பவள், அதுவும் அண்ணன் என்று அழைப்பவளிடம் எங்ஙனம் கோபத்தைக் காட்டுவது என்றும் தெரியவில்லை. சசியின் மீதான கோபத்தைக் கட்டுப்படுத்தவும் இயலவில்லை. வேறு வழியில்லாமல் அடக்கப்பட்ட கோபத்துடன் அந்தப் பெண் சொல்வதை செவிமடுத்தான்.
ஒரு செவிலியர் அவளிடம், "கனக்கக் கதைக்காதே (அதிகம் பேசாதே)!" என்று கண்டித்தபடி கடந்து போனார்.
"எங்கட ஊர்... யாழ்ப்பாணம்!" என்றாள் அவள்.
"யாழா? அப்புறம் எப்டிமா இங்கே வந்த?"
"அது… எங்… ஒரு ஃப்ரெண்ட்-ஐப் பார்க்க வந்தனான்."
"சரி, பார்த்தியா?"
"ல்ல… அதுக்குள்ள…" பேச முடியாமல் திக்கினாள் பெண்.
"பாம் ப்ளாஸ்ட் ஆன இடத்துல மாட்டிக்கிட்டியா?"
"ஓம்!" என்றவளை அதற்கு மேல் பேச அனுமதிக்காத சசி, "ண்ணா, அவங்க ஃப்ரெண்டுக்கு சொல்லணுமாம். அதான் நம்ம ஹெல்ப் கேக்கறாங்க." என்றான்.
"இவ்ளோ தானா? உன் ஃப்ரெண்ட் நம்பர் சொல்லும்மா! உன் நிலைமையை சொல்லி வர சொல்றோம்." என்று வேகமாக அலைபேசியை எடுத்தான் இவன்.
சசி, "ண்ணா… அதில்ல…" என்று இழுக்க,
"வேறென்னடா?" புருவங்கள் நெறித்துக் கேட்டான்.
"அது… அவங்க ஃப்ரெண்ட்… பாய் ஃப்ரெண்டாம்…"
'ஓ! அப்டியா?' என்று பார்த்தவன், "சரி பாய் ஃப்ரெண்ட் மொபைல் வச்சிருக்க மாட்டாரா? அந்த மொபைலுக்கு ஒரு நம்பர் இருக்காதா?" என, தான் பாயிண்டாகப் பேசி விட்டதாக நினைக்க,
"மொபைலுக்கு ஒரு நம்பர் இல்ல; பத்து நம்பர் இருக்கும்." என்று நேரங்காலம் தெரியாமல் கடுப்படித்தான் சசி.
அந்நிலையிலும் சிரிக்க முயன்றாள் அவள்.
அதனைக் கண்ட ரஃபீக், "வேறென்ன பிரச்சினை?" என்று பற்களை நறநறத்தான்.
"ஏற்கனவே கொல் செய்து பார்த்தன்… ஸ்விட்ச்ட் ஆஃப் எண்டு வருகிறது." என்றாள் அவள்.
"ஆமா ண்ணா! அதான் நாம ஒரு எட்டு போய் பார்த்துட்டு…"
"எதே?!" சசியை முடிக்க விடாமல் கத்தியிருந்தான் ரஃபீக். "டேய் நாமளே வேற நாட்டுக்கு வந்து எப்பேற்பட்ட இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கோம்? இதுல சமூகசேவை செய்ய கிளம்பிட்டியா நீ?"
"நீங்கள் வெளிநாட்டு ஆக்களா?" - அவள். இருவரின் தமிழிலும் வேறுபாடு தெரிந்தாலும் உறுதிபடுத்திக் கொள்ள நினைத்தாள்.
"ஆமாம்மா, நீ உங்க ஊர் ஆளுங்க யாருக்கிட்டயாவது கேளேன். அவங்களுக்கு குறுக்குவழிலாம் தெரிஞ்சிருக்கும். நாங்க வெளியே இருக்க ஆர்மி ஆளுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டா பிரச்சனையாகிடும்." என்ற ரஃபீக்கை இடைமறித்தான் சசி.
"ப்ச்! அதுலாம் நாங்க பார்த்துக்கறோம்-ங்க. நீங்க கவலைப்படாதீங்க. கண்டிப்பா உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்றோம்." என்று அவளிடம் உறுதிமொழி போல் சொன்னான்.
சொன்ன கையோடு தன்னை கொலை காண்டோடு பார்க்கும் ரஃபீக்கை சற்றே தூரமாக தள்ளிக் கொண்டு வந்தான். "ண்ணா, பாவம் ண்ணா! கடைசி நேரத்துல இருக்க பொண்ணுக்கிட்டப் போய் முடியாது சொல்ல உனக்கு எப்டி மனசு வருது?"
"டேய்!! நம்ம டப்பாவே இங்க டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்குதாம்; நீ அதுல டப்பாங்குத்துக்கு டபுள் ட்யூன் போடப் பார்க்கறியா?" என்று ஏகத்துக்கும் எகிறினான்.
"அய்யோ அண்ணா! இப்டி போய் தகவல் சொல்லிட்டு வரப் போறோம். அவ்ளோதான்! அந்த பையன் வீடு இங்கேதான் எங்கேயோ பக்கத்துல தான் இருக்குதாம்."
"சசி, அவன் ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்-னா பக்கத்துல இருக்க கடைக்கோ இல்ல அவன் ஃப்ரெண்ட்ஸ் யாருக்கோ ஃபோன் அடிச்சா வந்துட போறான். இதுக்கு எதுக்குடா நாம போகணும்?"
"ண்ணா, அவனும் இவளை மீட் பண்ண தான் வந்தானாம். அதான் அவன் நிலைமையும் எப்டி இருக்குமோன்னு இந்த புள்ள பயப்படுது. அது நிலைமையைப் பார்த்ததானே? போறதுக்கு முந்தி அவன் நல்லா இருக்கான்னு தெரிஞ்சா நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்னு சொல்லுது."
சில நொடிகள் சிந்தித்த ரஃபீக், "எனக்கென்னவோ இதுல தலை கொடுக்கறது சரின்னு படல சசி." என்றான் புருவச் சுளிப்போடு!
"இத்தனைப் பேர் இருக்காங்களே… ஏண்ணா அந்தப் பொண்ணு நம்மக்கிட்ட மட்டும் கேட்கணும்?"
"ஏன்னா உன் மூஞ்சில தான் இளிச்சவாயன்னு எழுதி ஒட்டிருக்குது!" எரிச்சல் குறையவில்லை இவனுக்கு!
"ப்ச்! சரி நீ ரூம்-க்கு போ! நான் போய் அவன்கிட்ட சொல்லிட்டு வர்றேன்." என்றுவிட்டு நகர,
"டேய் டேய் இரு! இந்த போலீஸ்காரன்கிட்ட என்னத்த சொல்லப் போற? அவனும் என்னை மாதிரி வேணாம்னுதான் சொல்லுவான்." என்று பாலாவைக் குறிப்பிட்டான்.
"வாங்க, அவர்கிட்ட நான் கேக்கறேன்." என்று சொல்லிக் கொண்டிருக்கையில்,
ரஃபீக் அங்கே மற்றொரு நோயாளியைப் பார்த்து கொண்டிருந்த ஒரு செவிலியரைப் பிடித்து வைத்துக் கேட்டான். "அந்த அஞ்சாவது பெட்ல இருக்க பொண்ணுக்கு என்ன பிரச்சினை சிஸ்டர்?"
'அதிர்ச்சி, அதனால் ஏற்பட்ட இதய செயலிழப்பு!' என்று அவசரகதியில் சொல்லிவிட்டு நில்லாமல் அவரை அழைத்த மருத்துவரின் பின் ஓடினார் அவர்.
'பாவம் அவளுக்கு சின்ன வயது தான்!' என்று வருந்தியவர்கள் பாலாவைத் தேடினர்.
சில நிமிடத் தேடலுக்கு பின்னர் இவர்களின் பார்வைக்குக் கிடைத்தான் பாலா. பார்த்ததும் இவர்கள் இருவரின் பார்வைகளும் ஸ்தம்பித்து நின்றன. பாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனுக்கு இரத்ததானம் செய்து கொண்டிருந்தான்.
"என்ன ஹீரோ! மக்கள் துயர் துடைக்க வந்துட்டீங்களா?" எனக் கேட்க,
"பார்த்துட்டு சும்மா போக மனசு வரல மச்சி!" என்று அருகிருந்த படுக்கையைப் பார்த்தான். அதில் நான்கு வயது சிறுவன் ஒட்டிய வயிறும், எலும்பு துருத்திய மார்புமாய் ஆக்ஸிஜன் மாஸ்க்கோடு கிடந்தான். மார்பின் இடப்பக்கத்தில் கைப்பகுதியை கந்தகம் காவு வாங்கியிருந்தது. அவனைப் பார்த்த மூவருக்கும், அங்கிருந்த செவிலியப் பெண்ணுக்கும் கூட கண்கள் பனித்தது.
'கடவுளில் கோரம்;
மனிதத்தில் ஈரம்!'
பாலாவிடம் இவர்கள் அந்தப் பெண்ணின் விடயத்தை சொல்ல, சற்று சிந்தித்த பாலா, "சரி போய்ட்டு வாங்க. வேற எந்த பிரச்சினைலயும் மாட்டிக்காதீங்க! எதுவும்னா எனக்கு கால் பண்ணுங்க. போறதுக்கு முன்னாடி சீதா, ராபிகிட்ட நைட் வர லேட்டாகும்னு சொல்லிட்டு போங்க." என்றான்.
சரியென்றவர்கள் பாலாவிற்கு பழரசம் மட்டும் தருவித்துத் தந்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு விபரம் கேட்க போனார்கள்.
மருத்துவமனை கடிகாரத்தின் கண்ணாடிக்குள் பெரிய முள் ஆறிலும், சிறிய முள் பன்னிரென்டிலும் செங்குத்தாக நின்று ஒரு நிமிடம் அவ்விடத்தைப் பார்த்து, அங்கிருந்த மனிதப்பிறவிகளுக்காக இயந்திரத்தனமாய் இரக்கப்பட்டு விட்டு, அடுத்த நிமிடம் அடுத்தக் கோட்டிற்கு நகர்ந்தது.

Comments
Post a Comment