Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

இரவோடு இவர்கள் A Ceylon trip ✈️-4

 

இரவோடு இவர்கள் A Ceylon trip ✈️


அத்தியாயம் 4


ரஃபீக் மற்றும் சசி அந்த தெருவின் உள்ளிருந்து வந்தவரிடம் நிஜந்தனைப் பற்றி விசாரிக்க, அவர், "நிஜந்தன் வீட்டை அவன் உட்பட இருவர் பலி எண்டு கேள்வி!" என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்து வியப்பு மாறாமலேயே சொல்லிவிட்டு, இருவரின் பாவனைகளையும் உள்வாங்கிக் கொண்டு உண்மையிலேயே அவன் நண்பர்கள்தான் போலும் என்று உறுதிபடுத்திக் கொண்டவர் மேலும் சொன்னார். 


"இண்டைக்கு விடிய வெள்ளன (அதிகாலையில்) வெளிக்கிட்டவன் எதற்காக சர்ச்சில் போனானெண்டு தெரியேல்ல. ஈஸ்டருக்கு ஃப்ரண்ட்ஸைப் பார்க்க போயிருப்பானெண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். அங்கேதான் இப்படியாகி போனதே? அநேகமாக அவனுடலைக் கூட நீங்கள் சொன்ன ஹொஸ்பிடலில் தான் வைத்திருக்க வேணும்." என்று பேசிக் கொண்டே போனவர், "அந்த ஃப்ரண்ட்ஸ் நீங்கள்தானா?" எனக் கேட்க,


'இல்லை, ஸ்ரீநிதி!' என்று மனதினுள் சொன்னவர்கள் வெளியே 'ஆம்' என்று தலையசைத்து வைத்தனர். 


'மருத்துவமனையில் நிஜந்தனுக்கு வேண்டியவர் யார் இருக்கிறார்?' என்று கேட்க வந்தவர், பின் தனக்கு நேரமாவதை உணர்ந்து, "நான் வெளிக்கிட வேணும். என் சின்னப் பிள்ளைக்கு இளைப்பு வந்திட்டுது. நீங்கள் அந்த ஹொஸ்பிடல் டொக்டரர் யாரிடமாவது 'தம்பிராசாவின் மகன் நிஜந்தன்' எண்டு கேளுங்கோவன். நான் வாறன்." என்று நடையை எட்டிப் போட்டார்.


சற்றுநேரம் இருவரும் பிரமைப் பிடித்தவர்கள் போல் நின்றிருந்தனர். ஆரம்பத்தில் வேண்டாத வேலை என்ற ரஃபீக்கிற்கு கூட மனதில் பாரமேறிக் கொண்டது. கண்களில் நீரோடு 'அண்ணா!' என்றழைத்த ஸ்ரீநிதியின் முகமே மனதில் வந்து நின்றது.


நிஜந்தன் மேல் எத்தனைக் காதலை வைத்திருந்தால், அவன் நலத்தினைத் தெரிந்து கொண்டபின் போய் சேருகிறேன் என்பாள்? இப்போது அவன் உன் மனதில் தவிர, இவ்வுலகிலேயே இல்லை என்று எப்படி சொல்வது? சொன்ன மறுகணம் இவளும் தன்னவனைத் தஞ்சம் புகுந்துவிடுவாளோ! நினைத்துப் பார்க்கவும் பிடிக்கவில்லை. 


'அண்ணன்' என்று அழைப்பில் கூட உதவி கேட்பதற்காக என்றில்லாமல் உள்ளார்ந்துதான் அழைத்தாள். ஒருவேளை அந்த சகோதரத்துவ விளிப்பா?, அவளின் கண்ணீர் முகமா?, புன்னகையா? அல்லது அனைத்துமா? தெரியவில்லை. ஏனோ ஸ்ரீநிதியின் இறப்பு என்ற ஒன்றை மனம் ஏற்க மறுத்தது.


இப்போதைக்கு அவளிடம் நிஜந்தனைப் பற்றிய உண்மையை சொல்வதில்லை என்ற முடிவுடன் இருவரும் திரும்பி நடந்தனர். ஆனால் வரும்போது இருந்த எச்சரிக்கை உணர்வு, திரும்பும்போது இருவருக்குமே இல்லை. வரும்போது நாலாப்புறமும் பார்வையை செலுத்தி சசியை வழிநடத்தி வந்த ரஃபீக், இப்போது முற்றிலும் கலங்கியிருந்தான்; சுற்றுப்புறத்தை மறந்திருந்தான்.


முகம் தெரியா நிஜந்தனுக்காக வந்த கலக்கம்! அவனுக்காக காத்திருக்கும் காதலின் உயிர் பறிபோகப் போவதில் வந்த கலக்கம்! யாரோ ஒருவர்தானே என்று நினைக்க முடியவில்லை. 


சசி இறுகிய இதழ்களோடும் கண்ணீரை உள்ளிழுத்தவாறும் நடந்தான். இருவரும் கவனமற்று வந்ததன்‌ விளைவு, அங்கே ரோந்துப் பணியில் இருந்தவர்களிடம் மாட்டிக்கொண்டனர்.


நேரம் இரவு ஒன்பது மணி.


"இந்த நேரத்துல எங்கே ஊர்கோலம் போறீங்கள்?" அந்த அதிகாரி அதட்டலாகக் கேட்டார்.


காவலர் பணிக்காகவே பிறவியெடுத்தாற் போன்ற தோற்றம்! வயது பின்னிருபதுகளில் இருக்கலாம்.


"ஃப்ரெண்ட பார்க்க வந்தோம் சார்."


"யார்? எந்த ஃப்ரண்ட்?"


"அது…"


"நிரஞ்சன்... இல்ல நிஜந்தன்."


இருவரின் தடுமாற்றத்தில் ஏதேனும் தேச விரோத இயக்கங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென சந்தேகமற ஊர்ஜிதம் செய்து கொண்டவர், "நாட்டில் இப்படியொரு சம்பவம் நடக்கேக்க நீங்கள் இப்படி தான் உம்மட பாட்டுக்கு இரவிரவா வீதியை சுற்றுவீனமா? கேட்டால் ஃப்ரண்டாம் ஃப்ரண்டு! நடவுங்க. எதையாவது சாட்டிக் கொண்டு எங்கள் உயிரை எடுக்க வேண்டியது!" என அதிகாரிகளுக்கே உரிய தோரணையில் கேட்க,


"சார் ப்ளீஸ்… நிஜமா நாங்க நிஜந்தனைப் பார்க்க தான் வந்தோம். ஜெனரல் ஹாஸ்பிடல்ல அவருக்கு வேண்டியவங்க தான் எங்களை இங்கே அனுப்பி வச்சாங்க. வேணும்னா ஹாஸ்பிடல் நம்பருக்கு நீங்க கால் பண்ணி கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்." என்று கலக்கத்திலிருந்து வெளி வந்திருந்த ரஃபீக்கும் அவர் கண்களைப் பார்த்து மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பேசினான்.


"இருவரும் இந்தியாவா?"


"ஆமா சர்! எங்க ஃப்ரெண்ட் பாலா கூட போலீஸ்தான். ஹாஸ்பிடல்ல ப்ளெட் டொனேட் பண்ணிட்டிருக்கார்." என்று வேகமாக பாலாவையும் அழைத்துவிட்டிருந்தான்.


யார் என்னவென்று விசாரித்து, பாலாவையும் நம்பாமல் அவன் குறிப்பிட்ட மருத்துவமனைக்கும் அழைப்பெடுத்து யாரிடமோ பேசிவிட்டு, ஸ்ரீநிதியையும் விட்டு வைக்காமல் இவர்களின் அங்க அடையாளங்களைக் கேட்டு, இவன் சொன்ன விவரங்களை உறுதிப்படுத்திக்கொண்டார், அந்த அதிகாரி. 


பின், "இனி இப்படியெல்லாம் வெளிக்கிடக் கூடாது. விளங்குதா?" என்றவர், அப்போதும் இருவரின் அலைபேசி எண்களையும் குறித்துக்கொண்டு, உடைகளையும் சோதித்துவிட்டு அனுப்பிவிடச் சொன்னவரின் கவனம் வேறு பாதசாரிகளிடம் சென்றுவிட்டது. 


'நல்லவேளை தப்பித்தோம்' என்ற ரஃபீக்கின் ஆசுவாச பெருமூச்சு பாதியிலே நின்று போனது. காரணம் வழக்கம் போல் அருகேயிருந்த சசியைக் காணவில்லை.


மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டான். 'இப்போ எங்கிட்டு போய் ஒளிஞ்சுச்சு இந்த சுண்டெலி?'


நல்லவேளை இவனை விசாரித்தவரின் கவனம் அடுத்து வந்த ஆட்களிடம் இருக்க, உடையை சோதனை செய்ய வந்தவரிடம், "அவன் கொஞ்சம் மூளை சரியில்லாதவன் சர். நான் போகலனா ரொம்ப தூரத்துல வேற எங்கேயாவது ஓடிடுவான்." என்று அநியாயமாக சசியின் நட்டைக் கழட்டிவிட்டான்.


சற்று முன்னர் இவரின் சீனியர் மருத்துவமனைக்கு அழைத்து ஸ்ரீநிதியிடமும் பேசி உண்மை தன்மையை ஆராய்ந்திருந்ததால், "ஊரிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட ஆக்களைத் தான் இரவில் கூட்டிக்கொண்டு வருவதா?" என்று கடிந்து கொண்டவர், இவனின் சட்டைப் பாக்கெட்டுகளை மட்டும் சோதித்துவிட்டு, "கெதியா போய் பாருங்கோ!" என்று அனுப்பி வைத்தார்.


வேகமாக நடந்தவாறே அந்த இருட்டுப் பாதைகளில் எல்லாப் பக்கங்களிலும் விழிகளை நகர்த்தினான் ரஃபீக். ரோந்துப் பணியில் இருக்கும் ஆட்களிடமிருந்து தூரமாக சென்றபின் சசியின் கைப்பேசிக்கு அழைத்தான்.


"ண்ணா! உனக்கு வலதுபக்கம் போற பாதைல இருக்க புதர்கிட்ட இருக்கேன். சீக்கிரம் வா!" என்றான் சசி.


'இன்று அவன் மண்டையைப் பிளந்துவிட வேண்டும்' என்ற வெறியில் விறுவிறுவென நடந்த ரஃபீக், அங்கு அவன் நிலையைப் பார்த்து அதிர்ந்து நின்றான்.


"டேய் சசி! என்னடா ஆச்சு?"


"முதல்ல கையைக் குடு!"


அவனைத் தூக்கி நிற்கச் செய்தபின் மீண்டும் அதேக் கேள்வியைக் கேட்டான் இவன்.


"யாருன்னு தெரியல ண்ணா. நாலு பேர் இருந்தானுங்க. ஏதோ வேற மொழில பேசின மாதிரி இருந்தது. நான் சும்மா ஒரு ஆர்வத்துல தான் என்ன பேசறாங்கன்னு பக்கத்துல போய் நின்னேன். அப்டிங்கறதுக்குள்ள கன்-அ (gun) தூக்கிட்டானுங்க." என்று விரல் சொடுக்கினான்.


நல்லவேளை சசி கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து மறுபக்கம் இருந்த புதரின் பின்வந்து விழுந்து மறைந்து கொண்டான். அப்போது கத்தவும் கூட வழியில்லாமல் போனது! அனைத்தையும் சொன்னவனின் வலது கன்னத்திலும், வலது கையிலும் சிராய்த்து தோல் வழன்றிருந்தது.


துப்பாக்கியைத் தூக்கியவர்களும் இவனால் சத்தம் கேட்டு, வந்த வேலையை முடிக்காமல் போக நேரிடுமென சென்றுவிட்டார்களாம்.


"எந்தப் பக்கம்டா போனானுங்க? வா, பார்ப்போம்!"


மறுத்துத் தலையசைத்தவன், "நாம தனியா போறது ஸேஃப் இல்லண்ணா! ஆர்மி ஆளுங்க ரெண்டு பேரைக் கூட்டிட்டுப் போகலாம், ஈவன் பாம் ஸ்க்வாட்!" என்றவனை நடுக்கத்தோடு பார்த்தான் ரஃபீக்.


"ஹான்?"


"எஸ்’ணா! தே ஹேவ் எக்ஸ்ப்லோஸிவ்ஸ்!"


"சசி…" இதெல்லாம் நமக்கு தேவையா என்று அறிவின் ஒருபகுதி கேட்க தான் செய்தது. ஆனால் கண்முன் ஆபத்து நிகழவிருக்கிறது என்று தெரிந்த பின் விட்டுவிட்டு போகவும் மனம் வரவில்லை. இந்த சுற்றுப்பகுதியில் தங்களைப் போல் எத்தனை உயிர்கள் இருக்கக்கூடும்? நடக்கவிருக்கும் நிகழ்வு நாளை பின்னர் செய்தியாக வரும் போது, தன்னால் குற்றவுணர்வின்றி தண்ணீரையும் குடிக்க முடியுமா?


"யோசிக்க வேணாம்ணா!"


"ஆனா அவங்க நாம சொல்றதை நம்புவாங்களா?" என்று சற்றுமுன் தங்களை நிறுத்தி வைத்து விசாரித்த காவல்துறையும் இராணுவத்துறையும் குழுமியிருந்த பகுதியைப் பார்த்தான். 


அந்த மனிதரின் துளைக்கும் பார்வையும் சிக்கியவர்களை விசாரிக்கும் கடுமையான தோரணையும், 'அவர் தாங்கள் சொல்வதை நம்புவாரா?' என்று யோசிக்க வைத்தது. இருப்பினும் கண்மூடித்தனமாக நடந்து கொள்ளாமல், தாங்கள் சொன்னதற்காக உண்மையை விசாரித்தறிய முற்பட்டதே அவரின் நேர்மையைக் காட்டுவதாக இருந்தது.


"சொல்லிப் பார்ப்போம்." என்றான் சசி.


"ஹ்ம்ம்!" 'வா' என தலையசைத்து, சற்று முன்னர் தாங்கள் நின்ற இடத்திற்கு சசியை அழைத்துப் போனான். அங்கே அந்த அதிகாரியிடம் விடயத்தைச் சொல்ல, முதலில் ரஃபீக் நினைத்ததைப் போலவே நம்பாமல் தன்‌ சந்தேக விழிகளால் இருவரையும் ஆழம் பார்த்தவர், சசியின் காயங்களைக் கண்டும் இருவரிடமும் பொய்யில்லை என்பதை உணர்ந்தும் மீண்டும் தெளிவாகச் சொல்லுமாறு கேட்டார்.


"எத்தனை ஆக்கள் இருந்தார்கள்?"


"நாலு பேர் சர்!"


"பார்க்க எப்படி இருந்தார்கள்? உடைகள்?"


"நார்மல் கைஸ் சர்! ரொம்ப கேஷூவலா இருந்தாங்க. அதனால தான் நானும் கவனமில்லாம இருந்துட்டேன்." என்று தன் கையைப் பார்த்துக் கொண்டான்.


"எந்தப் பக்கம் போனார்கள்?"


சசி வலிக்கும் தன் வலக்கையை ஒடுக்கிக்கொண்டு இடக்கையால் பாதையைக் காட்ட, "டேம்ன் இட்! அந்தப் பக்கம் வினிதா அபார்ட்மெண்ட்ஸ் இருக்கிறது!!" என்று அதிர்ந்தவர், வெடிகுண்டு படையில் (bomb squad) பேசி தன்னோடு ஒரு சிறு குழுவை அழைத்துக்கொண்டார்.


இவர்கள் இருவரையும் பார்த்து, "அடையாளம் காட்ட நீங்களும் வர வேணும்." என்றுவிட்டு நகர்ந்தார்.


சசி, "நீ போய் அந்தப் பொண்ணைப் பாருண்ணா. அவக்கிட்ட உண்மையை சொல்ல வேணாம். இருக்கற வரை அவ ஆளு நல்லா இருக்கான்னு நினைச்சுக்கட்டும்!" என்றவனின் கண்கள் சிவந்து குரல் கரகரத்தது.


"ப்ச்! அங்கே போயிட்டு உன் நிலைமை என்னாச்சோன்னு யோசிச்சிட்டு இருக்க முடியாது. நான் பாலாவுக்கு ஆடியோ மெசேஜ் போட்டுடறேன். அவன் ஸ்ரீநிதியைப் பார்த்துப்பான்."


இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அந்த பக்கம் போய்விட்டு வந்த அந்த அதிகாரி, இருவருக்கும் லைஃப் ஜாக்கெட் கொண்டு வந்து தந்தார். சிறிது கலக்கத்தோடே அதனை அணிந்து கொண்டனர்.


ஐந்து பிரிவுகளையும் ஒவ்வொரு பிரிவும் பத்து தளங்களையும் கொண்ட தொடர் அடுக்குமாடிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய வளாகம் அது! ஒவ்வொரு தளத்திலும் சராசரியாக ஐந்து வீடுகள், வீட்டிற்கு இருவர் என்று வைத்துக் கொண்டாலுமே, இங்கே ஐநூறு உயிர்கள் இருக்கும் என்று கணித்தான் ரஃபீக்!


அந்த பகுதி முழுவதும் இரவின் நீட்சியில் நீளும் நிசப்தம்! கட்டிடத்தின் முன்புறம் நீண்டு செல்லும் பாதை. பின்புறம் கடற்கரை. இடப்பக்கம் ஒரு பள்ளி மற்றும் தியேட்டர். 


முன்புறம் ஒவ்வொரு ப்ளாக்கிற்கும் உள்ள செக்யூரிட்டிகளைத் தவிர வேறு ஆட்கள் யாரும் இருப்பதைப் போல தெரியவில்லை. சசியை அடித்த ஆட்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்துவர அவனோடு இருவரைக் கட்டிடத்தின் பின்பக்கம் அனுப்பினார் அந்த அதிகாரி.


அவரோடு ரஃபீக்கை மட்டும் வைத்துக் கொண்டு, மீதமிருந்த நால்வரை ஒரு ஒரு ப்ளாக்கிற்கும் அனுப்பி செக்யூரிட்டியிடம் சொல்லி, குடியிருக்கும் மக்களை ஆர்பாட்டமின்றி வெளியேற்றுமாறு பணித்தார். ரஃபீக்கைக் கட்டிடத்தை விட்டு தூரமாக போய்விட சொல்ல, தானும் வந்தால் உதவியாக இருக்குமென மறுத்துவிட்டான். 


இவர்கள் நின்றிருந்த நுழைவாயிலில் இருந்த செக்யூரிட்டியோடு இருவரும் மேலேறினார்கள். அந்த அசாத்திய அந்தகாரத்தில் இவர்களின் காலடி சப்தங்கள் அபாயத்திற்கு அறைகூவுவதான பிரேமையை ஏற்படுத்தியது.


முதல் மாடியில் முதல் வீட்டின் முன் நின்ற செக்யூரிட்டி, வீட்டின் காலிங்பெல்லை ஒலிக்கச் செய்து கொண்டிருக்கையில், இவர்கள் இருவரும் ஆளுக்கொரு வீட்டின் அழைப்புமணியை அழுத்திவிட்டிருந்தனர்.


இப்படியாக எமர்ஜென்ஸி என்று சொல்லி அங்கிருந்த மக்களை ஒரே நேரத்தில் வெளியேற்றினர். கூச்சலும் குழப்பமுமாக அவ்விடம் சில நிமிடங்கள் பெரும் களேபரமாகக் காட்சியளித்தது. அவர்களின் அந்நிமிடங்கள் பரபரப்பாகக் கடந்தது.


ரஃபீக்கும் தன்னால் முடிந்த மட்டும் வேகமாக செயல்பட்டான். அப்போது நான்காவது மாடியில் சசியை விடவும் இளையவனாகத் தெரிந்த, இருபது வயது மதிக்கத்தக்க ஒருவன், கீழிறங்கும் லிஃப்ட்டில் ஒரு கண்ணும் மேலே செல்லும் படிக்கட்டுகளில் ஒரு கண்ணுமாக பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தான். 


ரஃபீக், "ப்ரோ! இங்க நின்னு என்ன பண்றீங்க? வயசானவங்க யாருக்காவது ஹெல்ப் பண்ணலாம்ல? இல்ல சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போகவாவது செய்யுங்களேன்!" என அவசரமாகச் சொல்ல,


"அண்ணா, மேலே ஃபைவ் டி-யில் (5T) என்ர கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கிறா. அவளை என்னட்ட கூட்டிக் கொண்டு வாங்கோவன்…" என இதயம் துடிக்கக் கேட்டான் அவன்.


நிதானமாக அவனைப் பார்த்த ரஃபீக் அடிக்குரலில், "அடிங்கொய்யால! என்னைப் பார்த்தா உங்க ஊர்க்காரைய்ங்களுக்கு எப்டிடா இருக்குது? என் மூஞ்சில இவ்விடம் காதலர்களைச் சேர்த்து வைக்கப்படும்னு எழுதி ஒட்டிருக்காடா வெண்ணெ? பெத்தவங்க பத்திரமா போயிட்டாங்களான்னு பார்க்கல. கேர்ள் ஃப்ரெண்டு... கேரளா வண்டுன்னு துடிச்சிக்கிட்டு இருக்கான்." என்று சீற, 


இவனைக் கணக்கில் கொள்ளாமல் அவன் இன்னமும் படிக்கட்டுகளில் இறங்குபவர்களில் அவள் வருகிறாளா என்றே கண்களில் உயிரைத் தேக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். பார்த்த ரஃபீக்கிற்கு காது, மூக்கு என்று அனைத்திலும் புகைமூட்டம்!


அவன் சட்டையைப் பிடித்து சுவரோடு சாய்த்து வைத்து, "இப்ப நீ கீழப் போறியா? இல்ல ஒரேடியா மேலப் போகப் போறியா?" என்று கடுப்படிக்க, இவர்களைப் பார்த்துவிட்டு அவ்விடம் வந்தார், அந்த அதிகாரி. 


இந்த களேபரத்தில் அவர் பெயரைச் சொல்லவில்லையே! ஒவ்வொரு முறையும் 'அந்த அதிகாரி' என்று எழுத எனக்கு சிரமமாக இருப்பதால், அவர் பெயர் 'ஷக்திதரன்' என்பதை இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். 


ஷக்திதரன் பரபரப்புடன் வந்து, "மிஸ்டர் ரஃபீக்! என்ன ஆனது?" என்று தன் துப்பாக்கியை எச்சரிக்கையுடன் எடுத்துக் கொண்டு அந்த இளைஞனைப் பார்த்தார்.


"வேகமா கீழ இறங்குன்னு சொன்னா கேட்க மாட்றான் சர்!" என்று எரிச்சலாக மொழிந்தான் இவன்.


அவரையும் அவர் உடையையும், அவர் கையிலிருந்த துப்பாக்கியையும் பார்த்த இளைஞன் எச்சிலை விழுங்கினான். ஆனாலும் அப்போதும் மேலிருந்து அனைவரும் வந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே, அமைதியாக தானும் கீழிறங்கும் மார்க்கத்தைத் தேடினான்.


இதற்கிடையே சசியுடன் போனவர்கள் அவனைத் தாக்கியவர்கள் நால்வரில் இருவரைப் பிடித்திருந்தனர். ஒருவன் தப்பிவிட்டானென்றும் இன்னுமொருவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் வாக்கி டாக்கியில் ஷக்திதரனுக்கு தகவல் வந்தது. அத்தோடு அனைத்து ப்ளாக்கின் தரை தளத்திலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்ல வெடிகுண்டு படை அங்கே குழுமியிருந்ததது.


ஏற்கனவே ஷக்திதரன், "இந்த குடிமனைகளின் பின்னால் இருக்கும் பெரிய தரவைக்கு (வெட்டவெளி) அனைவரையும் கூட்டிக் கொண்டு போங்கோ!" என்று உத்தரவிட்டிருந்தார்.


ஆக இப்போது கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேறியதும், ரஃபீக்கையும் சசியையும் கூட அங்கே போகுமாறு பணித்தார். வயதானவர்களையும் குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் விரைந்தன; சில இளைஞர்கள் நடக்கயியலாத வயதானவர்களைத் தூக்கிக்கொண்டும் ஓடினர். ஒரு உயிரையும் தவறவிட்டு விடக்கூடாது என்பதில் ஸ்திரமாக இருந்தார் ஷக்திதரன்! ஒரு மணி நேரத்திற்கு முன் நிசப்தத்தில் உறைந்து கிடந்த இடம், இப்போது அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.


ஏறக்குறைய அனைவரும் கடற்கரையையொட்டிய அந்த வெட்டவெளியிடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர். அத்தனைக் கண்களிலும் தூக்கம் பறந்து, பெரும் திகல் ஆக்கிரமித்திருந்தது. தூரத்தே நின்று பயமும் கவலையுமாய் தத்தம் வீடுகளைப் பார்த்திருந்தனர். 


அத்தனைப் பெரிய வீடுகளில் வசிக்கும் அனைவருமே ஓரளவுக்கு நல்ல வசதியானவர்கள்தான். ஆனாலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தூக்கத்திலிருந்து ஓடிவந்தவர்கள் அவசரத்தில் காரைத் தவிர வேறு எந்தப் பொருளையும் எடுத்து வந்திருக்கவில்லை. 


கைக்குழந்தை ஒன்று பசியில் வீறிட்டழுதது. அனைவரின் வீட்டிலும் வங்கிக்கணக்கிலும் லட்சக்கணக்கான பணமிருக்கிறது. ஆனால் தற்சமயம் ஒன்றுமில்லாதவர்களாக இருந்தனர். ஒருவர் எங்கிருந்தோ ஈச்சம்பழம் கொண்டு வந்து தந்தார். குழந்தை முன்பற்களால் பழத்தை நறநறவெனக் கடித்து, வாயோரம் வழியவிட்டு காண்போரை வசீகரித்தாள்.


நேரம் மெதுமெதுவாக மிதந்து கடந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் நீரிழிவு நோயாளி ஒருவர், அந்தக் கடல் காற்றிலும் வியர்த்துப் போய் சோர்வுடன் தொப்பென தரையில் விழுந்தார். இரவில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஷக்திதரன் குழு வந்து அழைத்ததும் சாப்பிடாமல் அப்படியே வந்ததன் விளைவு! மற்றொரு முதியவர் எப்போதும் குளுக்கோமீட்டர் (Glucometer) ஒன்றைக் காரிலும் வைத்திருப்பேனெனக் கொண்டு வந்து, அவரைப் பரிசோதித்து கைவசம் வைத்திருந்த குளுக்கோஸையும் தண்ணீரில் கலந்து பருகக் கொடுத்தார்.  


இப்படியாக, இத்தனை நாட்களும் எதிர்வீட்டில் இருப்பவர்கள் யாரென தெரியாமல் இருந்தவர்கள் கூட, தற்சமயம் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தனர்.


ரஃபீக், சசியின் கைக் காயத்தில் யாரும் இடித்துவிடாமலிருக்க, அவனைக் கூட்டத்திலிருந்து சற்று தள்ளி ஓரமாக அழைத்துப் போனான். அங்கே அவன் கண்ட காட்சியில் அவனிதழ்களில் குறுஞ்சிரிப்பு படர்ந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு காதலியைத் தேடிக் கொண்டிருந்த இளைஞன், ஏழேழு கடல் தாண்டிவந்து காதலியை சந்தித்தத் தலைவனைப் போல் அவளைக் கட்டிக் கொண்டிருந்தான். அவளும் அவனைக் காணாதது கை சேர்ந்ததைப் போல் பார்ப்பதும் அவன் நெற்றியில் முத்தமிடுவதுமாக இருந்தாள். இருவரும் தனி உலகில் சஞ்சரித்திருந்தனர்.


'இந்த ரணகளத்துலயும் இதுங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு!' என்று நினைத்தாலும், தானும் அந்த வயதில் சினிமாக்களில் வரும் காதலர்களைப் பார்த்தே, மெய் சிலிர்த்துப் போய் உணர்ச்சிவசப்பட்டவன் தானே என்று தோன்றியது. இப்போது இந்த முப்பத்திரண்டு வயதில் வாழ்க்கைப் பற்றிய சிந்தனைகளும் பொறுப்புகளும் அதிகரித்துள்ளதாலோ என்னவோ, இந்த சிறு வயது காதல் அவனுக்கு புன்னகையைத் தான் வரவழைத்தது.


நேரம் நள்ளிரவு ஒரு மணி!


இங்கே அனைவரும் பீதியில் நின்று கொண்டிருக்கையிலேயே, பாம் ஸ்க்வாடில் இருந்து 25kg C4 ரக வெடிகுண்டுகள் நான்கைக் கண்டறிந்து செயலிழக்க செய்துவிட்டதாகத் தகவல் வர, அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். எப்பேற்பட்ட ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறோமென்ற எண்ணம் கடவுளுக்கு நன்றியுரைக்கச் செய்தது. 


சசியால் அடையாளம் காட்டப்பட்ட இருவரும் காவலதிகாரிகளின் கவனிப்பிற்கும் கூட வாயைத் திறக்காததால், இவர்களே வெடிகுண்டுகளின் இருப்பிடத்தைத் தேடியதில் ஏற்பட்ட தாமதம்! 


சற்றைக்கெல்லாம் ஷக்திதரனும் அவரின் குழுக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் அனுமதியளித்தால் தானே அனைவரும் வீடு திரும்ப முடியும்? இருப்பினும் யாருக்கும் இப்போது வீட்டிற்கு போகும் எண்ணமில்லை. என்ன தான் தப்பிவிட்டாலும் அந்நேர இருளைப் போல் பயமும் முற்றிலும் அகலவில்லை; இன்னமும் பூத் பங்களாவைப் பார்ப்பதைப் போன்ற பார்வையும் மாறவில்லை.


ஷக்திதரன், "எல்லோரும் விடியவெள்ளன போகலாம். அதுவரை இங்கேயே இருங்கோ!" எனவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. "ஐந்து ப்ளாக்குகளில் நான்கிடத்தில் தான் க்ளியர் செய்திருக்கிறோம். இன்னும் ஒரு ப்ளாக்கை அலச வேணும். அதுவரை யாரையும் அனுப்பேலாது." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கையில், 


கடலின் ராட்சதப் பேரலைகளுக்குப் போட்டியாய் இடி போன்ற 'பூம்!!' என்ற பெரும் சப்தத்துடன் 'சி' ப்ளாக் வெடித்துச் சிதறியது.


பயணிக்கும் ✈️...

Comments

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...