Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 34.1

 

ஸ்கார்பியோ காதல் by ஸ்ரீவிஜய்


அத்தியாயம் 34.1

சாஷ்டாங்கமாக தன் மனைவியின் காலில் விழுந்திருந்தான் ஹரிஷ்.

‘அய்யய்யோ… என்னங்க நீங்க போய் என் கால்ல விழுந்துக்கிட்டு…’ என்றெல்லாம் ஸ்வேதா கிரிஞ்ச் நாடகம் போடவில்லை.

மாறாக டிபிகல் மனைவியாக அவன் சிண்டைப் பிடித்தாள். “மனசுல இருக்கறதுதானே கோவத்துல வெளியே வரும்? இத்தனை நாளும் என்னைப் பத்தி இப்டியொரு மோசமான தாட்’அ மனசுல வச்சுக்கிட்டு தான் என் கூட பேசி, சிரிச்சு இருந்திருக்கீங்க. ஒரு சைக்யார்டிஸ்டா அதையும் எனக்குத் தெரியாம பார்த்துக்கிட்டு எவ்ளோ அழகா நடிச்சிருக்கீங்க?”

“பேபி, இப்டிலாம் பேசாதேயேன்… சத்தியமா நான் உன்னை அப்டி நினைக்கலடீ.”

“பொய்! இல்லன்னா எப்டி அப்டியொரு வார்த்தை வரும்? நான் உங்க தங்கச்சியைத் தாட்டிவிட நினைக்கறேன்னு…” என்றவளுக்கு அழுகை வந்துவிட,

“ப்ச் அழாதே பேபி!” என்று அணைக்க வந்தவனின் கையைத் தட்டிவிட்டாள். “தெரியாம சொல்லிட்டேன்டி… நிஜமா மனசுல இருந்து சொல்லல! அவன் மேல இருக்க கோவத்துல தான்…”

“கோவத்துல தான் மனசுல இருக்கறது வெளியே வரும். இவ யாரு நம்ம தங்கச்சி விஷயத்துல தலையிடன்ற நினைப்புதானே?” என்று முதலிலிருந்து ஆரம்பித்து தன் அழுகையைத் தொடர்ந்தாள்.

சோலி முடிஞ்ச்! 

என்னால் இனி ஒன்றுமே செய்ய இயலாது. இனி புதிதாக வரும் ஒவ்வொரு சண்டையிலும் ஹரிஷூக்கு வலுக்கட்டாயமாக இந்த சண்டையும் நினைவுகூரப்பட்டு, அடி விழுவது உறுதி! அதுவே பிரபஞ்ச நியதி!

“கூமுட்டை மாதிரி பேசாதடீ! அப்டி நினைச்சிருந்தா கோயில்ல நீ அவனைப் பார்த்தப்போவே உன்னை உள்ளே போகச் சொல்லிருக்க மாட்டேனா? நேத்து நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணதால தான் எனக்கு கோவமே வந்தது”

“ஆமா! நான் கூமுட்டை தான்! துணிக்கடைக்கு டிரெஸ் எடுக்க வந்தவரைச் சாதாரண கஸ்டமரா ட்ரீட் பண்ணி அனுப்பாம, காதலிச்சு கல்யாணம் முடிச்சேன்ல? நான் கூமுட்டைதான்!”

“பேபி… நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன். விட்டுட்றீ…”

“எல்லாரையும் டென்ஷன் பண்ற உங்களுக்கே டென்ஷனா?”

“யாரு? நான் எல்லாரையும் டென்ஷன் பண்றேனா?”

“பின்ன? நேத்துதான் கோயில்ல நீங்க பேசினதைக் கேட்டேனே… நிஜமா என் புருஷனுக்கு இப்டிலாம் வார்த்தையால வலிக்க வைக்கத் தெரியுமான்னு ஆச்சரியமா இருந்துச்சுங்க! என்ன வார்த்தை சொன்னீங்க… யாருமில்லாதவன்னு…”

அஸ்வத்தைப் பற்றிய பேச்சு வந்ததும் ஹரிஷின் வதனம் இறுகிப் போனது. 

“அவர் எப்டி வேணா இருக்கட்டுமே… உங்களுக்கு பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லிட்டு போறதை விட்டுட்டு, எப்டி ஹர்ட் பண்ணா அமைதியா போவான்னு நினைச்சு இஷ்டத்துக்கும் பேசினீங்க?”

“நான் ஒண்ணும் இல்லாததை சொல்லலயே!”

“அப்போ இப்பவும் நீங்க பேசினது தப்புன்னு தோணல, இல்ல? மத்தவங்க மனசைப் படிக்க தெரிஞ்ச உங்களுக்கு உங்க தப்பை உணர முடியல. சரி இப்போ ஒண்ணு கேட்கறேன். அவருக்கு கல்யாணமாகிடுச்சு; குழந்தையும் இருந்தது எல்லாம் அம்ரு சொன்னா! அதைத் தவிர்த்து, அவர் குடும்பம், சொந்தபந்தம்னு இருந்திருந்தா உங்க தங்கச்சியைத் தர சம்மதிப்பீங்களா?”

“ப்ச்!”

“ஒழுங்கா நின்னு பதில் சொல்லுங்க! அவருக்கு யாருமில்லைன்னு தான் அம்ருவைத் தர பிடிக்கலயா?”

“ஆமாடீ! நாளைக்கு எதுவும் ஒண்ணுன்னா ஏன்னு கேட்க கூட ஆள் கிடையாது. அப்புறம் எப்டி பொண்ணைக் கொடுக்கறது?”

“......”

ஸ்வேதாவின் மௌனப் பார்வையில் மீண்டும் எதையோ வில்லங்கமாகச் சொல்லிவிட்டோம் என்று புரிந்த ஹரிஷ் அப்போதும் முறைப்பாகவே நின்றான்.

“ஸோ? எனக்கும் எங்கம்மா மட்டும்தான்! அவங்களும் இல்லைன்னா என்னை லவ் பண்ணிருக்க மாட்டீங்க, அனாதைன்னு சொல்லி என்னைக் கட்டிருக்கவும் மாட்டீங்கல்ல?”

மீண்டுமொரு, ‘சோலி முடிஞ்ச்’! மீண்டுமொரு சாஷ்டாங்க பாதமன்னிப்பு!

‘ஐயோ சாவடிக்கிறாளே…’ என்று புலம்பித் தவித்தவனைக் காப்பவர் எவருமில்லை. “லூசு! நீயும் அவனும் ஒண்ணாடீ?”

“எல்லாருமே யாருமில்லைன்னா அனாதை தானேங்க?”

“ஒரு வார்த்தை சொன்னதுக்காக என்னை அவ்ளோ மோசமா நினைக்கறியா ஸ்வேதா?” ஆதங்கத்துடன் கேட்டான்.

“நீங்க பேசினது மோசம்னு உங்களுக்கே புரியுது. ஆனா ஒத்துக்க மாட்டேங்கறீங்க! உங்க தங்கச்சியைக் கட்டித் தர்றதுன்னா அவர் ஆளு எப்டி? கேரக்டர் எப்டின்னு பாருங்க! வேலை சுத்தமா? ஒழுங்கான வருமானம் இருக்குதான்னு பாருங்க! உங்களுக்கு திருப்தியாகற வரை விசாரிங்க! அதை விட்டுட்டு ஒருத்தரோட தனிமையைச் சொல்லி ஹர்ட் பண்றது என்ன நியாயத்தனம்?”

“.......”

“ஐ க்நோ! உங்க தங்கச்சின்னு வந்துட்டா படிப்பு, அறிவு, தொழில்னு எதையும் யூஸ் பண்ண மாட்டீங்க! கண்ணை மூடின குதிரை மாதிரி உங்க ஃபோகஸ் ஃபுல்லா அவளைப் பாதுகாக்கறதுல மட்டும்தான் இருக்கும். ஆரம்பத்துல எனக்கும் இது கடுப்பா தான் இருந்தது. ஆனா அம்ரு என்னை வேத்து மனுஷியா நினைக்கலன்னு எப்போ புரிஞ்சதோ அப்பவே நானும் உங்க பிரிசன்ஸை அவளுக்கு விட்டுக் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். உங்க முட்டாள்தனத்தைச் சகிச்சுக்க பழகிக்கிட்டேன். இப்பவும் அவளை அவர்கிட்ட இருந்து பாதுகாக்கணும்னு நினைக்கறீங்களே தவிர, ஒரு அண்ணனா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யணும்னு நினைக்க மாட்டேங்கறீங்க!”

“ஏய்…”

“சும்மா கத்தாதீங்க! நான் ஒண்ணும் நீங்க சொல்ற மாதிரி யாருக்கும் சப்போர்ட் பண்ண நினைக்கல. நேத்து நான் உங்க கிட்டேயும், உங்க தங்கச்சி கிட்டேயும் இல்லாத நிதான குணத்தை அந்த மனுஷன் கிட்ட பார்த்தேன். சூழ்நிலையை எவ்ளோ அழகா ஹேண்டில் பண்ணினார்? அவர் நினைச்சிருந்தா அம்ருவே அப்டி அடம்பிடிச்சு கூப்பிடும்போது உங்களை எதிர்த்துக்கிட்டு, மாமா முன்னாடி வந்து நிற்க எவ்ளோ நேரம் ஆகியிருக்கும்?”

ஹரிஷ் இப்போதும் அஸ்வத்தை உயர்த்தி பேசும் மனைவியை முறைக்கவே செய்தான். ஆனால் நேற்று போல் பதறி வார்த்தையைக் கொட்டாமல் மௌனத்தின் வழி அவள் வார்த்தைகளை உள்வாங்கினான்.

“மாமா கூட உங்க மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கார். அதைக் காப்பாத்துங்க! அம்ரு அந்த அஸ்வத்தை விட உங்க மேலதான் நிறைய பாசம் வச்சிருக்கா! உங்க தனிப்பட்ட கோபத்துக்காக தேவையில்லாம பேசி அதை மிஸ் பண்ணிடாதீங்க!”

“இப்போ என்னை என்ன தான்’டி செய்ய சொல்ற?”

ஸ்வேதா அமர்த்தலுடன் தன்னைக் கண்ணாடியில் பார்த்து பொட்டையும் கழுத்துச் சங்கிலியையும் சரிசெய்தவாறு மிதப்புடன், “ஒரு சைக்யார்டிஸ்ட்க்கே குடும்ப பிரிச்சினைல சொல்யூஷன் சொல்ல நான்தான் ஃபேமிலி கவுன்சிலிங் செஷன் வைக்க வேண்டியதா இருக்குது. எல்லாம் மனைவி மகிமை!” என்றிட, 

அவளைக் களவாடும் கணவனாய் மாறி பின்னிருந்து கட்டிக்கொண்டு இழைந்தான். “எத்தனை செஷன்ஸ் வச்சாலும் பத்தலயே?”

“ஓஹோ! சரி, அஸ்வத் அவரோட வைஃப் ஓடிப் போனதும் ஏன் வேற பொண்ணைக் கட்டிக்கலயாம்?”

“ப்ச்! இப்போ எதுக்கு அவனைப் பத்தி?”

“பேசிட்டிருந்தோம்ல? சொல்லுங்க!”

அஸ்வத்தின் அலுவலக ஆட்களிடம் விசாரித்ததை வைத்தும், ‘என் முகத்தைக் கூட ஒழுங்கா பார்த்து பேசமாட்டார்.’ என்று ஒருமுறை அம்ருதா சொன்னதை வைத்தும் சொன்னான். “தெரியல. அவன் வைஃப் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டா போல! மூணு, நாலு வருஷமா பொண்ணுங்க சகவாசமே இல்லாம தான் இருந்திருக்கான்.” 

“ம்ம்! பர்ஸனல் லைஃப் சரியா அமையலன்னதும் தண்ணி, கஞ்சான்னு வேற தப்பு வழிக்கு போகலயா?”

அவள் கேள்விகளின் அடிநாதம் புரிந்தது. “இப்போ என்ன? அவன் ஒரு டீடோட்டலர்னு நான் என் வாயால சொல்லணுமா?”

“புரிஞ்சா சரி! யோசிங்க. அப்பவும் உங்களுக்கு இந்த சம்பந்தம் சரிவராதுன்னு தோணுச்சுன்னா, உங்க தங்கச்சியை ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க! வேறென்ன நான் சொல்ல? அப்புறம் நீ யாருடி என் தங்கச்சி விஷயத்துல தலையிடன்னு கேட்பீங்க!” என்று நொடித்து, மீண்டும் சண்டைக்கு ஆரம்ப முடிச்சு போட பார்த்தவளின் வாயை மூடினான் ஹரிஷ். 

எப்படி என்று நான் சொல்லமாட்டேன்.

                  *******

நடராஜன், ‘உன் அண்ணனைச் சம்மதிக்க வை!’ என்று சொன்ன பிறகும் அம்ருதா ஹரிஷிடம் அதைப் பற்றி பேசவில்லை. அவள் தன்னிடம் வந்து பேசுவாள். அப்போது இதுவரை இருந்த கோபத்தையெல்லாம் விட்டொழித்து, நயந்து பேசி அவளுக்கு புரிய வைக்கவேண்டும் என்று ஹரிஷ் நினைத்திருக்க, அவள் எப்போதும்போல் அவனிடம் விளையாடினாள்; சண்டை பிடித்தாள்; செல்லம் கொஞ்சினாள். ஆனால் அஸ்வத்தைப் பற்றி மட்டும் பேசவேயில்லை. வழக்கம்போல் பேரம் பேசுவதற்கு கூட அஸ்வத்தின் விடயத்தை இழுக்கவில்லை என்றதில் இவனுக்கு ஆற்றாமை பொங்கியது.

நாட்கள் செல்லச் செல்லவே அம்ருவின் அந்த ஒதுக்கம் அவனுக்கு புரிந்தது. அஸ்வத்தைப் பிடிக்காதுதான்! ஆனாலும் ஏதோ ஒரு விடயத்திலேனும் தங்கை தன்னை ஒதுக்கி வைக்கிறாள் என்பதில் ஹரிஷின் உள்ளம் முணுமுணுத்தது.

அவள் அஸ்வத்தைச் சந்திக்கவில்லை. அவனும் அதற்கு மெனக்கெடவில்லை போலும். அம்ருதா தன் பயிற்சி காலத்தின் இறுதியில் இருப்பதால் பரபரப்புடனே இருந்தாள். அதனால் அலைபேசியிலும் அஸ்வத்துடன் பேசுவதைப் போல் தெரியவில்லை. தனக்காக தான் இருவரும் பேசாமல் இருக்கிறார்களோ என்று தோன்றியது. இருக்கலாம்.

என்னதான் அவள் தன்னிடம் வழமை போல் சிரித்து பேசி மகிழ்ந்திருந்தாலும் அவளின் மனவருத்தம் புரியாதவனல்லவே! தன்னால் இயன்றும் அவளின் மனவருத்தத்தைப் போக்காமல் இருப்பதில், அம்ருதா தன்னைக் குற்றவுணர்வில் தள்ளுகிறாள் என்று அவள்மேல் ஊமைக்கோபம் கொண்டான்.

ஸ்வேதா சொன்னதை யோசித்துப் பார்த்தான். ‘அம்ரு அந்த அஸ்வத்தை விட உங்க மேலதான் நிறைய பாசம் வச்சிருக்கா!’

இதை ஸ்வேதா சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. அவன் குழந்தையின் பாசம் அவன் அறியாததா? கர்வம் மிகுந்தது. 

என்னதான் திருமணத்திற்கு பேசினாலும் அவளை வேறு வீட்டிற்கு அனுப்புவதை நினைத்து இன்னுமே தவிப்புதான்! இன்னும் மனதளவில் ஹரிஷ் அதற்கு தயாராகவில்லை என்பதே நிஜம்.

‘பேசாமல் தேவாவை வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொண்டாலென்ன?’ என்று ஒரு நொடி நினைத்துவிட்டு தலையில் தட்டிக்கொண்டான். தேவாவிற்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. அவனே சிறு வயதில் அம்ருவை, ‘குண்டு பூசணி’ என்று கிண்டல் செய்ய, ஏதோ ஒரு சொந்தக்கார பாட்டி, ‘பெரியவனாகி இந்த குண்டு பாப்பாவைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற!’ என்றதை வைத்து இன்று வரை அவளை, ‘ரோலர் பொட்டட்டோ!’ என்றழைத்து, கல்யாணம் செய்ய கேட்டு கேலி செய்வான். 

என்னதான் விளையாட்டாகப் பேசினாலும் தேவா இதிலெல்லாம் மிகத் தெளிவு. நிச்சயம் அவனுக்கு அம்ருவைத் திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இல்லை. அதிலும் அம்ரு - அஸ்வத்தின் காதல் தெரிந்த பின்னர்… 

‘அடச்சை! அது காதலா?’ என்று மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வந்து நின்றன ஹரிஷின் எண்ணங்கள்!

ஏற்கனவே ஒருத்தியைத் திருமணம் முடித்த பின், காதல் என்று சொல்லி எப்படி ஒரு சின்னப் பெண்ணின் மனதை அவன் கலைக்கலாம்? 

இப்படியாக தனக்குள்ளேயே உழன்ற ஹரிஷ், அன்று காலை அம்ருதாவை மருத்துவமனையில் இறக்கிவிட்ட பின் தன் க்ளினிக் சென்று அமர்ந்துவிட்டான். ஜன்னல் திரைகள் விலக்கப்படாமல் அறை இருளாக இருந்தது. அந்த இருளும் நிசப்தமும் தற்போது தேவையாக இருந்தது.

தங்கையின் வாழ்வில் மிக முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணம்! அப்பா தன் தலையில் பெரிய பொறுப்பை வைத்துவிட்டதாக உணர்ந்தான். 

அம்ரு அம்மாவிடம் கேட்டாளே, ‘ஹரி லவ் பண்றேன்னு சொன்னப்ப அண்ணியைப் பார்க்க ஒத்துக்கிட்டீங்க தானே?’ என்று!

அம்மாவோ, அப்பாவோ தன் காதலை எதிர்த்து வேறு பெண்ணைக் காட்டியிருந்தால் தான் என்ன செய்திருப்போம்? நினைக்கும்போதே ஸ்வேதா கை நழுவிப் போவதான பிம்பத்தில் உள்ளம் தகித்தது.

அதேபோல் அஸ்வத்தை விடுத்து வேறு யாரையும் தெரிவு செய்தால், அம்ருதாவின் எதிர்வினை எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை அண்ணனாக அல்லாமல் ஒரு மருத்துவனாகத் தேடினான். கிடைத்த பதில் அவனை அச்சுறுத்தியது.

நிச்சயம் தனக்காக, தன் சொல்லை மதித்து சரியென்றே சொல்லுவாள். இதோ இப்போது போல் தன்னிடமும் குடும்பத்தாரிடமும் நன்றாகவே பேசி சிரிப்பாள். ஆனால் அச்சிரிப்பில் உள்ளே உயிரோடு மரித்துப் போய் வெறும் ஜடத்தன்மையே வெளிப்படும். தங்கைக்கு அதைத்தான் கொடுக்கப் போகிறானா?

பட்டென்று விழி திறந்து எழுந்து நின்றான். மூச்சு வாங்கியது.

அலைபேசியின் ரீங்காரம் எங்கோ தூரமாய் ஒலிப்பதைப் போல் கேட்டது. சிரமத்துடன் எடுத்துப் பார்த்தான். ‘Dr. Bharani’ என்ற பெயர் ஒளிர, நீரைப் பருகிவிட்டு அழைப்பை ஏற்றான். “சொல்லுங்க பரணி!”

“ஹரிஷ் சர், ஹாஸ்பிடல் வந்தாச்சா?”

“பக்கத்துல வந்துட்டேன் பரணி. டென் மினிட்ஸ்!”

“ஓகே சர், ஒரு சின்ன ஃபேவர்… ஒரு பர்சனல் இஷ்ஷூ. இன்னிக்கு மார்னிங் மட்டும் என்னோட டியூட்டி பார்க்க முடியுமா?”

‘பர்சனல் இஷ்ஷூ.’ என்றதில் மீண்டும் ஹரிஷ் தன் பிரச்சினைக்குள் புக,

“டாக்டர் ஹரிஷ்?” என்றழைத்தது மறுமுனை!

“ஹான்? நான் என் ஷெட்யூல் பார்த்துட்டு சொல்றேனே பரணி?”

“உங்க வாய்ஸே டல்லா இருக்குதே? உடம்பு சரியில்லையா?”

“ச்சச்ச…” என்றவன் நிதானித்து, “அது… எனக்கும் ஒரு இஷ்ஷூ பரணி. உங்க கிட்ட சொல்யூஷன் கிடைக்கும்னு நினைக்கறேன்.” என்றான்.

“என்ன டாக்டர்? நான் உங்களை விட ஜூனியர்… என்கிட்ட போய்…”

“அட சும்மா சொல்லுங்க. என் பேஷண்ட்க்கு ஒரு அலையன்ஸ் வந்திருக்கறதா சொல்றாங்க. அந்தாள் ஆல்ரெடி மேரீட்! வைஃப்பும் குழந்தையும் இப்போ இல்ல. குடும்பம்ன்னு சொல்லிக்க யாரும் இல்லையாம். ஆள் நல்ல மாதிரிதான் போல… ஆனா தன் பொண்ணுக்கு ஒரு செகண்ட் ஹாண்ட்’அ கொடுக்கணுமான்னு பொண்ணு வீட்டுல யோசிக்கறாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… உங்களுக்கு என்ன தோணுது பரணி?”

“ஃபர்ஸ்ட் ஸாரி சர்! பொண்டாட்டி செத்ததும் புது மாப்பிள்ளை ஆகறது ஒண்ணும் நம்மூர்ல புதுசு இல்ல. சரியான, முறையான தேர்வா இருக்கற பட்சத்துல அது தப்பும் இல்லை. அதனால மத்தவங்க மாதிரி சைக்யார்ட்ரிஸ்ட்ஸ் நாமளும் செகண்ட் ஹாண்ட்ன்ற வார்த்தையை யூஸ் பண்ண வேண்டியதில்லையே சர்?”

‘ப்ச்! இந்த அஸ்வத் விடயத்தில் மட்டும் தன்னையுமறியாமல் தன் நாக்கு ஏன்தான் இப்படி பிறழ்கிறதோ! தேவா, ஸ்வேதா, இதோ இந்த பரணி என்று அனைவரிடமும் வார்த்தையை விட்ட பிறகே சிந்திக்க நேரிடுகிறது.’

“ஸாரி பரணி. நான் தப்பா மீன் பண்ணல.”

“புரியுது டாக்டர், நீங்க டென்ஷன்ல தான் பேசறீங்க. அந்த அலையன்ஸ் எல்லா விதத்திலயும் சரியானதா? பொண்ணுக்கு இஷ்டமா? பிக்கல், பிடுங்கல் இல்லாம சந்தோஷமா இருப்பாளான்னு மட்டும் பார்க்க சொல்லுங்க சர். ரொம்ப முக்கியம்…. அவன் மனசுல இன்னும் அவனோட பொண்டாட்டியை நினைச்சிட்டு இருக்கானான்னு பார்க்கறதுதான்! அந்த க்ரீஃப்ல ஸ்ட்ரக் ஆகிருந்தான்னா, அந்தப் பொண்ணை நினைச்சு இந்தப் பொண்ணை அவ இடத்துல வச்சுன்னு… ஃப்யூச்சர்ல ரெண்டு பேருக்குமே கஷ்டம்!” என்ற பரணி, இவ்விடயத்தை இன்னும் தொழில்ரீதியாக ஆழமாக ஆராய்ந்து தன் கருத்தினைச் சொல்வது கேட்டு, ஹரிஷின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

இதுவரை அம்ருதாவின் விடயத்தில் அண்ணன்‌ என்ற இடத்திலிருந்து நகர்ந்து அவனால் வேறு பாதையில் சிந்திக்கவே முடியவில்லை. அதனாலேயே இவ்விடயத்தை சுயநிலை தாண்டிய பார்வையில் அணுக நினைத்து டாக்டர் பரணியிடம் பகிர்ந்தான். 

பரணி சொன்ன கோணத்திலிருந்து பார்த்தால், அங்கே நிச்சயமாக அஸ்வத் ரேவதி இடத்தில் அம்ருதாவை வைக்கவில்லை. ஒருத்திக்கு பதிலாக இன்னொருத்தி என்ற பதமே அவனிடம் இல்லை. அவன் மனதில் அம்ருதாவிற்கு இருப்பது ஓர் பிரத்யேக, உன்னத இடம்! 

இதனை அஸ்வத்தின் மனதிற்குள் புகுந்து முற்றுமுழுதாக அறிந்த பின்னும், அம்ருதாவை இரண்டாம் நிலையாக தருகிறோம் என்று நினைத்தது மடமையாகத் தோன்றியது. 

இந்த அத்தியாயத்தின் தொடர்ச்சி அடுத்த பதிவில்👇...



Comments

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...