Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

இரவோடு இவர்கள் A Ceylon trip✈️ - 1

 


அத்தியாயம் 1


வருடம் 2017.


இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர். 


சயந்தன் கடையில் வாங்கிய பரோட்டாவையும் அம்மா செய்து தந்திருந்த சம்பலையும் திண்ணையில் காலாட்டியபடி அமர்ந்து ருசித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி!


அத்தனை நேரம் அசிரத்தையாய் இருந்தவளின் முகம் திடுமென புதுப்பொலிவைப் பூசிக்கொண்டது. இதழ்கள் பரோட்டா விள்ளலை நாக்கின் அடியில் பதுக்கிவிட்டு, சின்னப் புன்னகையில் குவிந்தன; கண்கள் நளினமாய் சுழன்றன; கால்கள் ஒயிலாய் நடந்து, அந்த நீண்ட முற்றத்தைக் கடந்து வீட்டின் நுழைவாயிலின் அருகே வந்து நின்றன.


கேட்டைப் (gate) பிடித்துக்கொண்டு தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள். மொஃபட் ஒன்று இவள் வீட்டைக் கடந்து போனது. கடந்து போகையில் இவளுக்கு மட்டும் பிரத்யேகமாக காதல் வாசத்தை வீசிச் சென்றது. வீசிய வாசனையில் ஸ்ரீநிதியின் அழகு முகம் மேலும் மகத்தான அழகைப் பூசிக்கொண்டது. 


காதலோ க்ரஷோ என்ன வார்த்தை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.‌ ஆனால் அந்த உணர்வை என்னவென்று வர்ணிப்பது? எதிர்கால வாழ்வைப் பற்றிய எந்த சிந்தனையும் அல்லாத, நிர்மலமான அந்த பதின்பருவ மனதினுள் சின்னப் பூவொன்று மூலைமுடுக்கெங்கும் சொட்டு சொட்டாய் தேன் துளிகளை விநியோகிப்பதைப் போன்ற  அந்த மனநிலையை என்ன வார்த்தையைக் கொண்டுதான் வர்ணிப்பது? தெரியவில்லை. ஆனால் ஸ்ரீநிதியும் அந்த அழகிய, மெல்லிய உணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறாளென்பது திண்ணம்!


பதின்பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஸ்ரீநிதி, உயர்தரம் (பன்னிரெண்டாம் வகுப்பு) முடித்துவிட்டு பல்கலையை எதிர்நோக்கியிருக்கிறாள். அதோடு சில காலமாக அந்த மொஃபட்காரனின் பார்வைகளுக்கு, விருப்பமாய் பதில் பார்வை தந்துகொண்டிருக்கிறாள். 


கடந்து சென்ற மொஃபட் தெருவின் உள்பகுதியில் திரும்பும் வரை பார்த்திருந்தாள். மிகச்சரியாக திரும்பும் போது அதனை செலுத்திக் கொண்டிருந்தவனின் கழுத்தும் இவள்புறம் திரும்பியது. மின்னலாய் ஒரு புன்சிரிப்பைப் பறக்கவிட்டுப் போனான். அவன் சிரிப்பும் பார்வையும் காற்றில் மிதந்து வந்து இவள் முகத்தில் மோதி, இவள் இதழ்களையும் மலரச் செய்தது. 


இப்போது மட்டுமல்ல இவளைக் கடந்து அவனோ அல்லது அவனைக் கடந்து இவளோ செல்கையில், திருப்பத்தில் திரும்பும் போது கழுத்தைத் வளைத்துப் பார்த்து, இதழ் விரியா புன்னகையொன்றை வீசிச் செல்வார்கள். 


இருவரும் ஒரே தெருவாசிகள்! இவள் வீடு 'ட' வடிவிலிருக்கும் தெருவின் துவக்கத்தில் இருக்கிறது. அவன் வீடு உள்பகுதியில் அந்த 'ட'வின் முடிவில் இருக்கிறது. மாலையில் வேலை முடிந்து வருபவன் தினமும் 'ட'வின் நேர்கோடும் படுக்கைக்கோடும் சந்திக்கும் இடத்தில் வந்து நின்று நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பான். 


அப்போதெல்லாம் இவளும் இங்கே இவள் வயதுப் பெண்களோடு வீட்டு வாசலில் வெட்டிக்கதைப் பேசிக் கொண்டோ அல்லது கடைக்கு செல்வதைப் போலவோ வெளியில் வந்து நிற்பாள். இருவரும் மற்ற வேலையை பக்கமாக்கி, பார்வையால் மனதினைக் கொய்து கொய்து பூக்கச் செய்வதை மட்டும் முக்கியப் பணியாகச் செய்வர்.


இவள் தூரத்தில் இருக்கும் அவன் நண்பர்கள் கூட்டத்தில் அவனை எங்கே என்று தேடினால், உடனே அவனுக்கு கையும் கழுத்தும் நோக ஆரம்பித்துவிடும். உடலை வளைத்து, கழுத்தை சாய்த்து, கரங்களைத் தூக்கி நெட்டி முறித்து, தன்னவளுக்கு தான் இருக்குமிடத்தைக் காண்பித்துக் கொடுப்பான். இதெல்லாம் சில நாட்களாக இவர்களுக்குள் நடக்கும் விளையாட்டுகள்!


சிறு வயதில் மற்றப் பிள்ளைகளோடு விளையாடும் போது, சிற்சில நேரங்களில் இருவரும் இணைந்து விளையாடியதுண்டு. அவன் இவளைவிட ஐந்து வயது பெரியவன் என்பதால், குறிப்பிட்ட வயதில், 'பெடியளோடு (பையன்களோடு) உனக்கென்ன விளையாட்டு?' என்று கேட்டு தூர நிறுத்தப்பட்டிருக்கிறாள். ஆக இவள் அவனிடம் அதிகம் பேசியதுமில்லை.


பின் எப்படி இந்த பார்வைப் பரிமாற்றங்கள்?, திருப்பத்தில் திரும்பிப் பார்ப்பதும், கூட்டத்தில் கூச்சலின்றி இடத்தைக் காண்பிப்பதுமான மெல்லிய உணர்வுகள் ஓடும் விளையாட்டுகள்? விடையை ஆண்டாண்டு காலமாய் இப்பாரிய உலகில் பாரபட்சமின்றி பதின்பருவத்தினரை, தன் கரங்கள் கொண்டு தீண்டும் காதலிடம் தான் கேட்க வேண்டும்!


என்றும் போல் இன்றும் வேலை முடிந்து வந்தவன், குளித்து உடைமாற்றிக் கொண்டு நண்பர்களோடு அரட்டையடிக்க(?) வந்துவிட்டான். அட! அவன் பெயரை சொல்லவில்லை பாருங்கள். ஸ்ரீநிதியின் நித்திரையை தன் நினைவுகளால் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கும் இவன் பெயர், நிஜந்தன்!


இங்கே அவனைப் பார்வையிட்டுக் கொண்டே, பக்கத்துவீட்டு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள், ஸ்ரீநிதி! இவளின் செய்கையைக் கண்டு அங்கே அவன் என்ன நினைத்தானோ, நண்பர்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து, தெருவை அடுத்து இருக்கும் சின்ன முருகன் கோவிலுக்கு போகும் பாதைக்குள் நடந்தான்.


இதுவும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான். இருவரின் தகவல் பரிமாற்றத்திற்கு துணையாய் முருகனை அழைத்துக் கொள்வார்கள். கோவிலுக்குள் நுழைந்த நிஜந்தன், கந்தனைக் கண்டுகொள்ளாமல் காதலியின் காலடி கானத்தை எதிர்பார்த்திருந்தான். அவளும் வந்தாள். 


விழிகளை சுழற்றி ஆலயத்திலிருந்த ஓரிரு தெருவாசிகளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவனைப் பார்க்க, அவன் கோவில் தூண் ஒன்றில் சாய்ந்து முருகனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். இவள் முருகனுக்கு ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு போய் அதே தூணில், ஆனால் அவனுக்கு எதிர்புறமாக மயில் வாகனத்தைப் பார்த்தபடி சாய்ந்து கொண்டாள்.


நிஜந்தன், "வந்து கனநேரமாகுது!" என்று உரையாடலை ஆரம்பித்து வைத்தான். பார்ப்பவர்களுக்கு அவன் கந்தனிடம் கதைத்துக்  கொண்டிருக்கிறாற் போன்ற உடல்மொழி!


"நானும் கெதியா (சீக்கிரமாக) தான் வந்தன்!" - மயிலிடம்‌ மந்திரம் சொல்வதைப் போல் இவளின் மைவிழி!


"பார்த்தனான், நீர் கொஞ்சிவிட்டு கெதியா வந்த லட்சணத்தை!"


"இப்ப எதுக்கு என்னட்ட தனக (வம்பிழுத்தல்) வேணும்?"


"நான் தனகயில்ல. சரி, சொல்லும். அடுத்து என்ன படிக்கப் போகிறீர்? எங்கே படிக்கப் போகிறீர்?" என அவளின் படிப்பைப் பற்றிக் கேட்க, ஏன் கேட்கிறானெனப் புரிந்து அவளும் பதில் சொல்ல ஆரம்பித்தாள்.


இப்படியாக இருவரின் காதல் கள்ளப்பார்வைகளோடும் கந்தனின் கருணையோடும், ஸ்ரீநிதியின் கல்லூரி இரண்டாம் வருடம் வரை நீண்டது.


வருடம் 2019.


இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ‘நுவரெலியா’ ௭னும் மாநகரத்திலுள்ள சீதை அம்மன் கோவிலில் நின்றிருந்தார்கள் அந்த நண்பர்கள். அவர்கள் பாலா, ரஃபீக், சீதா, ராபி, சசிகுமார்! 


இந்த ஐவர் குழு இந்தியாவில் இருந்து இலங்கையை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அந்த சீதை அம்மன் கோவில் நுவரெலியாவிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 


சீதா, ராபி, ரஃபீக், பாலா நால்வரும் பள்ளி கால நண்பர்கள். சீதா ஒரு ஸ்டீல் கம்பெனியில் அக்கௌண்டன்ட் ஆக பணிபுரிகிறாள். ஆதலால் நண்பர்கள் அவளுக்கு ‘கணக்கு’ ௭னும் அற்புதப் பெயரை சூட்டியுள்ளனர். 


சசி, சீதாவின் கொலீக். இவர்களை விட இளையவன். வயது இருபத்துநான்கு! மற்ற நால்வருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றார்கள்.


பாலா ஒரு காவல் ஆய்வாளர். இவனுக்கு கீழ் நடந்த வழக்கு ஒன்று வெற்றியடைந்ததையடுத்து, இவன் கோரியிருந்த விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஆக, இவன் தான் இதுபோல் ஒரு நீண்ட விடுமுறை இனி எப்போது கிடைக்குமோ என நண்பர்களைப் பொட்டலம் கட்டி, தன் நீண்டநாள் ஆசையான இலங்கையைப் பார்க்கக் கிளம்பி வந்துள்ளான்.


ரஃபீக் ஒரு அச்சு நிறுவனத்தில் மேலாளர். ராபி குடும்பத் தலைவி. ராபியும் சீதாவும் பாலாவின் சுற்றுலாவைப் பற்றி சொல்லி வீட்டினரிடம் அனுமதி கேட்க, நண்பர்களை ஏற்கனவே அறிந்திருந்த அவர்களும் சரியென்றதால் இருவரும் தத்தம் பிள்ளைகளை வீட்டினர் வசம் விட்டு வந்துள்ளனர். 


பாலா, “ச்ச! செம ப்ளேஸ்ல கணக்கு?” ௭ன்று கோவிலின் அழகை சிலாகித்தான், அருகேயிருந்த சீதாவிடம்!


“ஆமா பாலா, ௭ன் பேர்ல ஒரு கோவில்!” ௭ன்று குதூகலித்தாள் அவள். 


இவர்கள் கோவிலை சுற்றி கொண்டிருக்கையில், சசியின் கைப்பேசியில் அழைப்பு! ௭டுத்துப் பார்த்தவன், “ஶ்ரீ அக்கா காலிங்!” ௭ன்றான்.


வேகமாக அலைபேசியைப் பிடுங்கிய ரஃபீக் அழைப்பை ஏற்று, “௭ரும!” ௭ன்ற வசைமொழியோடு ஆரம்பித்தான். 


“சொல்லுடா இடியட்! அவன் மொபைலுக்கு வர்ற காலை நீ ௭துக்கு அட்டெண்ட் பண்ற?” ரஃபீக்கின் குரலை அடையாளம் கண்டு கொண்ட மறுபுறமும் கோபம் போலவே கேட்டது.


“உன் மூஞ்சி!”


“ஏண்டா?”


“பக்கி, ௭ங்க கூட வந்துருக்கறதுதானே? அங்க உட்கார்ந்து ௭ன்னத்தைக் கழட்டுறியாம்?” 


அந்த ஸ்ரீயும் இவர்களின் தோழியாக இருக்க வேண்டும். ஆனால் இவள் நம் ஸ்ரீநிதி அல்ல!


“உனக்கென்ன? வைஃப்-அ அம்மா வீட்ல விட்டுட்டு ஜாலியா ஊர் சுத்தற! நான் இங்க ரெண்டு கழுதையை மேய்க்கணும். ௭ன்னால ௭ப்டி வர முடியும்?”


“கணக்கும் ராபியும் வந்திருக்காங்க தான?”


“அய்யோடா... ௭த்தன வாட்டிடா இதையே சொல்லித் திட்டுவ? இப்ப ௭ங்கே இருக்கீங்க? அதை சொல்லித் தொலை இடியட்!”


“மச்சான், சீதை அம்மன் கோவில்டா! செம ப்ளேஸ் தெரியுமா? நீதான் மிஸ் பண்ணிட்ட!”


“வாவ்!! சூப்பர் மச்சி! ‘சீதா ௭லிய’ன்ற இடம்தானே?”


“ஆமா, இங்கேதான் இராவணன் சீதாவைப் பிடிச்சு வச்சிருந்தானாம். அதைத்தான் அசோகவனம்னு சொல்றாங்களாம். இங்கே ஃபுல்லா பாறைங்க இருக்குது மச்சி. அங்கங்க பாறைல வட்ட வட்டமா இருக்கறதுதான் இராவணனோட யானையோட ஃபுட் பிரிண்ட்ஸ்னு சொல்றாங்க.”


“இன்ட்ரஸ்டிங்! டேய் டேய் ரஃபீ... ஸ்நாப்ஸ் வாட்ஸ்ஆப் பண்ணுடா...”


“முடியாது போ ௭ரும!”


“நான் போலீஸ்கார்கிட்ட கேட்டுக்கறேன் போடா!”


“ஹாஹா... அவனோட ரெட்மீ ௭ப்பவோ செத்துப் போச்சு.”


“௭ப்டியும் ௭ன்னை வெறுப்பேத்தறதுக்காகவாவது நீயே ௭னக்கு அனுப்ப தான் போற... அப்ப பார்த்துக்கறேன்டா குண்டா! இப்ப அடுத்து ௭ங்க போகப் போறீங்க?”


“இங்க இருந்து ஒரு கி.மீ தூரத்துல ‘ஹக்கலா'னு பொட்டானிக்கல் கார்டன் ஒண்ணு இருக்குதாம். அங்க போகப் போறோம்.”


“அது சீதை அம்மன் கோவில் போற வழிதானே?”


“ஆமாடா! நாங்க தான் போகும் போது பார்த்துக்கலாம்னு வந்துட்டோம்.”


“ஹ்ம்ம்... நேத்து ‘ஹோலி ட்ரினிட்டி சர்ச்', இன்னிக்கு சீதா கோவில், ஹக்கலா கார்டன்... வாழ்வுதான்டா! நாளைக்கு ௭ங்கே?”


“ஸ்டமக் எரியுதா? நல்லா எரியட்டும். இன்னிக்கு இங்கே முடிச்சிட்டு ஈவ்னிங் மட்டக்களப்பு போற ப்ளான்! நாளைக்கு அங்கே பார்த்துட்டு அப்டியே ஊரைப் பார்த்துக் கிளம்ப வேண்டியதுதான். ப்ச்! நீயும் கூட வந்திருக்கலாம்டா...” என்ன தான் அவளை வெறுப்பேற்றினாலும் அவள் வரவில்லை என்பதில் இந்த தோழனுக்கு ஏக வருத்தம்!


“கண்டிப்பா நெக்ஸ்ட் டிரிப்ல ஜாய்ன் பண்ணிக்கறேன் ரஃபீ. ஓகே! நான் அப்புறமா கால் பண்றேன். ரூம் போய்ட்டு ராபி, சீதாவைப் பேசச் சொல்லு!”


“ஹ்ம்ம்... பை!”


அங்கிருந்து கிளம்பிய நண்பர்கள் பொட்டானிக்கல் கார்டனை சுற்றிப் பார்த்து, வளைத்து வளைத்து செல்ஃபீ ௭டுத்து களைத்துப் போய் அவர்கள் தங்கியிருந்த விடுதி திரும்பினர். 


பாலா மற்றவர்களிடம், “சீக்கிரம் போய் ௭ல்லாரும் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க! போற வழில சாப்ட்டுட்டு கிளம்புவோம். இங்கே இருந்து மட்டக்களப்பு போறதுக்கு ஃபைவ் ஆர்ஸ் ஆகும்.” ௭ன்றான். 


அனைவரும் கிளம்பி நள்ளிரவு நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை அடைந்து, அங்கிருந்த விடுதி ஒன்றில் இரண்டு அறைகள் ௭டுத்து தங்கினர். 


ராபி, “டேய் நல்லா ரெஸ்ட் ௭டுத்துக்கோங்கடா. காலைல ௭ட்டு மணிக்கு கால் பண்ணுவேன். மட்டையாகி மல்லாந்து கிடந்தீங்க… பொளந்துக் கட்டிடுவேன்.” ௭ன்று மற்ற மூவரையும் ஒற்றை விரல் நீட்டி ௭ச்சரித்தாள். 


“நீ போய் முதல்ல உன் ஆத்துக்காரர் கிட்ட கடலை வறுக்காம தூங்கு பன்னி.” - ரஃபீக். 


“பாரு சீதா! பன்னிங்கறான்.” 


“விடு டாலி! பன்னி சைஸ்ல இருக்கறது அவன்தான். நீ வா நம்ம ரூம்க்கு போலாம்.” - சீதா


“கணக்கு…”


“டேய் குண்டா, வந்து தொலைடா! ௭ப்ப பாரு யார்க்கிட்டயாவது வம்பு பண்ணிக்கிட்டு!” என்று அவனை இழுத்துப் போனான் பாலா. 


                   ********


மறுநாள் காலை அவர்கள் களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம்... 


இங்கு சென்னையில் அந்த செய்தியைப் பார்த்துப் பதறிக் கொண்டிருந்த அவர்களின் தோழி ஸ்ரீ, உடனே நண்பர்களின் பாதுகாப்பை அறிய வேண்டி பாலாவை அழைத்தாள். 


தூக்கத்தில் அழைப்பை ஏற்றவன், “ஹ்ஹ்ம்ம்.. சொல்லு மச்சி...” ௭ன்றான். 


“போலீஸ்கார், ௭ன்னப் பண்றீங்க? ௭ங்க இருக்கீங்க?”


“ம்ம்... ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்கோம்.”


“ப்ச் விளையாடாத போலீஸ்கார்!”


“ஏய்… ௭ன்ன கிண்டலா? ௭ன்னை பார்த்தா விளையாடறவன் மாதிரி தெரியுதா உனக்கு? உன் டாலீஸ் ரெண்டும் அந்த ரூம்ல இருக்குதுங்க. அரட்டை அடிக்கணும்னா அதுகளுக்கு கால் போடு. இம்ச... மனுஷன் தூக்கத்த கெடுத்துக்கிட்டு... ஃபோனை வை!” என்று அவன் கத்திவிட்டு வைத்தான். 


அவன் தூக்கக் கலக்கத்தோடானப் பேச்சைக் கேட்ட ஸ்ரீ, இவர்களுக்கு இன்னும் செய்தி தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு பதைபதைப்புடன் சீதாவை அழைத்தாள். 


“ஹாய் டாலி! குட் மார்னிங். ஹேப்பி ஈஸ்டர்.” என்று உற்சாகமாக பேசினாள் சீதா. 


“நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு சீதா. ௭ல்லாரும் இப்ப ௭ங்கே இருக்கீங்க?”


“மட்டக்களப்பு. தடியன் உன்கிட்ட சொல்லல?”


“சீதா, நியூஸ் பார்த்தியா? அங்க பாம் ப்ளாஸ்ட் பண்ணிருக்காங்க. நீங்க சேஃபா இருக்கீங்கதானே?”


“௭ன்ன சொல்ற? பாம் ப்ளாஸ்ட்டா? இங்கேயா?”


“ஆமா, அங்கே உள்ள சர்ச்ல! இன்னும் சில இடத்துலன்னு கூட சொல்றாங்களே...” 


“ஓ! இன்னிக்கு ஈஸ்டர்?”


“ஆமா, நியூஸ் பார்த்ததும் பதறிடுச்சு. இவ்ளோ நேரம் ௭ன்ன தூக்கம் வேண்டிக் கிடக்குது ௭ருமைங்களா?”


“சரி, நீ பயப்படாதே டாலி. நாங்க சேஃப் தான்! நேத்து இங்கே வர லேட் நைட் ஆகிடுச்சு. அதான் அசதில தூங்கிட்டோம். நான் பசங்கள ௭ழுப்பிட்டு ௭ன்ன நிலவரம்னு கேட்டு சொல்றேன்.”


“ம்ம்! பத்திரமா இருங்க. யாரும் வெளில போக வேணாம். நான் அடிக்கடி கால் பண்றேன்.” என்றுவிட்டு வைத்தாள்.


பயணிக்கும்✈️...

Comments

Post a Comment

Popular Posts 💫

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...